<$BlogRSDUrl$>

பெற்றமனம்

என்னால இனிமே உங்க அம்மா வோட போராட முடியாதுங்க. ஏன் கமலா? காலையிலேயே இப்படி சத்தம் போடற என்றான் குமார். பின்ன என்னங்க. காலையில பால் வாங்க போனவங்க 8 மணியாச்சு இன்னும் வரலை. நீங்க பாட்டுக்கு ஹோட்டலில் சாப்பிட்டுட்டு போயிடு வீங்க. பிரவீணாவுக்கு சாப்பிடதுக்கு பால் குடுக்க முடியுதா?. சரி. வயசானவங்க நாம் தான் அனுசரிச்சு போகணும். ஏன்? சொல்ல மாட்டீங்க. உங்களை கல்யாணம் செஞ்ச காலத்திலிருந்து நான் அனுசரிச்சு போகலையா. இனியும் என்னால முடியாது. ஒண்ணு உங்க அம்மாவை நான் ஏற்கனவே சொன்ன மாதிரி காப்பகத்தில் சேர்த்துடுங்க. இல்ல நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிடுறேன். எப்படி கமலா நான் அவங்களை காப்பகத்தில கொண்டு போய் சேர்க்கிறது. அவங்களுக்கு நான் மட்டும் தான் இருக்கிறேன். புரிஞ்சுக்கோ. நீங்க என்ன சொன்னாலும் சரிங்க. இன்னைக்கு இதுக்கு எனக்கு ஒரு தெளிவான முடிவு தெரிஞ்சாகனும். கமலா, அம்மா வராங்க. நாம அப்புறமா பேசலாம். முடியாது. வாங்க காலையில் 6 மணிக்கு அரை லிட்டர் பால் வாங்க போன ஆளு. 8.30 ஆக போகுது. கமலா நான் சொல்லிக்கிட்டு..... நீங்க கொஞ்சம் பேசாம இருக்கீங்களா. வயசானவங்கன்னு பார்த்தா ரொம்பவும் தான். இல்லைமா. பால் வாங்கிகிட்டு வரும் போது பக்கத்து தெரு விசாலாட்சியை பார்த்தேன். பேசிகிட்டு இருந்ததுல நேரம் போனது தெரியலைமா. மன்னிச்சுக்க என்றார் கற்பகம். அம்மா.... அவளும் தான் என்ன பண்ணுவா. எல்லாருக்கும் டிபன் செஞ்சுட்டு அவ வேலைக்கு புறப்படறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடுது. நீயும் அதுக்கு தகுந்தாற் போல நடந்துக்கமா. சரிப்பா. கோபப்படாத இனிமே இது போல நடக்காது. அதெல்லாம் முடியாதுங்க. நான் சொன்னதுக்கு நீங்க சம்மதிக்கலாட்டி நான் எங்க அம்மா வீட்டுக்கு போறது நிச்சயம். டேய் குமார் என்னடா. உன் பொண்டாட்டி அவங்க அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்றா. எல்லாம் உன்னால்தான்மா. வீட்டுலயும் நிம்மதியில்லை. வெளியிலேயும் நிம்மதியில்ல. சே... என்ன வாழ்க்கையோ? உன்னால நான் தற்கொலை தான்மா செஞ்சுக்க போறேன். அப்பதான் நீ நிம்மதியா இருக்க போற. டேய்... என்னடா என்னன்னவோ பேசற. நான் என்னடா அப்படி பெரிய தப்பை செஞ்சுட்டேன். ஆஹா... ஒண்ணுமே செய்யலை பாருங்க. நீங்க எதுதான் செய்யலை. நான் இதுக்கும் மேல உங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க முடியாது. நானும் என் பொண்ணும் எங்க அம்மா வீட்டுக்கு போறோம். நீங்கலே நிம்மதியா இருங்க என்ற படி வேகமாக அறைக்குள் நுழைந்தாள் கமலா. ஏய்... கமலா இங்க பாரு.... நான் சொல்றதை கேளேன். முடியாதுங்க... உங்க அம்மாவை காப்பகத்தில சேருங்க. இல்லாட்டி என்னையும், என் பொண்ணையும் எங்க அம்மா வீட்டுக்கு போக விடுங்க. அதிர்ந்து நின்ற கற்பகம் கலங்கிய கண்களை துடைத்தபடியே.... குமார்.... சும்மா இரும்மா... நான் எந்த பக்கம் போறது.... சே. டேய்.... நான் சொல்றதை கேளு. என்னை