<$BlogRSDUrl$>

பெண்களே அளவோடு பேசுங்கள் விசயத்தைப் பேசுங்கள் --------------------------------------------------------------------------- பார்வை முதலில் என்றால் அடுத்தது என்ன... கேட்டல். அதாவது பேசுதல். குறைவாகப் பேசுகிற பெண்களை ஆண்களுக்குப் பிடிக்கும். சிறிய விஷயத்தை வெகுநேரம் நீட்டி முழக்கிப் பேசுகிற பெண்களை ஆண்கள் கொஞ்சம் அவஸ்தையோடு பார்க்கிறார்கள். சரியான போர் என்று உள்ளுக்குள் ஒதுக்குகிறார்கள். இது எப்போ நிறுத்தும் என்று லேசான எரிச்சலோடு பார்க்கிறார்கள். ஏன், ஆண்களில் அதிகம் பேசுகிறவர்கள் இல்லையா? உண்டு. பெண்களின் பாதிப்பு அதிகமாக உள்ள ஆண், பெண்களால் மட்டுமே பேசுகிறான். இப்படிப் பேசுகிற ஆணை ஆண் கூட்டம் அதிகம் ஆதரிப்பதில்லை. என்ன தப்பு. என்ன பெரிய மகாபாபம். கூடுதலாய்ப் பேசினால்_தெளிவாகப் பேசினால் தவறா? எதிராளி என்ன நினைக்கிறான் என்று தெரியாமல் பேசுவது தவறு. முட்டாள்தனம். எதிரே இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது. தான் சொல்லித்தான் தெரியவேண்டும். நான் அவர்களுக்குப் புரிய வைப்பதற்குத்தான் பிறந்திருக்கிறேன் என்பதுபோல இடையறாது பேசிக் கொண்டிருந்தால் அது அறிவீனம். விஷயத்தை மிகச் சுருக்கமாகப் பேசி முடித்து விடுகிறபோது எதிராளிக்கு யோசனை செய்யவும், அவசியமெனில் கேள்வி கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. எதிரே இருப்பவர் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் ஓலைப்பாயில் ஏதோ பெய்தது போல ஒரு சலசலப்பு சத்தத்தோடு பேசுவது அபத்தம். பேச விருப்பப்படுகிற பெண்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இது நம்மூரில் மட்டுமல்ல. வெளிதேசத்திலும் பல பேர் சொல்லுகிற குறையாக, பல கதைகளில் செய்யப்படும் கேலியாக இருக்கிறது. வெளியூர் நாவல்களில் நறுக்கென்று நாலு வார்த்தை பேசும் கதாநாயகிதான் எல்லோராலும் கவரப்படுகிறாள். எதனால் இந்த பேசுகிற ஆர்வம்? எங்கே தவறு? நான் இதை ப்ரைமரி ஸ்கூல் டீச்சர் புத்தி என்று சொல்வேன். பள்ளிக்கூட குழந்தைக்கு புரியவைப்பதற்காக ஒரு டீச்சர் மறுபடி மறுபடி சொல்லுகிறதுபோலவே வளர்ந்த தெளிவான மனிதர்களிடமும் அந்த ப்ரைமரி ஸ்கூல் டீச்சர் பேச ஆரம்பித்தால் எத்தனை மடத்தனமாக இருக்குமோ, அத்தனை மடத்தனம் அப்படிப் பேசுவது. இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி எங்கேனும் வெளியூர் பயணம் போய்விட்டு வந்தால் தாவி உடனே அடுத்த போர்ஷனுக்கு ஓடிவிடுவாள். அடுக்கு மாடியில் ஸ்நேகிதர்களை தேடிக்கொண்டுபோய், தான் எங்கெல்லாம் பயணப்பட்டோம்... எப்படிப் பயணப்பட்டோம் என்பதை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை, ‘இந்தப் புடவை உடுத்திண்டேன்... இந்த