Mittwoch, Februar 25, 2004
சந்தேகம் என்றும் பொல்லாதது
----------------------------------------
ஒரு மனிதனிடம் காணப்படுகின்ற பல்வேறுபட்ட தீய குணங்களுள் ஒன்றாகவே சந்தேகம் எனும் குணமும் காணப்படுகின்றது. அன்றைய ஆதிநாளிலிருந்து இன்றுவரை இச்சந்தேகமானது மனிதனைத் துரத்திக் கொண்டிருக்கும் ஒரு விசர் நாயைப் போல இருந்து வருகின்றது என்றால் அதனை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு என ஒரு கவிஞன் பாடியுள்ளான். இது எந்தளவு உண்மை என்பதை அன்றாடம் எம் சூழலைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். கணவன் மனைவி யாரை எடுத்தாலும் சந்தேகம், காதலன் காதலியை நோக்கும்போது சந்தேகம். நண்பர்களைப் பார்த்தால் சந்தேகம் இப்படி எடுத்ததற்கெல்லாம் எங்கும், எதிலும் சந்தேக மயமாகவே காணப்படுகின்றது.
இச்சந்தேகத்தால் எத்தனையோ, குடும்பங்கள் பிரிந்து குட்டிச்சுவராகி, நடுவீதிக்கு வந்துள்ளன. எத்தனை பிள்ளைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். எத்தனை யுவதிகள் காதல் வலையில் வீழ்ந்து பின் இக்கொடிய நோயினால் முகவரியில்லாத குழந்தைகளுடன் முந்தானைகளை தொட்டிலாக்கிக் கொண்டு உலா வருகின்றனர். அதுமட்டுமா? இளைஞர், யுவதிகள் சந்தேகத்தால் தங்களையே அழித்துக்கொள்ளும் நிலைகூட இன்று எம்மத்தியில் இருந்து வருகின்றது என்றால் அது பொய்யாகாது.
பொய், தவறு, தன்னலம், ஆண், பெண் பாராத நட்பிற்குள் கூட இது இல்லாமல் இல்லை. பல ஆண்டுகள் ஆடிப்பாடி வாழ்வின் அனைத்து விடயங்களையும் பகிர்ந்து உயிராய் வாழும் நட்பை ஒரு சில நிமிடங்களில் ஏற்படும் சந்தேகம், சண்டை, சச்சரவு ஏன்? கொலை செய்யுமளவுக்குக்கூட இட்டுச் செல்கின்றது என்பது முற்றிலும் உண்மையான கூற்றாகவே காணப்படுகின்றது. இன்னுமொரு விடயம் இச்சந்தேகமானது படிக்காதவர்களிடம் மாத்திரம் இருந்தால் அது அவர்களுடைய மடைமை என ஏற்றுக்கொள்ள முடியும். இதற்கு மாற்றமாக இன்று படித்த நன்கு உலகையறிந்த அறிவாளிகளே இப்போதைக்கு அடிமையாகி சந்தேகவாதிகளாய் இருந்து வருகின்றனர். இதை நினைக்கும் பொழுதுதான் கவலையாய் உள்ளது.
இச்சந்தேகத்தை இலகுவில் விட்டுவிட முடியாது. காரணம் இதன் பிறப்பு இன்றைய நவீனகாலமல்ல. அன்றைய நாளிலும் இச்சந்தேகம் மனிதனை ஆட்டிப்படைத்துள்ளது. உதாரணமாக இராமனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் விளைவே மனைவி சீதை தீக்குளிக்க நேரிட்டமை. ஆகவே இதனை இலகுவில் விட்டுவிலக முடியாது.
இச்சந்தேக நோயைவிட்டு நீங்க வேண்டுமானால், நம் பார்வையினை தூய முறையில் ஏனையவர்களின் மீது செலுத்த வேண்டும். நாம் எப்படி அனைவருடனும் மகிழ்ச்சியாகப் பேசி அளவலாவ வேண்டும் என எண்ணுகின்றோமோ அது போலவே, நம் மனைவி மக்கள், உடன்பிறப்புக்கள், காதலி, காதலன், நண்பர்கள், பெற்றோர்கள் அனைவரும் பேசிப்பழக நினைப்பார்கள் என எண்ணினால் இச்சந்தேகத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிடலாம். அப்புறம் என்ன? சந்தோஷம் வாழ்வில் கொடிகட்டிப் பறக்கும். ஆகவே சந்தேகத்தை விட்டு நிம்மதி நிறைந்த சந்தோஷமான வாழ்வை வாழ முயற்சிப்போம்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
உடற்பயிற்சி இல்லாத உடம்பு நோய்களின் உறைவிடம்
------------------------------------------------------------------------
உடற்பயிற்சி இல்லாமல் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையே இல்லை. நீரிழிவால் அவதிப்படுபவர்களுக்கு உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் மட்டுமே சில ஆண்டுகள் வரை ,சிகிச்சைக்குப் போதுமானதாக இருக்கலாம்.
உடற்பயிற்சி என்பது கனமான பொருட்களை தூக்குவது. பல மீற்றர் ஓடுவது. நீளம் தாண்டுவது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.
தினமும் அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் நடந்தாலே போதும் . நீரிழிவு நோய் மாயமாகும். நீங்கள் வீட்டில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்பவராக இருந்தால் உடற்பயிற்சி தேவைப்படாது. சமையல்,வீட்டை சுத்தம் செய்வது, தண்ணீர் சுமப்பது...போன்ற எல்லாமே நல்ல உடற்பயிற்சிகள் தான். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவதும், உறங்குவதுமாக இருக்கும் பெண்களுக்குதான் உடற் பயிற்சி அவசியம்.
சிறுசிறு உடற்பயிற்சியாலும் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ?
நமது உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் இன்சுலின் ஹோமோனின் செயல்திறனை உடற்பயிற்சி அதிகரிக்கும் இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
உடல் எடை கட்டுக்கடங்கி இருக்கும்.
ரத்தத்தில் கொழுப்புச் சத்து குறையும். உயர் ரத்த அழுத்தம் குறையும்.ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
எலும்பு, தேய்வு மூட்டு நோய்கள் போன்ற தொல்லைகளை உடற்பயிற்சி குறைக்கவல்லது.
உடற்பயிற்சி சோம்பலை விரட்டுகிறது. சர்க்கரை நோயாளிகளை இளமையுடன் வைத்திருக்க உடற்பயிற்சி மிகவும் உதவுகிறது.
உடற்பயிற்சியினால் மனஅழுத்தம் குறைவதால் மனநலம் மேம்படுவதை கண்கூடாக காணலாம்.
தினமும் 45 நிமிடங்கள் நடப்பது அனைவருக்கும் பொருத்தமான எளிய உடற்பயிற்சியாகும்.
உடற்பயிற்சிக்கு நேரமில்லை என்று கூறுபவர்கள் தொலைக்காட்சிப் பெட்டி முன்பு எவ்வளவு நேரம் அமர்ந்திருக்கின்றோம் என்று சிந்திக்க வேண்டும். நோயாளிகளுக்கான உடற்பயிற்சி நேரத்தை தொலைக்காட்சிப் பெட்டி விழுங்கிவிடுவது வருந்தத்தக்கது. மன உறுதியால் மட்டுமே இதை வெல்ல முடியும். உடற்பயிற்சி என்பது சர்க்கரை நோயின் சிகிச்சையின் ஒரு பகுதி என்பது மிகப் பெரிய உண்மையாகும். இதைப் போலவே உடற்பயிற்சியினால் சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கவோ தள்ளிப்போடவோ முடியும் என்பது உண்மை.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்