கமலா சொன்னது போல ஏதாச்சும் முதியோர் இல்லத்திலேயோ காப்பகத்திலேயோ சேர்த்துடுடா. என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. நீங்க வாழ வேண்டிய புள்ளைங்க. அம்மா.... ஆமாப்பா.... இதுல ஒண்ணும் தப்பில்லை. நான் போய் என்னோட துணியை எடுத்து வைக்கிறேன். நீ ஆக வேண்டியதை பாருப்பா என்ற படி தன்னுடைய துணிகளை சேகரிக்க தொடங்கினார். மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுத்தாலும் அதைக்காட்டி கொள்ளாமல் முகத்தை இறுக்கமாகவே வைத்துக் கொண்டாள் கமலா. பிரச்சனை எளிதாக முடிந்த மகிழ்ச்சியை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மாலை 5 மணி. என்னங்க. உங்களுக்கு என்ன டிபன் செய்யட்டும். சப்பாத்தி, குருமா செஞ்சுடட்டுமா. என்னவோ செய். அம்மா இல்லாமல் வீடு வெறிச்சுன்னு இருக்கு மெதுவாக முணுமுணுத்தான் குமார். என்னங்க பேச்சையே காணும் என்றபடியே சமையல் அறையிலிருந்து வந்தாள் கமலா. அம்மா....பாட்டி எங்கமா. காலையில அப்பாவோட போனாங்க. திரும்பி வரவே இல்லை. பாட்டியை பத்திரமா பார்த்துக்க சொல்லி ஹோம்ல சேர்த்திருக்கோம்மா. ஹோம்னா வயசானவங்க நிறைய பேரு இருப்பாங்களே. ஆமாம்டி செல்லம். ஏங்க நம்ம பொண்ணுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு பாருங்க. ஆமாமா என்றவன் மனதிற்குள் நம்மளையும் ஒரு நாள் சேர்க்க போறதுக்கு இப்பவே தெரிஞ்சு வைச்சுக்கிறது நல்லதுதானே. ஏம்மா.... ஹோம்லே சேர்க்கிறதுனா அவங்களுக்கு யாரும் இல்லாம இருக்கணும் தானே. ஆனா பாட்டிக்கு நாம இருக்கோமே..... அதிகப்பிரசங்கி.... போடி உள்ள. பெரிய மனுஷியாட்டம் பேச வந்துட்டா..... எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம். என்ன பேச்சு பேசறா. கமலா.... நீ டிபன் பண்ணலையா.... போய் அதை பாரு முன்னாடி. கோபத்துடன் உள்ளே சென்றாள் கமலா. இரவு.... ஏங்க. உங்க அம்மாவை காப்பகத்தில விட்டதுனால எவ்வளவு செலவு ஆச்சு. இனி மாசாமாசம் எவ்வளவு செலவு ஆகும். சும்மாயிருக்கியா.... முதலில் சேர்க்க மட்டும் தான் பணம் வாங்கறாங்க. அப்புறம் மாசாமாசம் பணம் கட்ட தேவையில்லை. அவங்க அறக்கட்டளையிலிருந்து செலவு செஞ்சுக்கு வாங்களாம். அப்பாடா..... ஏன் செலவு கம்மியானா கம்மல் வாங்கலாம்னு ஐடியாவா? இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. கம்மல் வாங்கி குத்திக்கிட்டு அலைய போறேனாக்கும். இனி டென்ஷன் கிடையாது. வீட்டு வேலைகளுக்கு ஆள் சேர்த்து இருக்கேன் தெரியுமா. வயசானவங்கதான் இருந்தாலும் உங்க அம்மாவை போல சோம்பேறி இல்லை. ஹூம்.... எங்க அம்மாவுக்கு காப்பகம். அந்த அம்மாவுக்கு நம்ம ஹோமா.... என்னவோ செய். நான் புத்திசாலியா இருந்தா உங்களுக்கு பிடிக்காதே. இந்த அம்மாவை எப்படி வேணும்னாலும் திட்டலாம். ஆனா உங்க அம்மாவை திட்டினா உங்களுக்கு கோபம் வந்துடும். சரி....