புடவைக்கு இந்த ஜாக்கெட் மேச்சா இருக்கும்னு இந்த மேச்சிங் ஜாக்கெட்டை போட்டுண்டு, அதுக்கு மேல இந்த நகைய போட்டுண்டு, கையில பைய எடுத்துண்டு... இந்த பஸ்ஸை பிடிச்சு இங்க போய் இறங்கி அங்கேயிருந்து இந்த வழியா நடந்து அங்க இருக்கற ஒருத்தரை போய் பார்த்து... அவங்க வீட்டு விஷயங்களைப் பேசி காபி குடிச்சுட்டு அங்கேயிருந்து கோயிலுக்குப் போய் அந்தக் கோயில்ல என்ன விசேஷம்னு கேட்டு, அவங்க வந்து இந்த கோயில்ல விசேஷம் என்னன்னா..’ என்று பேசிக் கொண்டிருப்பார். ஒரு விஷயத்தை அனுபவிக்கிற போதே அதை மற்றவருக்கு சொல்லுகின்ற ஒரு பரபரப்பு அவருக்குள் எப்போதும் இருக்கும். எனவே, அங்கு விஷயத்தை அனுபவிப்பது மிகமிகக் குறைந்து போகும். அதிகம் பேசுகிறவர்கள் செயல்திறனில் மட்டமாகத்தான் இருப்பார்கள். சிலரிடம் வேறுவிதமான பேச்சு இருக்கும். நான் அவகிட்ட, வேண்டாண்டி இந்த லவ்வெல்லாம் விட்டுடு அப்படின்னு சொன்னேன். அது என் பேச்சு கேட்காம அவகிட்டபோய் இவ இப்படி லவ்வெல்லாம் வேண்டாம்னு சொல்றான்னு அவகிட்ட சொன்னா. அவ உடனே இன்னொருத்திகிட்டப் போய் இவா ரெண்டு பேரும் லவ்பத்தி பேசறாடி, ஆபீஸ்ல உட்கார்ந்துன்னு சொன்னா அங்கேயிருந்து நேரா எங்கிட்ட வந்து நீ இப்படி சொன்னியாமேன்னு அவ கேட்க, நான் வந்து ஏண்டி நான் சொன்னதை அவகிட்ட சொன்னேன்னு சொல்ல, கிட்டத்தட்ட தலையை சுற்றித் தரையில் அடிக்கின்ற ஒரு பேச்சு இது. இதற்கு முடிவே கிடையாது. ஓயவே ஓயாது. இந்தப் பேச்சு துணை வெறுப்பேற்றுகிறது. இப்படி அதிகம் பேசுகிறவர்கள் அதிகம் பேசுவதற்காகவே குறைசொல்லவும் தயங்குவதில்லை. நாலு மணிக்கு பீச்சுக்கு வரேன்னு சொல்லிட்டு நாலேமுக்காலுக்கு வந்தீங்க. எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா. மூணு பேர் வந்து எங்க போகணும்னு கேட்டான். ஒரு ஆட்டோரிக்ஷாக்காரன் போக முடியாதுன்னு விடாப்பிடியா அங்கயே நிக்கறான். நான் நடந்துடலாமான்னு கூட நினைச்சேன். நமக்குத் தெரிஞ்ச மாங்கா கடைக்காரன் இருக்கானேன்னு அங்க போய் உட்கார்ந்துகிட்டேன். அங்க போய் உட்கார்ந்தா அவன் கேள்வி கேட்கறான். நீ யார்... உன் கூட ஒருத்தர் வராரே அவர் யாரு. நாலு மணின்னா மூணேமுக்காலுக்கே வரவேணாம்? எனக்கு இன்னிக்கு மூடே போயிடுச்சு. உங்களைப் பார்க்கவே பிடிக்கலை. ஒரு மாலை நேரத்தை வெகு எளிதாகப் பேசிப்பேசி பாழ் செய்வார்கள். குறை சொல்லி மனம் நோகச் செய்வார்கள். இந்தப் பெண்களை ஆண் மிகுந்த எரிச்சலோடு பார்க்கிறான். அப்படியானால் பேச்சு எவ்வளவு இருக்கவேண்டும். ‘‘ஏங்க மேடம்... உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குங்க. நான் உங்களை லவ் பண்றேன். நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாங்களா.’’ இப்படியரு விஷயம் உங்கள் முன்னே பரப்பப்பட்டதெனில் என்ன செய்வீர்கள். கோபத்தில் கத்தாதீர்கள். உங்களைக் காதலிப்பதாகச் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. மறுக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. யாரைப் பார்த்து லவ் யூன்ற என்று ஆரம்பித்தால் அது பேச்சை அதிகம் வளர்க்கும். அந்தப் பேச்சேகூட உங்களை சிக்கலில் கொண்டு போய் விடும். ‘‘நீங்க கேட்டதுல ஒண்ணும் தப்பில்லைங்க. என்னைப்பத்தி ஏதோ தெரிஞ்சு வச்சுருக்கீங்க. அதனால கேட்டீங்க இல்ல. உங்களைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது. தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் இதுவரைக்கும் வரலை. உங்களைத் தெரிஞ்சுக்கணுமான்னு நான் முடிவு பண்றதுக்கே ரெண்டு மூணு வாரம் ஆகும். பின்னால பார்ப்போம்’’ பிறகு எங்கு பார்த்தாலும் ஒரு குட்மார்னிங். ஒரு மெல்லியப் புன்னகை. அலுவலக சம்பந்தமானப் பேச்சு. எவ்வளவு அவசியமோ அதற்குண்டான பதில்கள் என்று இருந்தீர்கள் என்றால் உங்கள் மதிப்பு வெகு நிச்சயமாய் ஆண்மனதில் வெகு உயர்வாய் வளரும். ‘‘அவங்க ஏதாவது என்னைப் பத்தி உங்ககிட்ட கேட்டாங்களா?’’ ‘‘இல்லியே. கேட்கலையே. ஏன் கேட்கறீங்க?’’ ‘‘நான் அவங்கிட்ட லவ்யூன்னு சொன்னேன்’’ ‘‘அப்படியா... அப்படியா சொன்ன? அந்தப் பொண்ணு ஒண்ணும் எங்கிட்ட பேசலையே. அவ ரொம்ப அழுத்தக்காரிப்பா. ஜாக்கிரதை.’’ ஒரு பெண்ணே ஒரு பெண்ணைப் பாராட்டுகின்ற இடம் எது தெரியுமா. குறைவாகப் பேசுதல். சலசலக்கிற பெண்ணை வெகு எளிதாக ஆணி அடித்து மாட்டிவிட்டுவிடுவார்கள். ‘‘அந்தப் பொண்ணையா லவ் பண்ற? அவங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை. நேத்து கார்த்தால கூட என்னமோ சொல்லி அழுதுகிட்டிருந்தா. அவ தங்கச்சி ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் பண்ணிக்கிச்சு. அவங்க தம்பிக்கு படிப்பு வரலை. பீடி கம்பெனியில டிரைவரா வேலை பார்க்கறான். வீட்டு மேல பேங்க்ல வாங்கின கடன் அடையாம பேங்க்ல வந்து நோட்டீஸ் ஒட்டிட்டுப் போயிட்டாங்க. ஏலத்துக்கு வரப்போகுது வீடு.’’ இப்படி அவளைப்பற்றி அடுக்கடுக்காக ஒருவன் சொல்ல வேண்டுமென்றால் அந்த சம்பந்தப்பட்ட பெண் எவ்வளவு பேசியிருக்க வேண்டும். இது தேவைதானா? உள்ளங்கையை மூடி வைத்திருக்க பல பெண்களுக்குத் தெரிவதே இல்லை. எதிரே இருப்பவருக்கு அதுவொரு பயத்தைக் கொடுக்கும் என்று அவர்களுக்குப் புரிவதே இல்லை. அதிகம் பேசுகிற ஆண்களையும் பெண்கள் நம்புவதில்லை. பேச்சு குறையும்போது அடுத்தபடி என்ன செய்ய வேண்டுமென்ற சிந்தனை தெளிவாக ஓடுகிறது. இல்லையெனில் சிந்தனை முழுவதும் பேசுவதிலேயே செலவழிந்துவிடுகிறது. ஒரு மாடியில் நான்கு வாசல். நான்கு போர்ஷன்கள். தன் வீட்டு வாசலில் நின்று எதிர்வீட்டு வாசலைப்பார்த்து, ‘இன்னிக்கு என்னடி சமையல்?’ என்று முற்றி முதிர்ந்தவள் கேட்க, ‘‘பருப்பு அரைச்சுவிட்டு சாம்பார் பண்ணேன் மாமி. கத்தரிக்காயை நறுக்கிக் கொடுத்தார். கொஞ்சம் குழம்புல போட்டு கத்தரிக்காயை கறிக்கு வச்சுண்டேன். தக்காளி ரசம் பண்ணினேன். கொஞ்சம் உப்பு தூக்கலா போயிடுத்து. துணியில சாதத்தை போட்டு மூட்டையா கட்டி கொஞ்ச நேரம் உள்ளவச்சு எடுத்தேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. காலையில இட்லி டிபன். சாயந்திரத்துக்கு இதே இட்லியை உப்புமாவா பண்ணிடலாமான்னு நினைச்சுண்டிருக்கேன். ராத்திரிக்கு இருக்கவே இருக்கு சாதம். இல்லைன்னா சப்பாத்தி. உங்க வீட்ல என்ன சமையல் மாமி?’’ இப்போது அந்த மாமி ஆரம்பிப்பாள். நெல்முனையளவும் பிரயோஜனமில்லாத, வெறுமனே பொழுதை கொல்வதற்காக பேசுகிற பேச்சுக்கள் இவை. பொழுதைக் கொல்வதற்காக இப்படி பேச்சுக்களில் ஈடுபடுகிறபொழுது வீட்டினுடைய நிர்வாகத்தின் திறன் வெகுநிச்சயமாய் குறைகிறது. வீட்டின் அலமாரியை ஒழிக்கவோ, பீரோவை சுத்தம் செய்யவோ, சமையல் அறையை நன்கு கழுவி வைக்கவோ, பாத்ரூமை மணக்கச் செய்யவோ முன்வராது ஒன்றரை மணி நேரம், இரண்டு மணிநேரம் நின்று பேசுவதிலேயே காலம் போய்விடுகிறது. ஏன் பேசாம இருக்கணும். பேசாம இருந்தா எனக்கு தலையே வெடிச்சுடும் என்று சொல்லும் பெண்களை நான் அறிவேன். இது ஒரு நோய். வெகுநிச்சயமாக மிக மோசமான நோய். சலசலத்துக் கொண்டே இருக்கின்ற வியாதி. இந்த வியாதியை உடைய பெண்மணி தன் பீரோவை வருடத்திற்கொருமுறை சுத்தம் செய்தால் மிகப்பெரிய விஷயம். மாதம் ஒருமுறைதான் பாத்ரூமை கழுவ வேண்டும் என்ற நியதியுள்ளவர்கள் அபத்தமானவர்கள். கழிப்பிடங்கள், தினந்தோறும் சுத்தம் செய்யப்படவேண்டியவை. வீடு தினமும் பெருக்கி ஈரத் துணியால் மெழுகப்படவேண்டும். அலமாரிகள் மாதத்திற்கு இரண்டுமுறை சுத்தம் செய்யப்பட வேண்டும். சமையலறையை வாரத்திற்கு ஒரு தடவை புரட்டி நிமிர்த்த வேண்டும். இது அலுவலக வேலையல்ல. உன் வேலை. நம் வீடு. நம் வீட்டை நாம்தானே சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். நம்முடைய வீட்டின் உட்புறத்தை நாறடித்துக் கொண்டு வெளியே மணக்க மணக்க பேசுவதில் என்ன பயன். இதுதான் அலுவலகத்திற்கும் உண்டான விதி. யாரோ சொல்லியிருக்கிறார்களே என்று தலையெழுத்தே என்று செய்யும் வேலையல்ல. அது நம் வேலை. நம்முடைய வீட்டு வேலையைப் போன்றே அவ்வளவு பிரியமாய்ச் செய்யவேண்டிய வேலை. வேலையில் ருசி ஏற்படுத்திக்கொண்டால் பேசுவதில் ருசி தானாகப் போய்விடும். தனிமையில் இருக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் சலசலப்பது அறவே நின்றுவிடும். பேசுவதில் திறன் மிக நன்றாக இருக்கும். ‘‘மூணு வாரம் ஆச்சுங்களே. லவ்பத்தி ஒண்ணுமே