சரி.... தூங்கறதுக்கு வழியை பாரு. உன்னைமிஞ்சி இந்த வீட்டிலே என்ன காரியம் தான் செய்ய முடியும் சொல்லு. ஆமா..... காலை கமலாவின் சத்தம் அந்த தெருவையே எழுப்பியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்ன நினைச்சுக்கிட்டு வேலை பார்க்கிற. நான் ஒண்ணு சொன்னா நீ ஒண்ணு செய்யற. மரியாதையா சொல்றதை செய் என்று கமலா புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த அந்த அம்மாவிடம் மல்லுக்கட்டு செய்து கொண்டிருந்ததை அவஸ்தையுடன் பார்த்தான் குமார். இந்தா.... நீ என்ன, பெரிய இந்த வேலையெல்லாம் என்கிட்ட வைச்சுக்காதே. வீட்டு வேலைக்கு வந்துட்டாமானம், மருவாதை இல்லாமே திட்டினா கேட்டுக்கிட்டு இருப்பேன்னு நினைச்சியா. அதுக்கு வேற ஆள பாரு. உன்கிட்ட வேலை பார்த்து காசு வாங்கறதும் ஒண்ணுதான். தூக்கு மாட்டிக்கிட்டு சாவறதும் ஒண்ணுதான். உன் வேலையும் ஆச்சு. நீயுமாச்சு.... உன் வீட்டுல நாய் கூட வேலை பார்க்காது. போவியா. அதிர் வேட்டு போல் அடுக்கடுக்காக வந்த, சொல் அம்புகளை தாங்க இயலாமல் வெறித்து பார்த்தவாறு நின்றிருந்தாள் கமலா. அந்த புதிய வேலைக்கு வந்த பெண் சேலையை உதறிவிட்டு வேகமாக வெளியேறினாள். கமலா. எனக்கு வேலைக்கு நேரம் ஆச்சு. டிபன் ரெடி பண்ணு. ஏங்க இன்னைக்கு ஒரு நாளு ஹோட்டலில் சாப்பிட்டுக்கலாமா. அதெல்லாம் முடியாது. எனக்கு ஹோட்டல் சாப்பாடுதான் ஒத்துக்காதுன்னு உனக்கு தெரியும்தானே. சீக்கிரம் ரெடி பண்ணு. சரி...சரி.... நீங்க வேற கத்தாதீங்க. படபடவென இயங்கினாள் கமலா. டைனிங் டேபிளில் டிபனை வைத்து விட்டு குமாரையும், மகளையும் அழைத்து வருவதற்குள் தொப்பமாக வேர்வையில் மூழ்கியிருந்தாள் கமலா. த்தூ.... என்னம்மா சமைச்சிருக்க.....நல்லாவேயில்ல. முகத்தை சுளிச்சுக்கிட்டு வாயில் வைத்திருந்த தோசையை துப்பினாள் பிரவீணா. பார்த்தீங்களா. இந்த வயசிலேயே எப்படி பேசறான்னு. அவ சொல்லிட்டா கமலா. என்னால சொல்ல முடியலை அவ்வளவுதான். நீங்களும் கூட்டணி சேர்ந்துகிட்டு பேசாதீங்க. ஏய். கழுதை சீக்கிரம் சாப்பிட்டு புறப்படு. உனக்கு வேன் வந்துடும். அனைவரும் புறப்பட்டு சென்றவுடன் தனக்கு தோசையை எடுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தவளுக்கு தோசையில் உப்பில்லாதது உறைத்தது. அதைபுறந்தள்ளி விட்டு வேலைக்கு புறப்பட்டாள். மாலையில் சோபாவில் சாய்ந்திருந்த குமார் வாசலில் டொக்.... டொக் என்று சத்தம் போட்டு வாசலுக்கு விரைந் தான். ஏய்.... பிரவீணா சுத்தியலை வைச்சு எதை உடைச்சுக்கிட்டு இருக்கே. அருகில் சென்று பார்த்தவன் அதிர்ந்து போனான். வீட்டு காம்பவுண்ட் சுவரில் கடப்பா கல்லில் பொறிக் கப்பட்டிருந்த அன்னை இல்லம் என்ற வாசகத்தைதான் பிரவீணா உடைத்து கொண்டிருந்தாள். ஏய். இதை ஏன் உடைக்கிற. ஏம்ப்பா அன்னைக்கு நான் நம்ம வீட்டுக்கு அன்னை இல்லம்னு பேர் வைச்சிருக்கேன் கேட்டதுக்கு எங்க அம்மா சிரமப்பட்டு இந்த வீட்ட கட்டறதுக்கு பணம் சேர்த்து தந்தாங்க. அதான் அன்னை இல்லம்னு வைச்சிருக்கேன்னு சொன்னல்ல. ஆமா. அதுக்கு இப்ப நீ இதை உடைச்சுக்கிட்டு இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம். இருக்கே. உங்க அம்மா பாடுபட்டதாலதானே இந்த பேரு வைச்ச. ஆனா அந்த அம்மாவை தான் வேற ஹோமுக்கு மாத்திட்டீங்கல்ல. அதனாலத்தான் அன்னை இல்லம்ங்கிறதை உடைச்சேன். குழந்தையின் பேச்சில் இருந்த உள் அர்த்தத்தை உணர்ந்து தடுமாறி நின்றான் குமார். இது அனைத்தையும் கேட்டபடி நின்றிருந்த கமலா, பிரவீணாவை வாரி எடுத்து..... அம்மாடி. நீ சொன்ன உள் அர்த்தம் புரிஞ்சுச்சுடா. உடனே போய் உங்க பாட்டியை நானே மன்னிப்பு கேட்டு கூப்பிட்டுக்கிட்டு வரேன்டா செல்லம் என்றபடியே வேகமாக திருந்திய மனதுடன் தன் மாமியாரை அழைத்து வர விரைந்தாள் கமலா.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

சந்தேகமெனும் வண்டு

காலையிலிருந்தே ஆபீஸ் வேலையில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவித்தேன். மனதின் அடிப்பகுதியில் அந்தக் கசப்பு உருண்டையை அடைத்து வைத்துக் கொண்டு எப்படி வேலை செய்ய முடியும்? ``ச்சே... எவ்வளவு நம்பினேன் இவளை?... இப்படி துரோகம் பண்ணிட்டாளே!... இவளுக்கு நான் எதுல குறை வெச்சேனë?... கேட்டதையெல்லாம் கடன்பட்டாவது வாங்கிக் கொடுத்தேன். நன்றி மறந்துட்டாளே!" சிந்தனை வலையில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்த என்னை பின் முருகன் உசுப்பினான். ``சார்... மேனேஜர் கூப்பிடறார்!" சோர்வுடன் எழுந்து சென்றேன். ``ஹூம்... ஏற்கனவே மனசு ரணமாக்கெடக்குது... இதுல இந்தாளு வேற... ச்சை!" `என்னய்யா ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்கே?... நான் கேட்டது இந்த வருஷ ஸ்டேட்மெண்ட்... நீ குடுத்தது... போன வருஷத்தோடது!... ஆர் மேட்? ``ஸாரி ஸார்!... அது வந்து...! திணறினேன். ``வேலைல கவனம் வேணும்யா!... பொறுப்பு வேணும்யா! ஏதோ எட்டு மணி நேரம் கையையும், காலையும் இந்த ஆபிஸிற்குள்ளாக போட்டு வெச்சுட்டாப் போதும் சம்பளம் வருமென நினைச்சிட்டு வேலைக்கு வரக் கூடாது." சொல்லிவிட்டு நான் கொடுத்திருந்த ஸ்டேட் மெண்டைத் தூக்கி வீசினார். பொறுக்கிக் கொண்டு அமைதியாய் வெளியேறினேன். ``எல்லாம் இந்த சனியன் பிடிச்சவளால வந்த வினை. நல்லா இருந்த மனசை எப்படி ரணகளமாக்கிட்டா பாவி! இருடி இரு... ஒரு நாளைக்கில்லாட்டி ஒரு நாளைக்கு உன்னையக் கையும் களவுமாகப் பிடிக்கிறேன். அப்ப வெச்சுக்கறேன் உனக்கு தீபாவளி." கறுவியபடி சீட்டில் வந்து அமர்ந்தேன். தாறுமாறாகச் சிந்தித்துச் சிந்தித்து, கடைசியில் மனைவி மேல் உள்ள நம்பிக்கையில் மற்றவர்கள் வார்த்தைகளைப் புறக்கணித்து விட்டு ஒரு தெளிவிற்கு வந்தேன். அதாவது, இவர்களெல்லாம் வேறு யாரையோ பார்த்துவிட்டு என் மனைவி நந்தினி என்று சொல்கிறார்கள், என்பதுதான் அது. சுய ஆறுதலோ? மறுநாள், காலை ஏழரை மணியிருக்கும். வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தித் துடைத்துக் கொண்டிருந்தேன். யாரோ சைக்கிளில் வந்திறங்க வேலையை நிறுத்தி விட்டுக் கூர்ந்து கவனித்தேன். பேப்பர் போடும் பையன் கலெக்ஷனுக்காக வந்திருந்தான். ``என்னப்பா காலங்காத்தாலேயே கலெக்ஷனுக்கு வந்துட்டே?" கேட்டேன். ``இல்ல