சொல்லலீங்களே’’ ‘‘எங்க வீட்ல சந்தோஷப்பட்டாங்க. ஆனா, வீட்டுமேல வாங்கின கடன் இன்னும் லட்சத்து நாற்பதாயிரம் ரூபா இருக்கும்மா. அதை இரண்டு வருஷத்துல அடைக்கணும். அதுக்கப்புறம் ஒரு மூணு வருஷம் நீ வேலை செய்தாதான் நான் உன் கல்யாணத்துக்குன்னு கொஞ்சம் நகைபண்ணிப் போடமுடியும். என்னதான் காதல் கல்யாணம்னாலும் நான் இருவது பவுனாவது போடவேணாமா? அதனால இப்போதைக்கு உன் கல்யாணத்தைப்பத்தி நான் யோசனை பண்ணலைம்மா அப்படின்னுட்டாங்க. அப்பா யோசனை பண்ணாதபோது நானும் யோசனை பண்ணலை.’’ ‘‘அப்போ என்னா சொல்றீங்க?’’ ‘‘எனக்கு கொடுப்பினை இல்லை. அவ்ளோதான்.’’ ‘‘அஞ்சு வருஷம் வெயிட் பண்ணட்டுங்களா?’’ ‘‘எங்க வெயிட் பண்றேன்னு சொல்றீங்க. இதே ஆபீஸ்லயா? அல்லது பார்க்ல, பீச்சுல வெயிட் பண்றேன்னு சொல்றீங்களா? எங்கயும் நான் வரமுடியாதுங்க. அஞ்சு வருஷம் கல்யாணம் இல்லைன்னு ஆயிப்போச்சு. எம்.ஏ. படிக்கலாம்னு இருக்கேன். மாலை வகுப்புக்குப் போகணும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை லைப்ரரி பக்கம் போகணும். எம்.ஏ. படிச்சிட்டா ஆபீஸராகரதுக்கு வாய்ப்பு இருக்கு. அதான் யோசிக்கறேன்.’’ எதிர்ப்பக்கம் நொறுங்கிப்போகும். இந்தத் தெளிவான பேச்சைக் கண்டு வாயடைத்துப் போகும். ‘‘வேற வழியே இல்லைங்களா?’’ கெஞ்சலாகக் கேட்கும். ‘‘ஏன் இல்லாத. இருக்கு’’ ‘‘என்ன வழிங்க?’’ ‘‘நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்க தகுதிக்கு நான் ஒருபடி மட்டம்தான். கொஞ்சம் பொறுமையா இருங்க. நிச்சயமா உங்களுக்கு அடுத்த மாசத்துக்குள்ள கல்யாணம் ஆயிடும்னு தோணுது. லிஸ்ட் போடறது, பத்திரிகை கொடுக்கறது, காசு வசூல் பண்றதெல்லாம் நான் பார்த்துக்கறேன். பொண்ணு வீட்ல பீரோ வேணாம்னு சொல்லுங்க. இங்க நல்ல இரும்பு பீரோ நாங்க வாங்கிதரோம். எங்க நினைவா காலம் காலமா இருக்கும்.’’ இவ்வளவு பெரிய பிரச்னைக்கு இந்த சில வார்த்தைகள் போதும். பேசாமல் இருப்பதால் என்ன லாபம்? உணவு பரிமாறுதல் என்கிற மிகச் சாதாரண விஷயத்தை ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் செய்து பாருங்கள். அப்போது, பேசாதிருப்பதன் சுவை தெரியும். உணவு உண்கிற மூன்று பேர் முகத்தைப் பார்த்து அவரவர்க்கு என்ன தேவை என்பதைக் கூர்மையாக கவனித்து நீங்கள் பரிமாறுங்கள். சாப்பிடுபவர் முகத்தில் மிகப்பெரிய திருப்தி இருக்கும். இடையறாது சலசலத்துக் கொண்டிருக்கும்போது யாருக்கு என்ன ஊற்றினோம், எவருக்கு என்ன தேவை என்று தெரியாமல் கைகள் அனிச்சையாய் இருக்கின்றன. வேண்டுமா என்று கேட்காமலேயே கறியும், கூட்டும் பரிமாறப்படுகிறபோது சோறு சாப்பிடுபவர் எரிச்சலடைகிறார். இது துப்புகெட்ட காரியம். அவசரக் குடுக்கைத்தனமான காரியம். வந்தமா, ஜாலியா நாலு வார்த்தை பேசினோமான்னு இல்லாம உம்முனு உட்கார்ந்திருக்கியே... இதுக்குத்தான் இந்த பாலகுமாரனை படிக்காதன்னு சொல்றேன். அவனெல்லாம் கிறுக்கணுங்கடி. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் உரக்க சத்தம் போடலாம். உம்முன்னு இல்லீங்க. இப்ப வர கோகோ கோலா பாட்டில்ல பூச்சி இருக்குன்னு சொன்னாங்களே... இப்போ வாங்கித் தின்ன சுண்டல்ல என்னெல்லாம் இருக்கும் அப்படின்னு யோசிக்கிறேன். நேத்து திண்ண மசால் தோசையில எப்பேர்ப்பட்ட விஷயமெல்லாம் கலந்திருக்கும் அப்படின்னு சிந்தனை பண்ணிக்கிட்டிருக்கேன். கேலியாகப் பேசத்துவங்குங்கள். விருப்பமுள்ளோர் தொடரட்டும். நீங்கள் கேட்டுக்கொண்டிருங்கள். அல்லது உண்மையிலேயே சிந்தனையில் ஆசையுள்ளவராக இருந்தால் அதைப்பற்றி மௌனமாக சிந்திக்கட்டும். நீங்களும் அந்த மௌனத்திற்குத் துணையாக இருங்கள். செயல்திறன் அதிகரிப்பது மட்டுமல்ல. மௌனத்தின் மூலம் அடர்த்தியான நட்பை, அன்பை பரிமாறிக்கொள்ள முடியும். ஒரு தொடலில் ஒரு பார்வையில் அந்த ஸ்நேகம், அன்பு புரிபட்டுப்போய்விடும். வித்யாசுப்ரமணியம் என்கிற ஒரு எழுத்தாளர். அவருடைய கணவருக்கு மூளை ஆபரேஷன். சற்று கடினமான அறுவை சிகிச்சை. சென்னை புறநகரின் கோடியில் இருக்கின்ற ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் நடக்கிறது. நான் அங்கு போன நேரம் திரு. சுப்ரமணியத்தை உள்ளே அழைத்துப் போய்விட்டார்கள். வித்யா சுப்ரமணியம் மட்டும் தனியே உட்கார்ந்திருந்தார். அவரது உறவுகள் பல்வேறு வேலையாக, பல்வேறு திசைகளுக்குப் போயிருந்தார்கள். நான் வந்ததும் என்ன உள்ளே நடக்கிறது என்பதை சில வாக்கியங்களில் சொன்னார். மேற்கொண்டு பேசுவதற்கு எதுவுமில்லை என்று எனக்குத் தெரிந்தது. மாலை நேரம். விட்டுவிட்டு மறுபடியும் நகருக்கு வரவும் எனக்கு மனமில்லை. மூன்று மணி நேரம் அவருக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தேன். ஆஸ்பத்திரி வராண்டாவில் தனித்தனியான நாற்காலிகளில் வெறுமே தோட்டத்தைப் பார்த்துக்கொண்டு நாங்கள் இருவரும் உட்கார்ந்து கொண்டிருந்தோம். உள்ளுக்குள் பிரார்த்தனை உருகி வழிந்து ஓடியது. சுப்ரமணியத்தை வெளியே கொண்டு வருகிறார்கள் என்று சொன்னதும் நாங்கள் பரபரப்பாய் ஓடினோம். சுப்ரமணியத்திற்கு மயக்கம் தெளிவிக்கின்ற முயற்சிகளை தாதிகளும், டாக்டர்களும் மேற்கொண்டிருந்தார்கள். முயற்சிகள் எங்கள் தவிப்பை அதிகப்படுத்தின. தனது கணவர் பேசவேண்டுமே என்கிற பரபரப்பில், தவிப்பில் வித்யா சுப்ரமணியம் சிக்கிக் கொண்டிருந்தார். எந்த நேரமும் அவர் கதறி உட்கார்ந்து விடலாம் என்பதால் நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனாலும், முழுபலத்துடன் கணவருக்கு எதிரே எதுவும் செய்து விடலாகாது என்று அந்தப் பெண்மணி தைரியமாகத் தாங்கிக் கொண்டிருந்தார். மெல்ல திரு சுப்ரமணியம் கண்விழித்தார். மனைவியை ஏறிட்டுப் பார்த்து புன்னகை செய்தார். பிறகு என் பக்கம் பார்வை திருப்பினார். நான் வந்தது டாக்டருக்கு சௌகரியமாகப் போயிற்று. ‘‘இது உங்க வொய்ஃப். இதை சொல்லிடுவீங்க. அவர் யாரு. அவர் பேர் என்ன சொல்லுங்க பார்க்கலாம்?’’ டாக்டர், என்னைச் சுட்டிக் காட்டினார். திரு. சுப்ரமணியம் தெளிவாக இருக்கிறாரா. அவர் மூளை சரிவர வேலை செய்கிறதா என்று பார்க்க டாக்டர் இந்த கேள்வி கேட்டார். சுப்ரமணியம் அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். எங்கள் தவிப்பு அதிகமாகியது. மெல்ல உதடுபிரித்து பாலகுமாரன் என்று அவர் சொல்ல, அடிவயிற்றிலிருந்து குளுமை எழுந்து நெஞ்சு முழுவதும் நனைய வைத்தது. வித்யா சுப்ரமணியம் என்னைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார். அதற்கு ஆயிரம்கோடி அர்த்தங்கள். அது நன்றி சொல்கிற விஷயமில்லை. தேங்க்யூ இல்லை அது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட மிகக்கனமாக மிகத் தோழமையான மிகத் தெளிவான ஒரு உணர்வு. வெகுநாள் கழித்து வித்யா சுப்ரமணியம் தொலைபேசியில் என்னோடு பேசும்போது அன்னிக்கு ரெண்டுபேரும் பேசாம உட்கார்ந்திருந்தோமே, அதுதான் பெரிய பலம் என்று சொன்னார். குறைவாகப் பேசுகிறபோது மனம் பிரச்னையை யோசிக்கிறது. பிரச்னையின் தீவிரம் தெரியும்போது உள்ளுக்குள் இயல்பாக ஒரு பிரார்த்தனை ஓடுகிறது. பிரார்த்தனை இடையறாது தெளிவாக ஓடுகிறபோது அதற்குண்டான பலன்களும் நல்லபடியாக அமைகின்றன. இது ஆழ்மனதின் செயல்திறன். பேசுவது குறைந்தால் வெகு நிச்சயமாக செயல்திறன் அதிகமாகும். செயல்திறன் அதிகமான பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிகம் பேசுகிற பெண்களிடம் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்வதும் முடியாது போகும். பெரும் தயக்கம் ஏற்படும். மனைவியிடமே ரகசியம் பரிமாறிக்கொள்ள முடியாதென்றால் இதைவிட அவலமான குடித்தனம் ஏதும் உண்டா? குறைவாகப் பேசுதல், குறைவாக உண்ணுதல் என்கிற விஷயம் யாருக்கும் புரியவில்லை. பேச்சு குறைந்தாலே உணவு குறையும். அதிகம் கத்திப் பேசுகிறவர்கள் அள்ளி அள்ளித் தின்கிறார்கள். அதிகம் அள்ளித் தின்கிறவர்கள் அடித்துப் போட்டது போல் தூங்குகிறார்கள். இரவு பகல் தெரியாமல் தூங்குகிறார்கள். ஆனால் பலபேருக்கு இது புரிவதே இல்லை. பேச்சு ஒரு போதையான விஷயம். அது ஒரு மாதிரி லயம். பேசிப்பேசிப் பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் இருந்ததால் கற்பனையாகப் பேசி பொய்கள் பலச் சொல்லி ஒன்றை ஒன்பதாக்கி பேனைப் பெருமாளாக்கி பேசுகிற புத்தி வந்துவிடுகிறது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org