சார்... நான் எப்பவும் மதியம்தான் கலெக்ஷனுக்கு வருவேன். இப்பல்லாம் தெனமும் மதியம் நம்ம வீடு பூட்டியிருக்கறதினால காலையிலேயே வந்துட்டேன். ஸாரி சார்... தொந்தரவுக்கு மன்னிக்கனும். பேப்பர் போடுபவனாயிருந்தாலும் வெகு டீசண்டாகப் பேசினான். அதிர்ந்தேன். அன்று மதியம் டைனிங் ஹாலில் இருந்த என்னை டெஸ்பாட்ச் மோகன் அவசரமாகக் கூப்பிட, டிபன் பாக்சை அப்படியே மூடி வைத்து விட்டு, கையைக் கழுவிக் கொண்டு ஓடினேன். ``உங்களுக்குத்தான்... போன்!" மோகன் நீட்ட, வாங்கி, ``ஹலோ... குரு பேசறேன்... யாரு? ஓ... மாமாவா?... வாங்க மாமா... எப்ப வந்தீங்க ஊரிலிருந்து?... அது சரி, எங்கிருந்து பேசறீங்க... இப்ப?" ``ம்... உன் வீட்டுப் பக்கத்துல இருக்கிற மளிகைக் கடையில் இருந்து பேசறேன். ஆமாம் என்ன வீடு பூட்டிக் கிடக்கு? நந்தினி எங்க போனா?" நொறுங்கிப் போனேன். ``அது... வந்து... மாமா... எங்காவது பிரண்ட் வீட்டுக்குப் போயிருப்பா... நீங்க அங்கியே இருங்க மாமா, இதோ இப்ப நான் கிளம்பி வர்றேன். ``இல்லப்பா... வேணாம். நான் இப்படியே கிளம்பறேன்! ஒரு வேலையா வந்தேன்... சரி... வந்தது வந்தோம் உன்னையும், நந்தினியையும் பார்த்துட்டுப் போலாம்னு நெனச்சேன். பரவாயில்லை. அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா தங்கிட்டுப் போறேன். சரி... வெச்சிடட்டுமா?" மிகுந்த தர்மசங்கடத்துடன் போனை வைத்தேன். ``ச்சே... கிராமத்தில் இருந்து வந்தவரை இப்படி முகத்தைக்கூட பார்க்காம திருப்பியனுப்ப வேண்டியதாகி விட்டதே!... அடியேய்... நந்தினி அந்த மாமாவோட முயற்சியில தாண்டி நம்ம கல்யாணமே நடந்தது. அவரு சிபாரிசு பண்ணலைன்னா... உன்னை எங்கடி நான் கட்டப் போறேன். எப்படியும் இன்றிரவு இதற்கொரு முடிவு கண்டு விடுவது என்கிற கான்கிரீட் தீர்மானத்தோடு காத்திருந்தேன். இரவும் வந்தது. நந்தினியும் வந்தாள், என் கட்டில் அருகில். மெல்ல என் தோளைத் தொட்டவளின் கையைத் தட்டி விட்டேன். ``ஏங்க... ஏதாவது கோபமா?" என்றபடி மீண்டும் என்னைத் தொட முயன்றவளை, ``ச்சீய்... தொடாதடி என்னை! அடித் தொண்டையில் கத்தினேன். நடுங்கி விட்டாள். ``ஏங்க...? என்னாச்சு... உங்களுக்கு? ஏன் நான் தொடக்கூடாதுன்னு சொல்றீங்க?" குரல் தளுதளுத்தது அவளுக்கு. ``கண்டவனையெல்லாம் தொட்ட கை என் மேல் படக்கூடாதடி!" ஆடிப் போனாள். உடம்பு `கிடு..கிடு'வென்று நடுங்கியது. இரு கைகளையும் கன்னத்தில் வைத்துக் கொண்டு, ``அய்யோ... ஏங்க இப்படியெல்லாம் பேசறீங்க?... நான் என்ன தப்பு செஞ்சிட்டேன்... எதுக்கு என் மேல இப்படியொரு அபாண்டத்தை சுமத்தறீங்க? கதறினாள். சொன்னேன். என் நண்பர்கள் சொன்னதை! பேப்பர் பையன் சொன்னதை! மாமா சொன்னதை! `ஏண்டி... என்னைய ஆபீசுக்கு அனுப்பிச்சிட்டு, நான் போனப்பறம் வீட்டைப் பூட்டிக்கிட்டு கிளம்பிடறே... சாயந்திரம் நான் வர்றதுக்கு முன்னாடி வந்து... ஒண்ணுமே தெரியாத அப்பிராணி யாட்டம் வீட்டுக்குள்ள பூந்துக்குறே!,, எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சிட்டிருக்கியாடி?... ம் ஹூம்... எல்லாம் தெரியும். சும்மா உன்னைய விட்டுப் பிடிக்கணும்னுதாண்டி இத்தனை நாள் பொறுத்திட்டிருந்தேன்! சொல்லுடி... எங்கடி போறே தெனமும்? எவன் கூட போய்ச் சுத்திட்டு வர்றே? சொல்லுடி! அதட்டினேன். எனக்கு பதில் சொல்லாமல், அறையின் மூலையில் சென்ற மர்ந்து, கால்களுக்கிடையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்கியவளை வெறுப்பாய்ப் பார்த்து விட்டு என் அறைக்குள் புகுந்தேன். அழுது ஓயட்டும். அப்புறம் விசாரிப்போம். அரை மணி நேரம் கடந்திருக்கும். என் முதுகுக்குப் பின்னால் யாரோ மூக்குறுஞ்சும் சத்தம் கேட்டுத் திரும்பினேன். நந்தினிதான். அழுதழுது வீங்கிப் போன முகத்துடன் நின்றிருந்தாள். ``நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலை!" அப்போதும் விடாமல், முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, கேட்டேன். `அன்னிக்கு நான் ... எங்க அம்மா வீட்டுக்குப் போகணும்ன்னு சொன்னப்ப நீங்க என்ன சொன்னீங்க?... ``எனக்கு வர்ற சம்பளத்துல இப்படி அடிக்கொரு தரம் `அம்மா வீடு... ஆத்தா வீடு'ன்னு போய்க்கிட்டிருந்தா... மாசக் கடைசியில டிங்கியடிக்க வேண்டியதுதான். முடிஞ்சா நீயே சம்பாதிச்சு... அதுல போய்க்கோ"ன்னு சொன்னீங்கல்ல?" தளுதளுத்த குரலில் கேட்டாள். யோசித்தேன். ``அப்படியா?... நான் அப்படிச் சொன்னேனா?" ``பின்னே... அப்படித்தான் சொன்னீங்க!" ``சரி... அப்படியே இருக்கட்டும்... அதுக்கும்... இதுக்கும் என்ன சம்பந்தம்?" ``யோசிச்சுப் பாருங்க... நான் எங்கம்மா வீட்டுக்குப் போய் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமாச்சு... எனக்கும் அவங்களைப் பார்க்கணும் போல இருக்கு... ஆனா... உங்க கிட்ட கேக்கறதுக்கும் பயமாயிருக்கு... அதனால... அதனால... `அதனால?" ``நீங்க நினைக்கிற மாதிரி நானொண்ணும் தப்பாக எந்த வழிக்கும் போகலை... ஒரு சோப்புக் கம்பெனி தன்னோட தயாரிப்பு சோப்பை வீடு, வீடாகப் போய் விற்க சேல்ஸ் கேர்ள் வேணும்னு கேட்டிருந்திச்சு. நான் அதுல சேர்ந்து காலைல பத்து மணியிலிருந்து சாயந்திரம் நாலு மணிவரைக்கும் வீடு, வீடாகப் போய் சோப் விற்கறேனுங்க!... தெனமும் சாயந்திரம் சம்பளத்தையும், கமிஷனையும் கையோட குடுத்திடறாங்க! என்றவள் வீட்டிற்குள் சென்று தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வந்து அதிலிருந்த ரூபாய்த் தாள்களை எடுத்து என் கையில் திணித்து, ``எங்கம்மா வீட்டுக்குப் போய்ட்டு வர்றேங்க!" என்றாள். எனக்கு இதயம் கனத்தது. தொண்டை அடைத்துக் கண்களில் நீர் கோர்த்தது. ``ச்சே...! இவளைப் போய் சந்தேகப்பட்டுட்டோமே?" `வெடுக்'கென்று அவளை இழுத்து நெஞ்சோடு இறுகக்கட்டிக் கொண்டு, ``என்னை மன்னிச்சுடு நந்தினி. உன்னோட உணர்ச்சிகளைப் புரிஞ்சுக்காமல் போனதோட இல்லாம, உன்கிட்ட கேட்கக் கூடாததெல்லாம் கேட்டுட்டேன்... ஸாரியம்மா!" அணைப்பை இறுக்கினேன். அந்த இறுக்கத்தில் சந்தேக வண்டு நசுங்கிப்போனது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

நீதானா?

வெள்ளைச்சாமி வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள் நுழைவதை கண்ட பரமசிவம் அவரை வரவேற்றார். ``வாங்க... வாங்க... நானே உங்களை பார்க்க வரணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்.'' ``எனக்கு மரியாதை கொடுத்தது போதும். மொதல்ல உங்க மரியாதையை தக்க வைக்க பாருங்க...'' ``என்ன சம்பந்தி, என்னென்னவோபேசறீங்க... இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்படி கத்தி பேசறீங்க.. மொதல்ல ஏதாவது தாகத்துக்கு குளிர்ச்சியா குடிங்க... எல்லாம் சரியா போகும்...'' பரமசிவம் சமாளித்தார். ``இதோ பாரும் உங்க குடும்பம் கவுரவமான குடும்பம்னு நினைச்சு என் பொண்ணை குடுக்க சம்மதிச்சேன். ஆனா இப்படி உங்க பையன் மோசம் பண்ணுவான்னு' நினைக்கலே... இந்த லெட்டரை படிச்சு பாருங்க... உங்களுக்கே தெரியும்...'' வெள்ளைச்சாமி தான் கொண்டு வந்திருந்த கடிதத்தை அவர் முகத்திலே வீசி எறிந்தார். பரமசிவத்திற்கு அவர் செயல் ஆத்திரத்தை உண்டு பண்ணினாலும், உண்மை என்னவென்பதை அறியும் முன் கோபப்படுவதில் அர்த்தமில்லை என உணர்ந்து கொண்டவராய் கடிதத்தை படித்தார். ``அன்புமிக்க வெள்ளைச்சாமி அவர்களுக்கு, அபாக்கியவதியான சங்கரி எழுதுவது... உங்கள் மகள் சுந்தரிக்கு மாப்பிள்ளையாக போகிறவர் ஏற்கனவே என்னை மணந்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தார். அவரது வார்த்தையை நம்பி நான் சோரம் போய் விட்டேன். என் வாழ்க்கையோடு விளையாடியவர் நாளை உங்கள் பெண்ணை மணந்து கொண்ட பின்பு வேறொரு பெண்ணை நாடமாட்டார் என்பது என்ன நிச்சயம். கொஞ்சம் சிந்திக்கவும். உங்கள் மகளின் திருமணத்திற்கு எனது அன்பான ஆசிகள். இப்படிக்கு அபலைப்பெண் சங்கரி. கடிதத்தைத் படித்த பரமசிவம் தலையில் கல் விழுந்த மாதிரி ஆனார். அவர் நெஞ்சுக்கூட்டுக்குள் படபடவென ஏதோ ஒன்று அடிப்பதை போலிருந்தது. இதுவரை கட்டிக் காத்து வந்த அவரது மானத்தை வோரோடு பிடுங்கி எறிந்து விட்டானே! அவர் உதடுகள் துடித்தன. கண்களில் நீர் சுரந்து விடும் நிலை. ``அய்யா இதை வெளியில யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க... அப்புறம் நான் ஊருக்குள்ளே தலை நிமிர்ந்து நடக்க முடியாது'' பரமசிவம் கெஞ்சாத குறையாய் கேட்டுக் கொண்டார். அவரது முகவாட்டமும் பேசிய தொனியும் அவர் மேல் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்த வெள்ளைச்சாமி கொஞ்சம் சூடு தணிந்தார். ``சரி... சரி... விடும்... தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போச்சுன்னு நினைச்சுக்கிறேன். அந்த பொண்ணு யாருன்னு விசாரிச்சு அவனுக்கு கட்டி வைக்கிற வழியைத் தேடும். அவனையும் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க... நான் வர்றேன்...'' வெள்ளைச்சாமி சொல்லி விட்டு போனார். பரமசிவத்தின் கோபம் மகன் குருவின் மேல் வெடித்துக் கொண்டு கிளம்ப தயாரானது. குரு இரவில் வீடு திரும்பியபோது பரமசிவம் வார்த்தையால் அவனை தாக்கினார். ``நில்லுடா... பொறுக்கி பயலே...'' ``அப்பா...!?'' அவன் திடுக்கிட்டான். ``என்ன அப்பானு சொல்ல உனக்கு அருகதையில்லை. நான் ஊருக்குள்ளே மானம், மரியாதை யோட வாழ்ந்தவன்டா... இப்படியொரு அற்பத்தனமான காரியத்தை பண்ண எப்படிடா உனக்கு துணிச்சல் வந்தது?'' குரு பேசாமல் நின்று கொண்டிருந்தான். அப்பா இவ்வளவு கோபப்பட்டு பேசி அவன் கேட்டதில்லை. ``என்னப்பா... ஏன் இவ்வளவு கோபப்படறீங்க...? விஷயத்தை சொல்லுங்கப்பா முதல்ல...!'' என்றான். ``அந்த கண்றாவியை என் வாயால வேற சொல்லணுமா... இந்தா நீயே படிச்சுக்க...'' கடிதத்தை அவன் முன்னே தூக்கி எறிய, அது கீழே விழுந்தது. குனிந்து எடுத்துக் கொண்டான். அவனுக்கு விஷயம் புரியலாயிற்று. கடிதத்தை படித்த பிறகே அப்பாவிற்கு கோபம் உண்டாகி இருக்கிறது. ``பேசாமல் இருந்தா எப்படி... யார்டா அவ... அவ மட்டும்தானா... இன்னும் வேற யாராவது இப்படி இருக்காங்களா... எம் மானத்தை அந்தாளு வாங்கிட்டு போறார். உன்னைய பெத்ததுக்கு இந்த அவமானம் தேவைதான்? பேசுடா... பேசாம இருந்தா என்ன அர்த்தம்?'' ``அப்பா அந்த கடிதத்தை எழுதியது வேறு யாருமில்லை. நான்தான்.'' அவருக்கு மேலும் அதிர்ச்சியானது. ``என்னது... நீயா... நிஜம்தானா...? ஏன் அப்படி செஞ்சே... யானை தன் தலையில் மண்ணை போட்டுக்கும்னு சொல்லு வாங்க. இது அது மாதிரிதான் இருக்கு...!'' ``நான் அப்படி செய்ததுக்கு காரணம் இருக்குப்பா... நேரம் வரும்போது சொல்றேன்.'' அடுத்த மாதம். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் சுந்தரிக்கும் அவள் அத்தை மகன் ரகுவிற்கும் கல்யாணம் நடந்தேறியது. அன்று குரு தன் அப்பாவிடம் வந்தான். ``அப்பா... இப்ப அந்த உண்மையான காரணத்தை சொல்றேன்.'' ``புதுசா என்ன கதை விடப்போறே?'' ``இது கதையல்ல நிஜம்... என்னோட மூத்த அக்கா பரமேஸ்வரி எப்படி செத்தாங்க... உங்களால் சொல்ல முடியுமா?'' ``அது முடிஞ்சு போன விஷயம். இப்ப ஏன் அதை இழுக்கிறே?'' ``அதுதான்ப்பா... நீங்க ஆசைப்பட்ட மாப்பிள்ளைக்கு அவங்களை கல்யாணம் பண்ணித்தர சம்மதிக்கலை. தற்கொலை செய்துக்கிட்டாங்க. அதானே உண்மை!'' அவர் குருவை நிமிர்ந்து பார்கக முடியாமல் தலை குனிந்தார். ``கல்யாணம் நிச்சயம் ஆன பிறகு சுந்தரி ஒரு நாள் என்னை தனியா சந்திச்சு பேசினா... அவளோட அத்தை மகனை உயிருக்கு உயிரா காதலிப்பதாகவும், இந்த கல்யாணத்தை அவங்கப்பா எதிர்ப்பதாகவும் சொன்னாள். என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லேன்னாலும், அப்படி ஏதாவது நடந்துட்டா தற்கொலை பண்ணி செத்துப்போவேன்னு சொன்னா... எப்படியாவது நீங்கதான் இந்தகல்யாணத்தை நிறுத்தணும். ஒருவேளை அப்படி நின்னுட்டா... அத்தை மகன் ரகுவை வேறு வழியில்லாமல் அவளுக்கே முடிச்சு வச்சிடுவார்ன்னும் நம்பினாள். அவளோட நம்பிக்கை வீண் போகலை. அவள் நினைச்சபடியே இந்த கல்யாணம் நடந்துடுச்சு. இப்ப சொல்லுங்க... ஒரு சாவுக்கு நீங்க காரணமா இருந்துட்டீங்க... இன்னொரு சம்பவத்துக்கு நான் காரணமா இருக்கணுமா.... அக்கா செத்தப்புறம் எப்படியெல்லாம சொல்லி, சொல்லி வேதனைப்பட்டு அழுதீங்க... அதேமாதிரி இன்னொரு மனுஷன் வேதனைப்படணுமான்னு நெனைச்சேன். அதனால தான் அப்படி ஒரு பொய்யான கடிதத்தை எழுதி கல்யாணத்தை நிறுத்தினேன். என்னைய நல்லா புரிஞ்சுக்கிட்ட ஒருத்தி நிச்சயம் எங்காவது இருப்பா... அப்ப உங்க எண்ணம்போல கல்யாணம் நடக்கும்'' என்றான். அதைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போன பரமசிவம் குருவை பாசத்துடன் அணை

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org