<$BlogRSDUrl$>

உயிரின்உயிரே-------நாவல்

1 நசிகேதா! பூவுலகில் அடைதற்கரியஆசைகள் எவையெவை உண்டோ அவைஅனைத்தையும் கேள் தருகிறேன்சாரதிகளுடன் தேர் வேண்டுமா? வாத்தியக்கலைஞர்கள் வேண்டுமா? தேவலோகப்பெண்கள் வேண்டுமா? பெற்றுக்கொள்.அவர்களது பணிவிடையைப் பெற்றுக் கொள். ஆனால் மரணத்தைப் பற்றிமட்டும் கேட்காதே. ‘‘என்ன புத்தகம் அது?’’ ரமணன் வைத்திருந்த புத்தகத்தைக் காட்டிக் கேட்டாள் மீனாட்சி. ‘‘ ‘கடோப நிஷதம்’ படிக்கிறியா?’’ அவன் அவளிடம் புத்தகத்தின் முகப்பைக் காட்டினான். ‘மரணத்திற்குப் பின்னால்’ என்ற அட்டையின் கூடுதல் வாசகங்களைப் படித்ததும் அவள் முகம் வாடியது. ஒருவித பதற்றம் படர்ந்தது. பெட்ரூம் கதவை அவசரமாய் சார்த்தித் தாளிட்டுவிட்டு வந்தாள். ரமணன் சிரித்தான். ‘‘யார் உள்ள வந்துடக் கூடாதுன்னு கதவைச் சார்த்தற நீ?’’ அவள் பதில் சொல்லாமல், அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பிடுங்கி டேபிள் மீது எறிந்தாள். ‘‘நல்ல புத்தகம்மா. எடுத்து படிச்சுதான் பாரேன். எல்லா பயமும் போய்டும்.’’ ‘‘அவசியமில்ல. நீங்களும் படிக்க வேண்டாம். வேற ஏதாவது பேசுவோம்.’’ ‘‘உக்காரு மீனாட்சி. நான் படிக்கிறேன் கேளு’’ _ அவன் அவள் தோளைப் பற்றிக் கட்டிலில் உட்கார வைத்துவிட்டுப் புத்தகத்தைக் கையில் எடுத்தான். ‘பிறப்பும் மரணமும் வாழ்க்கையின் இரண்டு மாபெரும் புதிர்கள். பிறப்பு நம் வாழ்வில் நிகழ்ந்துவிட்ட ஒன்று. பிறப்புக்குப் பிறகு நம் நிலை நமக்குத் தெரிகிறது. மற்றொரு புதிர், மரணம். மரணம் என்றால் என்ன? மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது? அவன் என்ன ஆகிறான்..?’ மீனாட்சி அதற்குமேல் பொறுக்க முடியாமல் புத்தகத்தை அவன் கையிலிருந்து பிடுங்கி எறிந்துவிட்டு, முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். ‘‘ஏய்... ஏய் மீனாட்சி! என்ன இது? கமான்மா. என்ன நீகூட இப்படி கோழையா இருக்க? எல்லாரும் ஒரு நாள் மரணத்தை சந்திச்சுதானே தீரணும்! பகவத் கீதை என்ன சொல்லுது தெரியுமா?’’ ‘‘ப்ளீஸ் ரமணன். ஏற்கெனவே நான் செத்துட்டிருக்கேன்‘‘ ‘‘நீ எப்படி? நானில்ல இப்போ எமதர்மனைச் சந்திக்கத் தயாராகிட்டிருக்கேன். அவங்கிட்ட நானும் சில கேள்விகள் கேக்கலாம்னு இருக்கேன். நசிகேதனைப் போல. அதுக்காகத்தான் இந்த புக்கை வாங்கிட்டு வந்தேன். மீனாட்சி எழுந்தாள். அவனைச் சில வினாடிகள் வெறித்துப் பார்த்தாள். ‘‘ஓ.கே! நானும் உங்களோட வர்றேன். ரெண்டு பேரும் சேர்ந்தே எமனைப் பார்த்துக் கேள்வி கேட்போம். ‘ஏன்யா இந்த வயசுல எங்களை உன் லோகத்துக்கு விருந்தாளியா கூட்டிட்டு வந்துட்ட’ன்னு கேப்போம். சரியா?’’ அவள் டேபிள் திறந்து சிறிய பாட்டிலை எடுத்து தூக்க மாத்திரைகளை உள்ளங்கையில் கொட்டிக்கொள்ள, ரமணன் சட்டென்று அதைத் தட்டி விட்டான். ‘‘டோண்ட் பி ஸ்டுப்பிட் மீனாட்சி. மறந்துட்டியா நீ ? நாம ரெண்டு பேரும் காதலிக்கும்போதே சத்தியம் செய்திருக்கோம். நம்ம வாழ்க்கைல என்ன கஷ்டம் வந்தாலும், நம்ம காதலே தோல்வி அடைந்தாலும், எந்தச் சூழ்நிலைலயும் தற்கொலை எண்ணம் மட்டும் நமக்கு ஏற்பட விடக்கூடாதுன்னு.’’ ‘‘நாம இன்னொரு சத்தியமும் செய்திருக்கோம். நமக்குள்ள பிரிவு ஏற்பட, விடறதில்லைன்னு.’’ ‘‘கரெக்ட். நாமளா பிரியறதில்லைன்னுதான் சத்தியம் பண்ணி இருக்கோம். ஆனா, மரணம் நம்ம சத்தியத்துக்கு அப்பாற்பட்டது மீனாட்சி. எமதர்மன்கிட்ட சத்தியம் வாங்கலையே, எங்களைப் பிரிச்சுடாதேன்னு!’’ மீனாட்சி அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள். ‘‘என்னால முடியலை ரமணன். நான் எப்படி உன்னை விட்டுட்டு? பிரியறதுக்கா நாம இவ்வளவு கஷ்டப்பட்டு ஒண்ணு சேர்ந்தோம்?’’ ‘‘அதான் வாழ்க்கை மீனாட்சி. நாம நினைக்கிற மாதிரி அது இருக்காது. வேணாம்னு நினைக்கறது நடக்கும். கேக்கறது கிடைக்காது. சிரிக்கணும்னு ஆசைப்படும்போது அழறதுக்கான சீன்ல நின்னுட்டிருப்போம். பங்களா வாங்கணும்னு கஷ்டப்பட்டு பணம் சேர்த்தா, அது ஹாஸ்பிடலுக்கு போய்ச்சேரும். நூறு வயசு வரை வாழ்ந்து நிறைய சாதிக்கணும்னு நினைச்சா முப்பது வயசுலயே முந்திக்கிட்டு வரும் சாவு. எல்லாத்துக்கும் நாம தயாரா இருந்துதான் ஆகணும்.’’ ‘‘மரணம் நமக்குத் தெரியாம வரணும் ரமணன். கடைசி நிமிஷம் வரை அது தெரியாமலேயே சந்தோஷமா வாழ்ந்துட்டு பட்டுனு போய்டணும். அதுக்காக நாம இப்படி காத்துட்டிருக்கறது ரொம்ப கொடுமை..! நீங்க கொஞ்சங் கொஞ்சமா செத்துப்போறதை என்னால பார்த்துட்டிருக்க முடியுமா?’’ ‘‘என்ன செய்ய மீனாட்சி... கஷ்டமோ சந்தோஷமோ, ஒவ்வொரு அனுபவமும் ஒருமுறைதான் கிடைக்கும். அந்த அனுபவத்தை வேணாம்னு சொல்லாம அனுபவிக்க பக்குவப்படணும். இன்னும் கொஞ்சநாள்தான்னு டாக்டர் சொன்னப்ப நான் மட்டும் சந்தோஷமா பட்டேன்? எவ்வளவு ஷாக்! எவ்வளவு கண்ணீர். ஆனா இப்ப இல்ல. நௌ ஐ ஆம் ரிலாக்ஸ்டு. தயாராய்ட்டேன். எத்தனை பேருக்கு இப்படி மரணத்தை எதிர்பார்த்து காத்துட்டிருக்கற அனுபவம் கிடைக்கும்? எனக்கு கிடைச்சிருக்கு! த்ரில்லிங்கா இருக்கு. முதல்ல இருந்த பயம் போய்டுச்சு. புலிவாய்ல அகப்பட்ட மான் மாதிரி அமைதியாய்ட்டேன். இப்ப என் கவலையெல்லாம் உன்னை நினைச்சுதான்.’’ ரமணன் யோசனையோடு நிறுத்தினான். மனைவியைத் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டு ஆறுதலாய் தட்டிக் கொடுத்தான். இரவு முழுக்க அப்படியே கிடந்தார்கள். மனம், நேற்று நிஜமாயிருந்து இன்று கனவாய்ப்போன கடந்தகாலக் கடலில் நீராடியது. « « « அதுவொரு அடுக்குமாடி குடியிருப்பு. மொத்தம் ஆறு மாடிகள். பதினெட்டு வீடுகள். மூன்றாவது மாடியில் அவளது வீடு. ஐந்தாவது மாடியில் அவனும் இன்னும் ஒரு நண்பனும் இருந்தார்கள். அவனது வீட்டுக்கான வாடகையை கம்பெனி செலுத்தி விடும். மீனாட்சியின் அப்பாவுக்கு அது சொந்த பிளாட். ரமணனும் நண்பன் ஹரியும் அங்கு குடிவந்தபோது மீனாட்சியின் அப்பாதான் வீட்டுச்சாவியைக் கொடுத்தார். ‘‘வீடு க்ளீன் பண்ணி வெச்சிருக்கு. வேற ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேக்கலாம். நாந்தான் இந்த பில்டிங்கோட அசோசியேஷன் பிரஸிடென்ட். எப்போ என்ன பிராப்ளம்னாலும் என்னை அப்ரோச் பண்ணலாம்.’’ ‘‘பக்கத்துல ஏதாவது நல்ல மெஸ்ஸோ, ஹோட்டலோ இருக்குமா சார்?’’ ‘‘இன்னிக்கு ஒருநாள் சாப்டவா, இல்ல தினமுமா?’’ ‘‘இன்னிக்கு ஒருநாள்தான். நாளைலேர்ந்து நாங்களே சமைச்சுப்போம்.’’ ‘‘சமையல் தெரியுமா?’’ ‘‘நான் அடுப்பு பத்த வெச்சுடுவேன். மத்ததெல்லாம் இவன் பார்த்துக்குவான்.’’ அவன் நண்பனைச் சுட்டிக்காட்டினான்.’’ அவர் சிரித்தார். ‘‘டோண்ட் ஒர்ரி. இன்னிக்கு ஒருநாள் என் வீட்லேர்ந்து சாப்பாடு கொடுத்தனுப்பறேன்.’’ ‘‘உங்க வீட்ல யார் சார் சமையல்?’’ நண்பன் கேட்டான். ‘‘சார்தாண்டா.. என்ன கேள்வி இது? சரிதானே சார்?’’ ‘‘யெஸ். நான் அடுப்பு பத்த வெச்சுடுவேன். மத்ததெல்லாம் எம் பொண்டாட்டியும் மருமகளும் பார்த்துக்குவாங்க. வரட்டுமா?’’ அவர் அவன் முதுகில் தட்டிவிட்டுப் போக... அவன் அசடு வழியச் சிரித்தான். சாமான்களை வீட்டில் இறக்கி, சரி செய்து குளித்துவிட்டு வரும்போது கூடத்தில் பெரிய எவர்சில்வர் டிஃபன் கேரியரும் இரண்டு வாழையிலையும் இருந்தன. ‘‘யாருடா கொண்டு வந்தாங்க?’’ ‘‘வேலைக்காரி. ஏன் நீ யாரை எதிர்பார்த்த? சாருக்கு ஏதாவது வயசுப் பொண்ணு இருக்கும், அது கொண்டு வந்து வச்சிருக்கும்னா?’’ ‘‘எப்டிடா? நான் மனசுல நினைச்சதை கண்டுபிடிச்சு சொல்ல ஏதாவது ஃசாப்ட்வேர் தயார் செய்து வச்சிருக்கியா என்ன?’’ ‘‘ஆமா. அந்த சாஃப்ட்வேரை வச்சு அந்தப் பொண்ணு மனசு... அவங்கப்பன் மனசுலல்லாம் என்ன இருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்லவா?’’ ‘‘அப்போ... அவங்க வீட்ல ஒரு பொண்ணு இருக்கான்ற!’’ ‘‘நீ உதை வாங்கப் போற!’’ ‘‘சாப்ட்ட பிறகு டிஃபன் கேரியரை கொண்டு கொடுக்கற சாக்குல சாருக்கு பொண்ணு இருக்கான்னு பார்த்து, இருந்தா ஐ லவ் யூ சொல்லிட்டு வந்துடறேன்.’’ ‘‘உன் நேரம் நல்லாயில்லன்னு நல்லா தெரியுது.’’ நண்பன் தலையில் அடித்துக் கொண்டான். சொன்னபடியே சாப்பாட்டை ஒரு பிடிபிடித்து விட்டு டிஃபன் கேரியரை கர்ம சிரத்தையாய் கழுவி எடுத்துக்கொண்டு மூன்றாவது மாடிக்கு படியிறங்கிச் சென்று அவர்கள் வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தான். -------------------------------------------------------------------------------- 2 ‘‘ஏம்மா லதா, போய் கதவைத் திறந்து யாருன்னு பாரேன்’’ _ பிரசிடென்ட்டின் குரல் கேட்டது. ‘லதா! வாவ்... ஸ்வீட் நேம்! லதா லதா’ அவன் கண்மூடி உச்சரித்தான். ஐஸ்வர்யா ராய் லெவலுக்கு ஒரு குட்டி தாஜ்மஹால் கதவு திறந்து படபடவென இமைகளைச் சிறகடித்தபடி அவனைப் பார்த்துப் புன்னகைக்கப் போகிறது! கண்ணோடு கண் கலக்கப் போகிறது. காதல் பிறக்கப் போகிறது. அவன் கற்பனைச் சிறகடித்தபடி கதவு திறக்கக் காத்திருந்தான். ‘‘மீனாட்சி, போய் கதவைத் திறந்து பாரேன்.’’ யாரோ மற்றொருவருக்கு உத்தரவிட, சப்பென்று ஆயிற்று. அப்பா பெண்ணிடம் சொன்னால், யாரோ அம்மாவை அனுப்பி வைக்கிறார்களே. ‘வராதே மீனாட்சி. உன் பெண்ணை அனுப்பி வை. லதா! பெயர் நன்றாக இருக்கிறது. லதா ரமணன்... பொருத்தமாகவும் இருக்கிறது.’ அவன் மீனாட்சி வர வேண்டாமென்று வேண்டினான். ஒரு வழியாய்க் கதவு திறக்கப்பட்டது. யெஸ். ஜலதரங்கத்தின் சப்தம் கேட்க... அவன் கண்ணைத் திறந்தான். ஒரு க்ஷணம் மூச்சுவிட மறந்து போனான். இவ்வளவு கிட்டத்தில் தந்தச்சிலையன்றைக் கண்டதும் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. எதுவும் பேசாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். ‘‘ஓ... மாடிக்கு குடி வந்தவரா?’’ டிஃபன் கேரியரையும் அவனையும் பார்த்தபடி அவளே புரிந்து கொண்டு கேட்டாள். ‘‘ம்... ரொம்ப தேங்க்ஸ்! சாப்பாடு ரொம்ப நல்லார்ந்துது. அம்மாகிட்ட சொல்லிடுங்க மிஸ் லதா! லதா நல்ல பேர். ஷார்ட் அண்ட் ஸ்வீட் நேம்’’ அவள் சட்டெனச் சிரித்தாள். ‘‘நிஜமாங்க... நா முகஸ்துதிக்காக சொல்லலை.’’ ‘‘அப்டியா? ஒரு நிமிஷம். அம்மாவைக் கூப்பிடறேன். அவங்ககிட்ட சொல்லுங்க.’’ ‘‘அய்யோ அவங்க எதுக்குங்க... சாப்பாடு நல்லாயிருக்குன்னு அவங்ககிட்ட சொல்லலாம். பேரைப்பத்தி எதுக்கு? ‘‘பின்னே... அவங்க பேர் நல்லார்ந்தா அவங்ககிட்டதானே சொல்லணும்!’’ ‘‘ஏண்டி மீனாட்சி... யாரோட பேசிட்ருக்க..?’’ உள்ளிருந்து குரலொன்று கேட்க... அவள் புன்னகைத்தாள். ‘‘லதாதான் கேக்கறா யாரோட பேசிட்ருக்கன்னு. என்னன்னு சொல்லட்டும்? உங்க பேர் தெரியலையே!’’ அவள் நமுட்டுச் சிரிப்புடன் கேட்டாள். அவன் எச்சில் விழுங்கினான். முகத்தில் ஒரு குடம் விளக்கெண்ணெய் வழிந்தது. ‘‘குப்புசாமி’’ ‘‘ம்...? என்ன சொன்னீங்க?’’ ‘‘எம்பேரைங்க.. குப்புசாமி’’ அவள் விழித்துப் பார்த்தாள். பெயருக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லையே என்று அவள் நினைத்தது அவளது கண்களில் வெளிப்பட்டது. ‘‘நான் வர்றேன். லதாகிட்ட சாப்பாடு ரொம்ப நல்லாயிருந்துச்சுன்னு சொல்லிடுங்க.’’ விழிகளில் விஷமம் கொப்பளிக்க அவன் படியேறிச் செல்ல... அவள் வாயடைத்து நின்றபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். « « « ‘‘ஆனாலும் உனக்கு ரொம்பத்தாண்டா துணிச்சல். உதை வாங்கறதுன்னு தீர்மானமே பண்ணிட்டியாக்கும்!’’ நண்பன் எச்சரித்தான். ‘‘ம்ஹ§ம்... இது வேற தீர்மானம்!’’ ‘‘என்ன?’’ ‘‘அந்த மீனாட்சியைக் காதலிக்கறதுன்ற தீர்மானம்!’’ ‘‘டேய் வேணாண்டா... சொன்னாக் கேளு. அந்தக் குடும்பத்தைப் பத்தியோ இல்ல அந்தப் பொண்ணைப் பத்தியோ உனக்கென்ன தெரியும்?’’ ‘‘தெரிஞ்சுக்கிட்டா போச்சு!’’ ‘‘எனக்கென்னமோ பயம்மாருக்கு.’’ ‘‘நான் காதலிக்கறதுக்கு நீ ஏண்டா பயப்படற?’’ ‘‘அப்புறம் உன் இஷ்டம். நான் வேணான்னா கேக்கவா போற? ஆனா ஒரு சந்தேகம்.’’ ‘‘என்ன?’’ ‘‘இது சும்மா டைம் பாஸிங் அட்ராக்ஷன் இல்லையே..? அந்தப் பொண்ணை கல்யாணம் கட்டிப்பல்ல?’’ ‘‘கண்டிப்பா... அதென்னமோடா... சும்மா விளையாட்டாதான் போனேன். அந்த வீட்ல ஒரு வயசுப் பொண்ணு இருப்பான்னு கூடத் தெரியாது. ஆனா நிஜமாவே இந்தப் பொண்ணு வந்து கதவைத் திறந்ததும் தடால்னு விழுந்துட்டேண்டா. காதல் முதல் பார்வையில்னு கேள்விப்பட்ருக்கேன். இப்ப அனுபவிக்கறேன்.’’ ‘‘இந்த அனுபவம் அந்தப் பொண்ணுக்கும் இருக்கணுமே! இல்லாட்டி ஒருதலைக் காதலனா தாடி வளர்த்துக்கிட்டு பாட வேண்டியதுதான்.’’ ‘‘கண்டிப்பா இல்ல. என் கல்யாண ரிஸப்ஷன்ல நீதான் லைட் மியூசிக் பாடப் போற.’’ ‘‘பாட்டு நான் பாடறேன். பொண்ணு இவதானே?’’ ‘‘இவளேதான்!’’ ‘‘சந்தோஷம். அதை மொதல்ல அவகிட்டயும் சொல்லி கன்ஃபர்மேஷன் வாங்கிக்கோ.’’ ‘‘கண்டிப்பா!’’ அவன் அதற்கான தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான். ஒருநாள் அவள் மொட்டைமாடிப் பக்கம் செல்வதைக் கண்டவன், சற்று நேரத்தில் தானும் படியேறினான். மாடிக்கதவருகில் மறைந்து நின்று அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தான். மொட்டை மாடியில் அத்தனை வீட்டுக்கும் தனித்தனியே மேல்நிலை நீர்த்தொட்டிகள் உண்டு. ஒவ்வொரு வீட்டின் எண்ணும் அவரவர் தொட்டியில் எழுதப்பட்டிருக்கும். அவள் தன்வீட்டுத் தொட்டியின் மூடியைத் திறந்து பிளாஸ்டிக் கப்பால் நீர் முகந்து மொட்டை மாடியில் வைத்து தான் வளர்க்கும் சில பூந்தொட்டிகளுக்குத் தண்ணீர் ஊற்றினாள். கீச்சுக்குரலில் ஏதோ சினிமா பாட்டை முனகிக்கொண்டிருந்தாள். தண்ணீர் ஊற்றி முடித்ததும் தொட்டியை மூடாமல் அதன் உட்புறத்தைக் குனிந்து நோக்கிக் கொண்டிருந்தவள், உள்ளே தன் கையை விட்டு நீரில் துழாவினாள். சற்றுப்பொறுத்து, நிமிர்ந்து தொட்டியை மூடிவிட்டு மதிற்சுவரருகில் சென்று குனிந்து தெருப்பக்கம் வேடிக்கை பார்த்தாள். பத்து நிமிடத்திற்குப் பிறகு கீழே செல்ல முடிவு செய்து மாடிப்படி நோக்கி நடந்து வர, ரமணன் சட்டென்று மறைந்து கொண்டான். அவள் கீழே சென்றதும் அவன் மெதுவாக நடந்து சென்று அந்த நீர்த்தொட்டியைத் திறந்து அப்படி என்னத்தை அவள் அதனுள் பார்த்துக் கொண்டிருந்தாள் என்று உள்ளே எட்டிப்பார்த்தான். உள்ளே ஒன்றுமில்லை. வெறும் தண்ணீர்தான் இருந்தது. அடியில் ப்ளீச்சிங் பவுடரும், வண்டலுமாய் கறுப்பாகப் படிந்திருந்தது. அப்படியென்ன குனிந்து கும்பிட்டுக் கொண்டிருந்தாள் இங்கே? வியப்போடு யோசித்தவன் கண்கள் திடீரென்று விரிந்தன. பக்கென்று சிரித்தான். தண்ணீரின் அடியில் கறுப்பாய் படிந்திருந்த வண்டலின் மீது அவளது விரல்கள் வாட்டர் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அடேங்கப்பா... என்ன ஒரு கண்டுபிடிப்புத் தண்ணீர்! தொட்டியில் தண்ணீர் இல்லாமல் வேறென்ன இருக்கும்? அவன் மீண்டும் மீண்டும் சிரித்தான். பிறகு தண்ணீர்த் தொட்டிக்குள் குனிந்து ஆங்கில வாட்டருக்குக் கீழே ‘‘இது தமிழ்த் தண்ணீர்’’ என்று எழுதி விட்டு நிமிர்ந்தான். அன்றிரவு நண்பன் ஹரியிடம் தண்ணீர்த் தொட்டி விஷயத்தைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தான். ‘‘அவ எழுதின வாட்டர்க்கு கீழ இது ‘தமிழ்த்தண்ணீர்’னு எழுதிட்டு வந்தேன்.’’ ‘‘வரவர உன் லொள்ளு தாங்கலடா’’ ஹரி முறைத்தான். ‘‘எவ்ளோ பெரிய ஜோக் சொல்றேன்... கொஞ்சம் சிரியேண்டா முசுடே..’’ ‘‘ஈ...ஈ... போதுமா?’’ ‘‘போதும். பயம்மாயிருக்கு’’ ரமணன் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டான். அடுத்த லீவு நாளன்று மறுபடியும் மொட்டைமாடிப்பக்கம் சென்றவன் மீனாட்சி வீட்டின் தண்ணீர்த் தொட்டியைத் திறந்து பார்த்தான். எழுதியது அழியவில்லை. ஆனால், கீழே எழுத்துக்கள் சேர்ந்திருந்தது. சேர்த்துப்படித்த போது இப்படியிருந்தது: ‘இது தமிழ்த்தண்ணீர், உபயம் வருணபகவான்.’ அவன் பக்கென்று சிரித்தான். குனிந்து அதற்குக் கீழே அவன் எழுதினான். ‘ஒரு துளி உயிர்த்துளி கவனமாக உபயோகிக்கவும்.’ எழுதி விட்டு நிமிர்ந்தவன், பின்னால் நிழலாட திரும்பினான். இடுப்பில் கைவைத்தபடி நின்றிருந்தாள் மீனாட்சி. ‘‘ஓஹோ... நீங்கதான் இந்தத் தமிழ் பார்ட்டியா?’’ அவன் அசடு வழியச் சிரித்தான். ‘‘இந்த விளையாட்டு ஜாலியா இருக்கில்ல மீனாட்சி?’’ அவள் பதில் பேசாமல் தொட்டிக்குள் எட்டிப்பார்த்து, அவன் கடைசியாய் எழுதியிருந்தவற்றைப் படித்தாள். ‘ஒரு துளி உயிர்த்துளி கவனமாக உபயோகிக்கவும்.’ அந்த வரிகள் வியப்பை ஏற்படுத்த, புன்னகையோடு அவனைப் பார்த்தாள். ‘‘ரொம்ப நல்லாயிருக்கு.’’ ‘‘நன்றி..’’ ‘‘சிட்டில ஓடற எல்லா தண்ணி வண்டி மேலயும், தண்ணித் தொட்டிகள் மேலயும் எழுதப்பட வேண்டிய வரிகள்.’’ ‘‘ரொம்ப ரொம்ப நன்றி. ஆனா, இந்த கேப்ஷனை நான் யாருக்கும் கொடுக்கறதா இல்ல. நானே ஒரு மினரல் வாட்டர் ஃபேக்டரி ஆரம்பிச்சு ஒவ்வொரு பாட்டில்லயும், கேன்லயும் எழுதறதா இருக்கேன்.’’ ‘‘ம்ஹ§ம்.. அதுல வேற மாதிரி எழுதுங்க.’’ ‘‘எப்டி..?’’ ‘‘ஒரு துளி உயிரெடுக்கும் கவனமாக உபயோகிக்கவும்.’’ ‘‘சரிதான். மிதக்கறதுக்கு வழிகேட்டா முழுகறதுக்கு சொல்லித் தருவீங்க போலருக்கு. டேஞ்சர் பார்ட்டிங்க நீங்க!’’ ‘‘இனிமே இந்த தண்ணித் தொட்டில எழுதற வேலையெல்லாம் வேணாம். வேணும்னா உங்க தொட்டில கிறுக்கிக்குங்க.’’ ‘‘கிறுக்கிட்டா போச்சு. உங்க தொட்டில நீங்க எழுதுங்க. அதுக்கான தொடர்ச்சி என் தொட்டில இருக்கும்.’’ ‘‘உங்க தொடர்ச்சியை யார் கேட்டாங்க இப்போ?’’ அவன் அதற்கு பதில் சொல்லவில்லை. ஒரு புன்னகையோடு அவளைக் கடந்து சென்று, தங்களது நீர்த் தொட்டியைத் திறந்து குனிந்து ஏதோ எழுதி விட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்து மறுபடியும் சிரித்துவிட்டு டாட்டா காட்டி விட்டு கீழே இறங்கிச் சென்றான். அவள் அவனையும் அந்த தண்ணீர்த் தொட்டியையும் மாறி மாறிப் பார்த்தவள் சட்டென்று அவன் பின்னாலேயே படியிறங்கினாள். நீ எழுதியதை நான் ஒன்றும் பார்க்கவில்லை என்று அவனுக்கு உணர்த்தும் விதமாக வேகவேகமாக இறங்கி அவனையும் கடந்து கீழே இறங்கி மறைந்தாள். கொஞ்ச நேரம்தான் வைராக்கியமெல்லாம். அவன் என்னதான் எழுதியிருப்பான்? எதற்கு அப்படிச் சிரித்தான்? உள்ளுக்குள் ஒருவிதப் படபடப்பு ஹிம்சை பண்ணிக்கொண்டே இருந்தது. அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. பிற்பகல் தூக்கத்தில் குடியிருப்பே ஆழ்ந்த நிசப்தத்தோடு இருந்த சமயம் அவள் மெல்ல லிப்ட்டுக்குள் நுழைந்து மொட்டை மாடிக்குச் சென்றாள். மாடி முழுக்க வெயில் சுள்ளென்று உறைத்தது. அவனது தண்ணீர்த் தொட்டியின் மூடியை விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தாள். அவன் எழுதியிருந்தவற்றைப் படித்தவள் ஒரு கணம் திகைத்துப் போனாள். உள்ளே சூடாய் ஏதோ பரவியது. அவசரமாய் மூடியைச் சரியாக வைத்துவிட்டு வேகமாய்த் திரும்பியவள் வியர்த்துப் போனாள். மொட்டை மாடிக் கதவோரம் சாய்ந்து கைகட்டியபடி நின்றிருந்தான் ரமணன். -------------------------------------------------------------------------------- 3 நசிகேதன் தந்தையிடம் சென்று, அப்பா என்னை யாருக்கு தானம் கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டான். அவர் உடனே பதிலளிக்காது போக அவன் இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்கு தந்தை, ‘உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன் என்றார். ரமணன் சிரித்துக் கொண்டான். இப்படித்தான் அவனும் ஒருமுறை அப்பாவிடம் கேட்டு நச்சரித்தான். வீடு மாற்றிக்கொண்டு போகிற ஒரு சமயத்தில் தனக்கு உதவாத சாமான்களையெல்லாம் ஒரு பக்கம் தனியே எடுத்து வைத்து வருகிற போகிறவர்களிடம் எல்லாம் உனக்கு எது வேணுமோ கொண்டு போ என்று பரந்த மனசோடு தானம் பண்ணிக் கொண்டிருந்தார் அப்பா. அத்தனையும் பேரீச்சம்பழத்துக்குக் கூட பண்டமாற்று ஆவதற்கு லாயக்கில்லாத ஓட்டை உடைசல்கள். நியாயமாக அதைக் கொண்டு போகிறவனுக்கு அப்பா கூலியும் கொடுக்க வேண்டும். ஆனால், அவராவது கொடுப்பதாவது. காய்ந்த சுண்ணாம்பு கூடப் பெயராது அவரிடமிருந்து. அவ்வளவு குணம். தானம் என்கிற பெயரில் ஓட்டை உடைசல்களை பிறத்தியார் தலையில் கட்டிக் கொண்டிருந்தவரிடம் கிண்டலாகத்தான் கேட்டான் ரமணன். அப்போது அவனுக்கு பத்து வயதிருக்கும். ‘‘என்னை யார்கிட்ட தள்ளிவிடப் போறப்பா?’’ ‘‘என்னடா சொன்ன?’’ ‘‘நீதானே அடிக்கடி சொல்லுவ... யூஸ்லெஸ் ஃபெல்லோன்னு. என்னை யார் தலையில கட்டப்போற?’’ ‘‘குடுகுடுப்பாண்டி கிட்ட.’’ ‘‘என்னைக் கொண்டு போய் என்ன செய்வான் அவன்?’’ ‘‘சுடுகாட்டுக்குக் கொண்டு போய் உன் கையைக் கட்டி, கண்ணை நோண்டி...’’ ‘‘போறுமே... கொழந்தைட்ட என்ன பேசறதுன்னு விவஸ்தை வேண்டாம்? வாய அலம்புங்கோ.’’ அம்மா நெருப்பைக் கொட்டினாற்போல் பதைத்துப் போய் அப்பாவைக் கத்தினாள். குடுகுடுப்பாண்டியிடமிருந்து அவனைக் காப்பாற்றுவது போல் இழுத்து பத்திரமாய் அணைத்துக் கொண்டாள். அவள் கை நடுங்குவதை அவன் உடம்பு உணர்ந்தது. அன்று முழுக்க அப்பாவைத் திட்டிக் கொண்டேயிருந்தாள். சந்திக்காலத்தில் அவனை உட்காரவைத்து உப்பும் மிளகாயும் சுற்றி அவனை ‘த்தூத்தூ’ என்று துப்பச் சொல்லி அடுப்பில் போட்டாள். அவனுக்கு நிறைய திருஷ்டி. கமறவேயில்லை என்றாள். அம்மா போய் நாலு வருஷமாகிவிட்டது. இருந்திருந்தால் துடித்துப் போயிருப்பாள். அப்பாவின் வாக்குக்கு தேவர்கள் ததாஸ்து சொல்லி விட்டார்களே என்று கதறித் தவித்திருப்பாள். எமனிடமிருந்து அவனைக் காக்க என்னவெல்லாம் வழியுண்டென்று தேடத் துவங்கியிருப்பாள். மார்க்கண்டேயனைக் காத்தாற்போல் என் பிள்ளையையும் காப்பாற்று என்று அவளே இவனை ஏதாவதொரு சிவலிங்கத்தோடு கட்டிப்போட்டு எமனை விரட்டியடிக்க முயற்சித்திருப்பாள். நல்லகாலம் சிவலிங்கத்திற்கும் தர்மசங்கடமின்றி, எமனுக்கும் தொழிற்-சங்கடமின்றி அவள் அவனுக்கு முன்பே புத்திரசோகமின்றி போய்ச்சேர்ந்து விட்டாள். மார்க்கண்டேயன் விஷயத்திற்குப் பிறகு எமன் சர்வ ஜாக்கிரதை-யாகவே இருக்கிறான். குறுக்கே நின்று தடுப்பார்கள் என்று தோன்றுகிறவரை-யெல்லாம் முன்னமேயே முடித்து விடுகிறான். அப்பா இருக்கிறார் என்று பேர். ஆனால், பேச்சுவார்த்தையில்லை. மீனாட்சியோடு மாலையும் கழுத்துமாய் போய் நின்ற அன்று எள்ளும் நீரும் தெளித்தவர்தான். எனக்கு கொள்ளி வைக்கக் கூட வராதே என்று விரட்டினார். மறுபடியும் தேவர்கள் அவர் வாக்குக்கு ததாஸ்து சொல்லியிருக்க வேண்டும். அவருக்கு கொள்ளி வைப்பதற்கு அவன் உயிருடன் இருந்தால்தானே? காதலின் மீது அப்படியென்ன கசப்போ? யாரையாவது வாழ்க்கையில் அன்போடு பார்த்திருந்தால்தானே? சர்வாதிகாரத்தில் அன்பும் கிடையாது காதலும் கிடையாது. பாவம் அம்மா. எப்படித்தான் இவரோடு குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றாளோ? எத்தனை நாட்களாக எமனுக்கு சிகப்புக் கம்பளம் விரித்து வைத்துக் காத்திருந்தாளோ? எமன் அவளை ஏமாற்றவில்லை. அப்பாவிடமிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்து விட்டான். வாழ்க்கையில் அவளுக்கு ஒரே ஒரு நிராசைதான் இருந்திருக்கும். மீனாட்சியோடு மாமியார் ஸ்தானத்தில் ஒரு நாள் கூட சேர்ந்து வாழவில்லை. ‘‘பொண்ணு அழகாயிருக்காடா. உனக்குப் பொருத்தமா இருக்கா. சௌக்யமா இருக்கணும் ரெண்டு பேரும்’’ அப்பாவுக்குத் தெரியாமல் காரணீஸ்வரன் கோயில் கொடிமரத்திற்கருகில் நின்று அவனை ஆசீர்வதித்துச் சொல்லி விட்டுப்போனவள்தான். அதன் பிறகு ஆறுமாதம் கண்ணிலேயே காண முடியவில்லை. சாவுச் செய்தி கூட காற்றோடு வந்து காதில் விழுந்தது. அப்பா, ‘செருப்பாலடிக்கறதுக்கு முந்தி மரியாதையா போய்டு’ என்றார். அன்றுதான் ரமணன் பொங்கி-னான். ‘‘இது எங்கம்மா! எங்கம்மா-வோட சாவுல கலந்துக்க எனக்கு சகல உரிமையும் உண்டு. மறுத்தா கோர்ட்டுக்கு போவேன். போலீசோட வந்து எங்கம்மா பக்கத்துல உக்காந்து அழுவேன்.’’ ‘‘போ... போய்க் கூட்டிண்டு வா.... போடா...’’ அவர் அவனை கழுத்தைப் பிடித்-துத் தள்ள வந்தார். அவன் சட்டென்று திரும்பி அவரது சட்-டையைப் பிடித்து... எரித்து விடுவது போல் பார்க்க, அந்த அனலில் அவர் ஒரு கணம் வெலவெலத்-துப் போனார். ‘‘மரியாதையா அப்டி கம்முனு உக்காரு. ஏதாவது சத்தம் போட்ட... எங்கம்மாக்கு நீ துணையா போவ...’’ அடிக்குரலில் உறுமினான் அவன். அதன் பிறகு அவர் அடங்கித்தான் அமர்ந்திருந்தார். குரைக்கிற நாய் கடிக்காது என்ற வசனத்திற்கு உயி-ரூட்டிக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு அண்ணா கொள்ளி போட்ட கையோடு திரும்பிப் பாராமல் கிளம்பின-வன்தான். இன்றுவரை அப்பாவைப் பார்க்கவில்லை. அவர் எப்படியிருக்கிறார் என்று கூடத் தெரியாது. அதெப்படி அண்ணா-வோடு மட்டும் அவருக்கு ஒத்துப் போகிறதென்று புரியவில்லை. அவர் சொல்வதற்கெல்லாம் எதிர்ப்பின்றி தலையாட்டு-வதாலா? அண்ணா ஒரு பிறவி. அவர் உத்தரவு கொடுத்-தால்தான் பொண்டாட்டியிடம் பேசுவான்; சிரிப்பான். அவன் அசடா அதிசமர்த்தா என்ற சந்தேகம் இன்றுவரை தீராத ஒன்றாகவே இருக்கிறது. அவர் பார்த்து வைக்கும் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவதற்காக முப்பத்து ஐந்து வருடம் காமம் அடக்கி கடுந்தவமிருந்தான் அண்ணா. ஜமதக்னிக்கு ஒரு பரசுராமனென்றால், அப்பாவுக்கு அண்ணா. அவன் அவர் இஷ்டத்துக்கு வளைந்து கொடுத்ததாலேயே சுதந்திரமாய் வாழ விரும்பிய ரமணனை அவருக்குப் பிடிக்காமல் போயிற்று. அண்ணாவுக்கு முன்னால் அவன் காதல் கல்யாணம் என்று துணிச்சலாய் அவரை அலட்சியப்படுத்த, அவர் ஹிரண்யனாகவும், அவன் பிரஹலாதனாகவும் மாறிப்போனார்கள். அவன் துன்பப்பட வேண்டும், அதை, தான் கண்டு ரசிக்க வேண்டும் என்று காத்திருக்கும் தகப்பனின் கனவு நனவாகப் போகிறது. ஆனால் அவருக்கு இன்னமும் இவன் துன்பம் தெரியாது. தெரியப்படுத்தினால் மகிழ்ந்து போவார். நீ நாசமாப் போகணும்னு ஆசீர்வாதம் பண்ணினது பலிச்சுடுத்து பார்த்தயா என்று அசுரனாய்ச் சிரிப்பார். ரமணனுக்கு அப்பாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. முதலும் கடைசியுமாக அவருக்கு ஒரு மகிழ்வை ஏற்படுத்த விரும்பியது மனம். ஆனால், எங்கே போய்த் தேட அவரை? ‘‘என்ன யோசனை...?’’ மீனாட்சி அவன் சிந்தனையைக் கலைத்தாள். அவள் கையில் கலர் கலரான மாத்திரைகள். இந்த வயதில் கை நிறைய மாத்திரைகளோடு எமனிடமிருந்து அவனை மீட்க சத்தியவான் சாவித்திரியாக மாறியாக வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டாம். பாவம். அவனுக்காக அத்தனை உறவுகளையும் ஒதுக்கி விட்டு அவனே எல்லாமாய் நினைத்து அவன் பின்னால் வந்தபோது உறவுகளோடு போராடிய களைப்பையும், உறவுகளை இழந்த வேதனைகளையும் மீறி அவள் முகத்தில் ததும்பிக் கொண்டிருந்த சிரிப்பும் சந்தோஷமும் சுத்தமாய் வடிந்து போய், இனி என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியும் பயமும் மட்டுமே படிந்திருந்தது. தான் இவளைக் காதலிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் இவள், நல்ல ஆயுள் கொண்ட ஒருவனோடு சந்தோஷமாய் வாழ்ந்து கொண்டிருப்பாளோ...? என்ற எண்ணம் ஏற்பட்டது அவனுக்கு. கூடவே தன் காதலைத் தான் அவளிடம் சொன்ன விதமும் நினைவுக்கு வந்தது. அவள் கண்டிப்பாக மொட்டை மாடிக்கு மறுபடியும் வருவாள் என்று அவன் நினைத்தது வீண் போகாமல் அவள் வந்தாள். அவன் தண்ணீர்த் தொட்டிக்குப் பின்னால் இருப்பது தெரியாமல் தொட்டியின் மூடியைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்த நேரம் அவன் நகர்ந்து மொட்டை மாடிக் கதவருகில் சென்று நின்று கொண்டான். திரும்பி அவனைப் பார்த்து விட்டவள் முகத்தில் வெட்கம், வியப்பு, படபடப்பு எல்லாம் கலந்து வெளிப்பட்டன. தொட்டிக்குள் அவன் அப்படி எழுதியிருப்பான் என எதிர்பார்க்கவில்லை அவள். ‘தனித்தனி தொட்டிக்குள் இருந்தாலும் ஒன்று சேரும்போது இரண்டறக்கலப்பது நீரின் இயல்பு. நானும்நீயும் நீராக மாற வேண்டும்என நான் விரும்புகிறேன். நீ?’ அவள் சட்டென்று அவனைக் கடந்து கீழே ஓடி மறைந்தாள். நாலு நாட்கள் கண்ணிலேயே படவில்லை. ஐந்தாம் நாள் அவன் மாடிக்குப் போன சமயம் அவள் தொட்டியை மூடி விட்டு, காயப்போட்டிருந்த மிளகாய் வத்தலை எடுக்கப்போனாள். அவன் தொட்டியைத் திறந்து உள்ளே பார்த்தான். ‘இரண்டறக் கலப்பதற்குக் காத்திருக்கிறது இந்தத் தண்ணீர். ஆனால் தொட்டியை எப்படி உடைத்து வெளியேறுவது?’ அவன் நிமிர்ந்த போது அவள் எதிரில் நின்றிருந்தாள். ‘‘நான் உடைக்கட்டுமா?’’ அவன் கேட்டான். ‘‘எனக்கு பயம்மாயிருக்கு. எங்கப்பாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாது.’’ ‘‘அதைவிட மோசம் எங்கப்பா. ஆனா, அவங்களுக்காகவா நாம வாழப்போறோம்? நமக்காக. இயற்கைக்கு ஒரு சீற்றம் உண்டு. அதன் சீற்றம் மனிதப் பிரயத்தனங்களை முறியடிக்கும். அதே மாதிரி காதலுக்கும் சீற்றம் உண்டு. அது கட்டுப்பாடுகளைத் தகர்த்துக்கொண்டு வெற்றி பெறும். ஆனா அந்த வெற்றிக்குத் தேவை பரஸ்பர ஒத்துழைப்பும் நம்பிக்கையும். சர்க்கஸ்ல பார் விளையாட்டு பாத்திருக்கியா? அந்தரத்துல ஒருத்தன் ஒரு பார்ல தலைகீழா கை விரிச்சு ஆடிட்ருப்பான். இன்னொருத்தன் தன் பிடிமானத்தை விட்டுட்டு தாவி அவன் கையைப் பிடிச்சுப்பான். அது ஒரு கணக்கு மட்டுமோ பயிற்சி மட்டுமோ இல்ல. பிடிச்சுக்கறவன் மேல முழு நம்பிக்கை ஏற்பட்டாதான் பிடிமானத்தை விட்டுட்டுத் தாவ முடியும். உனக்கு எம்மேல நம்பிக்கை இருக்கா?’’ ‘‘இதுக்கு பதில் சொல்ல எனக்கு குறைஞ்சது மூணு மாசமாவது அவகாசம் வேணும். உங்களைப் பத்தி எதுவுமே தெரியாம எப்படி பதில் சொல்ல முடியும் என்னால?’’ ‘‘வெரிகுட் மூணென்ன... ஒரு வருஷம் கூட எடுத்துக்கோ. உனக்கு நம்பிக்கை ஏற்பட்டப்பறம்தான் என்னால சுவர்களை உடைக்க முடியும். நல்லவிதமா சொல்லிப்பார்ப்பேன் முதல்ல. ஒத்துக்காம ஒத்தைக்கால்ல நின்னாங்கன்னா அடுத்தாப்பல கடப்பாரை எடுக்க வேண்டியதுதான்.’’ ‘‘நான் வர்றேன். என்னைத் தேடிட்டு யாராவது வந்துடப்போறாங்க.’’ ‘‘நாம எப்படி சந்திக்கறது.? எங்க பேசறது? உனக்கு எப்படி மெஸேஜ் கொடுக்கறது?’’ ‘‘இருக்கவே இருக்கு தண்ணித் தொட்டி’’ அவள் சின்ன அருவி மாதிரி சிரித்தபடி சென்றாள். அடுத்து வந்த ஆறு மாதமும் தண்ணீர்த் தொட்டி தமிழால் நிரம்பிற்று. சமயம் கிடைத்த போதெல்லாம் நிறைய பேசினார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் நிறைய புரிந்து கொண்டார்கள். ஒருவரின்றி ஒருவரால் வாழ இயலாதென உணர்ந்தார்கள். அவன் ஒரு நாள் துணிந்து அவள் அப்பாவிடம் சென்று தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புவது குறித்துப் பேசினான். தங்கள் திருமணத்தை அவர் நடத்தித்தர வேண்டுமென்றான். ‘‘வெளிய போ.’’ ‘‘சார்... நா என்ன...’’ ‘‘நீயா போறயா... இல்ல கழுத்தைப் பிடிச்சுத் தள்ளவா...?’’ அடேயப்பா.... காதல் என்ற வார்த்தையைக் கேட்டதும் பெற்றவர்கள் முகம் ஏன் அவ்வளவு குரூரமாகி விடுகிறது...! அவ்வளவு பெரிய குற்றமா அது...? அவன் அசையாமல் நிற்க, அவரது கரம் அவனது பிடரியைத் தொட்டது. மீனாட்சி ஓடி வந்து அவரைத் தடுத்தாள். அவர் அடித்த அடியில் சுருண்டு விழுந்தாள். காதலியின் வலியில் காதல் சீறத் தயாராயிற்று. சட்டென்று அவளை எழுப்பி நிறுத்தி அவள் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டான். ‘‘வா போலாம்...’’ ‘‘ராஸ்கல்... உனக்கு என்ன துணிச்சல்டா நாயே. வீட்டுக்குள்ள வந்து எம்பொண்ணு கைய பிடிச்சு இழுக்கறயா...? உன்னை...’’ அவர் டெலிபோன் எடுத்து போலீசின் எண்களை அழுத்த... அவன் சிரித்தபடி டெலிபோனைப் பிடுங்கி கீழே வைத்தான். ‘‘போலீஸ் வந்தா அசிங்கப்படப்போறது நானில்ல. நீங்கதான். உங்க பொண்-ணுக்கு வயசு இருபத்தி மூணு. கல்யாணம் பண்ணிக்கற வயசுதான். நாங்க பரஸ்பரம் விரும்பறோம்னு தெரிஞ்சா போலீஸ்காரங்களே புரோகிதர்களா மாறி எங்க கல்யாணத்தை நடத்தி வைப்பாங்க. பரவால்லன்னா போன் பண்ணுங்க.’’ அவன் ரிஸீவரை எடுத்துக் கொடுக்க, அந்த வீடு திகைத்து நின்றது. கொஞ்ச நேரம்தான். அவர் முகம் இறுகிற்று. பெண்ணை அருவருப்போடு பார்த்தார். ‘‘போ... போய்டு அவனோட. நீ எனக்கு வேண்டாம். என் கண் முன்னால நிக்காம போய்டுங்க ரெண்டு பேரும்.’’ அவர் திரும்பி நின்றுகொண்டு அடிக்குரலில் சீறினார். மீனாட்சி பீதியோடு அவனைப் பார்த்தாள். ‘‘இப்போ சொல்லு மீனாட்சி... என்னை நம்பறயா நீ?’’ ‘‘நம்பறேன்.’’ ‘‘அப்போ வா. என் கையைப் பிடிச்சுக்க.’’ அவன் தன் கைகளை நீட்டினான். அவள் பிடித்துக்கொண்டதும் அவளை அழைத்துக்கொண்டு வெளியேறினான். உடுத்திய துணியோடு அவனோடு கிளம்பினாள் அவள். செருப்புகூட அணிய வேண்டாமென்றான் அவன். ஒரே குடியிருப்பில் இடம் மாறினாள் அவள். திடுதிப்பென்று அவளோடு வந்து நின்றவனைப் பார்த்து, ஹரி திகைத்துப் போனான். -------------------------------------------------------------------------------- 4 ‘வாழ்வின் மேலான உண்மை எது?’ ஒரு கூட்டத்தில் சுவாமி விவேகானந்தர் கேட்டார். யாரும் பதில் கூறவில்லை. பதிலை அவரே கூறினார். ‘நாம் அனைவரும் இறந்துவிடுவோம்.’ இதுவே வாழ்வின் மேலான உண்மை. எப்போதும் மரணத்தை நினையுங்கள். அப்போது மட்டுமே உங்கள் மனதிலிருந்து அற்பத்தனம் விலகும். செயல்திறன் உருவாகும். உங்கள் ஆற்றல் பேராற்றலாக மாறும். மரண நினைவு முதலில் சோகத்தைதான் தரும். சில நாட்கள் கடந்துவிட்டால் அது உங்களை மென்மேலும் சிந்திக்கத் தூண்டும். வெறுமை! அனைத்தும் வெறுமை என்ற உண்மையை உங்களுக்கு அது உணர்த்தும்.’ ரமணன் வரவேற்பறையின் சிறிய கரும்பலகையில் மேற்படி வாசகங்களை அழகாக எழுதினான். ‘‘இதை விட்டா வேற நினைப்பே கிடையாதா உங்களுக்கு?’’ மீனாட்சியின் முகம் சுருங்கியது அதை வாசித்ததும். ‘‘உனக்காகத்தான் எழுதினேன். நீதான் நிறைய சிந்திக்கணும் இப்போ.’’ ‘‘தேவையில்லை. பத்து மணிக்கு நமக்கு டாக்டர்கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட். மணி ஒன்பது. கிளம்பலாமா?’’ ‘‘என்னை இப்படியே விட்ரேன் மீனாட்சி. எவ்ளோ செக்கப். எவ்ளோ ஊசிகள். மாத்திரைகள். எதனாலயும் என் விதி மாறப்போறதில்லை. டாக்டர்களே கைவிட்ட கேஸ் நான். எதுக்கு பணத்தை வீணடிக்கணும்?’’ ‘‘அதுக்காக...? டாக்டர்கள் எல்லாம் மனுஷங்கதான். அவங்க கைவிட்ட கேஸை எல்லாம் மேல இருக்கற டாக்டர் காப்பாத்தி விதியை மாத்தியிருக்கான். உங்களுக்குத் தெரியாததா ரமணன்? மருந்து, மாத்திரை மட்டும் நம்மளை குணப்படுத்திடாது. நமக்குள்ள இருக்கிற நம்பிக்கையும் உறுதியும்தான் மிகச் சிறந்த மருந்து. எத்தனையோ பேர் மரணத்தின் விளிம்புக்குப் போயும்கூட, தன்னம்பிக்கையாலும் கண்டிப்பா வாழணும்ங்கிற பிடிவாதத்தாலயும் மீண்டு வந்திருக்காங்க. ஸோ... நம்புங்க ரமணன். நான் கண்டிப்பா வாழ்வேன்னு சொல்லிட்டே இருங்க. உங்க எண்ணங்கள் நோயை நிச்சயம் விரட்டியடிக்கும். உங்க விதியை மாத்தும்.’’ ரமணன் அவளை விழுங்கிவிடுவது போல் பார்த்தான். எவ்வளவு அழகாகப் பேசுகிறாள் என்று மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் கொஞ்சத்தை முகத்திலும் விழிகளிலும் வெளிப்படுத்தினான். அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். ‘உனக்காகவாவது நான் வாழ்வேன்னு நம்பறேண்டி செல்லம்!’’ அவன் குரல் நெகிழ்ந்தது. ‘‘அப்படின்னா எழுந்திருங்க, டாக்டர்கிட்ட போலாம். இனி இந்தப் புத்தகத்தைத் தொடக் கூடாது.’’ அவன் புன்னகைத்தான். ‘‘தப்பு மீனாட்சி. நீ இந்த புத்தகத்தைப் பார்த்து ஏன் பயப்படற? இது ஒரு நல்ல புத்தகம் மரணத்தைப் பத்தின ஒரு தெளிவை ஏற்படுத்தற புத்தகம். வேத காலத்துலயே சொல்லப்பட்ட உண்மைகள் இவை. மரண பயத்துல நான் இதைப்படிக்கல. இது எல்லாருமே தெரிஞ்சுக்க வேண்டிய உண்மை. எல்லாரும் ஒருநாள் இறப்போம்ங்கறது உண்மைதானே. மரணத்தை ஜெயிச்சவங்க யாருமே கிடையாது. மரணத்தை தள்ளிவேணா போடலாமே தவிர, தவிர்க்க முடியாது. தள்ளிப்போடறதைத்தான் நீங்க ஜெயிச்சுட்டதா சொல்றீங்க. உண்மை என்னன்னா ‘இன்று போய் நாளை வான்னு சொல்றோம் அவ்வளவுதான். உனக்காக நானும் அதை சொல்லணுமா, தாராளமா சொல்றேன். உனக்கு நேரம் கிடைக்கும்போது நீயும் இதைப்படி. இதைப் பார்த்தா பயந்தோம்னு வெட்கப்படுவ. சொல்லப்போனா நசிகேதனை மாதிரி ஒருமுறை எமதர்மனை சந்திச்சு பேசிட்டு வரமாட்டோமான்னு தோண ஆரம்பிச்சுடும்.’’ ‘‘சரி படிக்கறேன். கிளம்பலாமா?’’ அவன் புத்தகத்தை தன்னுடனே எடுத்துக்கொண்டு கிளம்ப, அவள் திகைப்போடு புத்தகத்தையும் அவனையும் பார்த்தாள். அவள் ஸ்கூட்டரை ஓட்ட, அவன் பின்னால் அமர்ந்துகொண்டான். நிறைய இளைத்திருந்தான். அவன் திறமைக்கும் அறிவுக்கும் உழைப்புக்கும் மரியாதை அளித்து, அவனது கம்பெனி தனது விதிமுறைகளை அவனுக்காக சற்று தளர்த்திக்கொண்டு அரைச்சம்பளத்தோடு அவனுக்கு ஒரு வருட விடுப்பும், மருத்துவச் செலவும் கொடுத்திருந்தது. எனவே பணத்திற்கு பிரச்னையின்றி பரிசோதனைகள் செய்ய முடிந்தது. இந்தச் சலுகைகள் இன்னும் எவ்வளவு நாள் எனத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் மருத்துவர்களின் முடிவுப்படி நாள் குறிக்கப்பட்டு விட்ட ஒருவனை மறுபடியும் வேலை செய்ய அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. நம்பிக்கைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு ஒருவேளை மரணம் அவனை மூடிக்கொள்ள முற்படலாம். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் மீனாட்சிக்கு யார் இருக்கிறார்கள் என்ற கவலைதான் இப்போது மரணத்தைவிட மிகப்பெரிய பிரச்னையாய் அவனுக்கு முன்னால் நின்றிருந்தது. ஒரு குழந்தை மாதிரி அவன் கையைப் பிடித்துக்கொண்டு தேகம் மெலிதாய் நடுங்க, உடுத்திய உடையோடு வெறும் காலுடன் அவன் பின்னால் வந்தவள் இன்று அவனை ஒரு குழந்தைபோல் சுமந்துகொண்டு வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் அலைந்து தேய்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு விடியற்காலம் பல் தேய்த்துக் கொண்டிருக்கும்போது பாத்ரூமில் மயங்கி விழுந்தவனை அவள் எப்படி கொண்டுவந்து கட்டிலில் கிடத்தினாள் என்பது இன்றுவரை அவனை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிற புதிர். அவ்வளவு வலு அவளுக்கு எங்கிருந்து வந்ததென அவளுக்கே தெரியவில்லை என்று பிற்பாடு அவள் சொல்லிக் கேட்டதும் இன்னும் ஆச்சர்யம் கூடியது. கஷ்டம் வரும்போது நமக்கே தெரியாமல் நமது சக்தியும் கூடிவிடுமோ என்று தோன்றியது. ‘‘எப்படி தனியா என்னைத் தூக்கின? யாரையாவது கூப்பிட வேண்டியதுதானே?’’ ‘‘தோணலை. கூப்பிட்டிருந்தா எத்தனையோ பேர் ஓடி வந்து உதவியிருப்பாங்க. ஆனா எனக்கு எதுவும் புரியலை. எங்கேர்ந்து அந்த அசுர பலம் வந்ததுன்னும் தெரியலை. அதே இப்ப தூக்கச் சொல்லுங்க... முடியாது. முழி பிதுங்கிடும். ஆமா... என்ன பண்ணிச்சு உங்களுக்கு?’’ ‘‘தெரியலை. திடீர்னு ஒரு டார்க்னெஸ். என்னை மீறி உடம்பு கீழ விழுது. டாக்டர் என்ன சொன்னார்?’’ ‘‘பயப்பட ஒண்ணுமில்லன்னு நாலஞ்சு டெஸ்ட் எழுதிக் கொடுத்திருக்கார்.’’ ‘‘அதெல்லாம் வேண்டாம். சும்மா பணம் பிடுங்கற வேலை. டெஸ்ட்டுங்கற பேர்ல நம்ம சொத்தையே விக்க வெச்சுடுவாங்க. புதுசு புதுசா வியாதி சொல்லி பயமுறுத்துவாங்க. எனக்கு இப்ப ஒண்ணுமில்ல விட்டுடு.’’ அவன் முன்னிலும் உற்சாகமாக தன் வேலைகளைச் செய்ய, அவளது பயமும் அப்போதைக்கு நீங்கிவிட்டது. கிட்டத்தட்ட அந்த சம்பவத்தை மறந்தே போன நிலையில் அவனது அலுவலகத்திலிருந்து போன் வந்தது. இதற்குள் ஒன்றரை வருடம் ஓடியிருந்தது. ‘‘ரமணனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம போய்டுச்சு. நாங்களே அவசரத்துக்கு ஹாஸ்பிடல்ல காட்டிட்டோம். அட்மிட் பண்ணச் சொல்றாங்க. நீங்க உடனே வர்றீங்களா?’’ பதறிப்போய் ஓடினாள் அவள். கிழிந்த நாராய் ஐசியூவில் கிடந்தான் அவன். டாக்டர் அவளை தனியே அழைத்துச் சென்று நீண்ட நேரம் பேசினார். அவர் சொன்ன விஷயத்தில் அவள் கர்ப்பம் கலைந்தது. அதே மருத்துவமனையில் அவளும் ஒரு படுக்கையில் உதிரம் சிந்தினாள். அவர்களது காதலின் ஜீவ சங்கமம் உடைந்த உயிராய் வெளியேறியது. ஹரி ஒருவன்தான் துணையாக இருந்தான் அப்போது. இருவரையும் ஓடி ஓடி கவனித்துக்கொண்டான். அவளது வீட்டுக்குச் சென்று அவளது உடல்நிலையைப் பற்றிச் சொல்லி அவள் தாயை உடனே வரக்கூறி கெஞ்சினான். அவள் அம்மா அழுதாலும் அப்பா அவனை வெளியேற்றி கதவைச் சார்த்தினார் என்று பின்னர் அவன் சொல்லக் கேட்டபோது மீனாட்சி வருத்தப்பட்டாள். ‘‘நீங்க அங்க போயிருக்கக் கூடாது ஹரி’’ என்றாள். ‘‘டாக்டர் என்ன சொன்னார் மீனாட்சி.’’ ரமணன் அவளிடம் கேட்டபோதெல்லாம் அவள் மௌனம் சாதித்தாள். தனிமையில் அழுதாள். அவன் டாக்டரிடமே நேருக்கு நேர் கேட்டுவிட்டான். ‘‘வெளிப்படையா சொல்லிடுங்க டாக்டர். நான் கோழையில்ல. குழந்தையுமில்ல. எல்லாத்துக்கும் நான் என்னைத் தயார் செய்துக்கணும். ஐ வாண்ட் டு நோ அபௌட் மை டிஸீஸ்...’’ டாக்டர் அவன் தோளில் தட்டிக் கொடுத்தார். அவனது உடல்நிலை பற்றி அவனுக்கு தெளிவாகக் கூறினார். ‘‘நான் உயிர் பிழைக்க எத்தனை சதவிகிதம் வாய்ப்புகள் இருக்கு டாக்டர்?’’ மனசுக்குள் அவன் நொறுங்கிப் போனாலும் அதை மறைத்துக்கொண்டு கேட்டான். ‘‘சில நோய்கள் மருத்துவர்களுக்கே சவால் விடக்கூடியவை. லட்சத்துல ஒண்ணு ரெண்டு பேருக்குதான் வரும். நீங்க லட்சத்துல ஒருத்தர் ரமணன். இதுக்கான சரியான மருந்துகள் இன்னமும் கண்Êடுபிடிக்கப்படலங்கிறதுதான் வேதனையான நிஜம். அவஸ்தைகளைவேணா கொஞ்சம் குறைக்கலாம். அதுக்கும் மேல முயற்சி செய்தா உயிரை இழுத்துப் பிடிச்சு கொஞ்ச நாள் நிறுத்தி வைக்கலாம். ஆனா, அப்படி நிறுத்தி வைக்கவும் பலம் வேணும். நான் சொல்றது பண பலம். அப்பவும் கூட உத்தரவாதம் தர்றது ரொம்ப கஷ்டம். யூ ஹாவ் டு ப்ரிப்பேர் ஃபார்இட். எதைப் பத்தியும் நினைச்சு கவலைப்படாம, பயப்படாம இருக்கறவரை சந்தோஷமா இருக்கப் பாருங்க. அதுதான் இப்போதைக்கு சிறந்த மருந்து. இதைத்தவிர மற்றொரு மார்க்கமும் உண்டு. டாக்டர் ராய்ங்கற ஸ்பெஷல் சர்ஜன் லண்டன்லேர்ந்து வந்து அறுவை சிகிச்சை செய்தா ஓரளவு பிழைக்க வாய்ப்பிருக்கு. அதுக்கும் முயற்சிப்போம். அன்று முழுக்க அவன் பிரமை பிடித்தாற்போலிருந்தான். மரணத்தைப் பற்றி அவன் இதுவரை யோசித்ததில்லை. வயதான பின்தான் அது தனக்கு நேரும் என்று நினைத்திருந்ததால் அதைப்பற்றி கவலையோ, பயமோ அவனுக்கு ஏற்பட்டதில்லை. இப்போதுதான் புரிகிறது. இதற்கு வரிசையோ சீனியாரிட்டியோ கிடையாதென்று. தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி சிலரை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுகிறது. சிலரை தளதளவென்று வளரும் பருவத்தில் வெட்டி வீழ்த்துகிறது. இன்னும் சிலருக்கோ அவர்கள் வேண்டிக்கொண்டாலும் அது கிட்டே வந்து காயப்படுத்துவதில்லை. இதுதான் வாழ்க்கை. அவன் முதல் நாள் நிறைய அழுதான். பயத்தில் பசியடைத்துப் போயிற்று. அவன் முகம் வெளுத்துப் போயிற்று. கொஞ்ச நாள்தான். அவன் நிறைய யோசித்தான். என்றோ ஒருநாள் மரணம் நிச்சயமெனில் அதை இன்றே சந்திக்கப்போகிறோம் அவ்வளவுதானே. இதில் பயப்பட என்ன இருக்கிறது. சொல்லப்போனால் இது ஒருவித விடுதலையல்லவா? பார்க்கப்போனால் அவனைவிட அதிகத் துன்பம் மீனாட்சிக்குத்தான். கண்ணெதிரே புருஷன் துளித்துளியாய் அடங்குவதைப் பார்த்துக்கொண்டு அவன் போன பின்னும் அதை நினைத்து ஜீவித்தாக வேண்டும் அவள். அதல்லவா உண்மையில் பெரிய கஷ்டம்! கூடாது. மீனாட்சியை அப்படி துன்பத்தில் வாட விட்டுவிடக் கூடாது. அவள் மறக்கவேண்டும். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சந்தோஷமாக வாழவேண்டும். தான் இருக்கும்போதே அவளது சந்தோஷத்திற்கு ஒரு வழி செய்துவிட்டால் நல்லது என்று தோன்றியது ரமணனுக்கு. -------------------------------------------------------------------------------- 5 ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் வாழ்கின்றன. ஒன்று அந்த மரத்திலுள்ள இனிப்பும், புளிப்பும், கசப்புமான பல்வேறு பழங்களைத் தின்கிறது. அதன் காரணமாக பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறது. மற்றொன்று எதையும் தின்னாமல் அமைதியாக அனைத்தையும் பார்த்த வண்ணமிருக்கிறது. அதேபோல் உடம்பினுள் இருவர் இருக்கின்றனர். ஒருவர் செயல்களைச் செய்து பலன்களை அனுபவிக்க, மற்றொருவர் அமைதியாய் அனைத்துக்கும் சாட்சியாக இருக்கிறார். அனுபவிப்பது ஜீவன். அமைதியாயிருப்பது ஆன்மா என்கிறது முண்டக உபநிஷதம். ரமணன் வேதனையின் உச்சத்திலிருந்தான். வலியை விழுங்கப் பார்த்தான். வலி முனகலாய் வெளிப்பட்டது. அவ்வப்போது அவனது ஜீவன் அனுபவிக்கிற அவஸ்தை இது. ஆரம்பத்தில் இந்த அவஸ்தை தாங்க இயலாத ஒன்றாயிருந்தது. அப்படி அவன் அவஸ்தையில் ஒருமுறை தவித்தபோது அவனுக்கு தான் வாசித்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஒருமுறை கையில் அடிபட்டபோது அவர் தம்மைச் சுற்றி பதற்றப்பட்டவர்களுக்குக் கூறினார். ‘இந்த உடம்பினுள் இருவர் இருக்கிறார்கள். ஒன்று அன்னை. மற்றது பக்தன். இப்போது உடைந்திருப்பது பக்தனின் கைதான். வலியும் அவனுக்குத்தான். புரிகிறதா?’ ரமணனுக்குப் புரிந்தது. ஜீவனின் அவஸ்தைதான் இது. இதைப் பொருட்படுத்தாமல் பழகவேண்டும். அவன் பழகிக்கொண்டான். அப்படியும் அந்த வேதனையிலிருந்து முழுமையாய் விடுபட முடியவில்லை. என்றைக்கு இந்த வேதனைகள் முற்றுப்பெறும் என்ற ஆயாசம் ஏற்பட்டது. எதிரில் ஹரியும் மீனாட்சியும் அமர்ந்து அவன் வலியை வாங்கிக்கொள்ள முடியாத அவஸ்தையோடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவன்தான் ஹரியை வரச்சொல்லியிருந்தான். மீனாட்சி அவன் வலி குறைய மாத்திரை கொடுத்திருந்தாள். அதன் கருணையில் கொஞ்ச நேரத்தில் அவன் முகம் தெளிந்தது. எதுவும் பேசாமல் ஹரியையே சிறிது நேரம் பார்த்தான். ஐந்தாம் வகுப்பிலிருந்து ஹரியும் அவனும் நண்பர்கள். இதுவரை அவர்களுக்குள் குழந்தைச் சண்டையும் வந்ததில்லை. வாலிபச் சண்டையும் ஏற்பட்டதில்லை. ஐந்திலேயே அபூர்வமாய், அதிசயமாய் பண்பட்டுவிட்ட நட்பு இது. எதிர்பார்ப்பில்லாத அன்பு இருவரிடையேயும் இருந்தது. ஒரே தெரு, ஒரே பள்ளி, ஒரே கல்லூரி, ஒரே கல்வி என்று துவங்கி இன்று ஒரே அலுவலகம் ஒரே வீடு என்று அவர்கள் வாழ்க்கையில் பிரிந்ததில்லை. ரமணன் மீனாட்சியை அழைத்துக்கொண்டு வந்த அன்றுதான் முதல்முறையாக பிரிவதென்று தீர்மானித்தான் ஹரி. அதுகூட அவர்களது தனிமைக்கு இடையூறாக இருக்க வேண்டாமென்றுதான் இரண்டு தெரு தள்ளி சிங்கிள் பெட்ரும் பிளாட் ஒன்றிற்குக் குடிபெயர்ந்தான். சாமான்களோடு அவன் புறப்பட்டபோது ரமணன் சின்னக்குழந்தை மாதிரி அழுதான். உன்னை யாருடா போகச் சொல்றாங்க இப்போ? இங்க என்ன இடமா இல்லை. டபுள் பெட்ரூம்தான் இருக்கே அப்புறம் எதுக்கு போற?’’ ‘‘பைத்தியம்... நீங்க ப்ரீயா இருக்கணும்னுதான் போறேன். உனக்கு ஒண்ணுமில்லடா. அந்தப் பொண்ணுக்கு கூச்சமா இருக்குமில்ல? தவிர கல்யாணம், குடும்பம்னு ஆனா எப்படியும் நாம பிரிஞ்சுதானே இருக்கணும்.’’ ‘‘தேவையில்ல. ஏன் நண்பர்கள் கூட்டுக் குடித்தனம் பண்ணக்கூடாதா? இல்ல பண்ண முடியாதுன்றயா?’’ ‘‘பண்ணலாம். உனக்கொரு மீனாட்சி மாதிரி எனக்கொரு காமாட்சி வரட்டும். மீனாட்சிக்கும், காமாட்சிக்கும் நல்ல நட்பு ஏற்பட்டு அவங்க ஓகேன்னா, நாம பெரிசா ஒரு வீடு கட்டிக்கிட்டு ஒண்ணா இருப்போம். இப்போதைக்கு உங்க பிரைவசிக்கு இடைஞ்சல் பண்ணாம நான் நகர்ந்து போறதுதான் அழகு. நல்ல நண்பனுக்கு அடையாளம்.’’ ‘‘புரியுதுடா. அதே நேரம், இவங்கப்பா இருக்கற இதே பிளாட்ல இனியும் நாங்க இருக்கறது தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்தக்கூடும். அதனால கூடிய சீக்கிரமே நானும் இங்கேர்ந்து கிளம்பிடறதுதான் நல்லது. இன்னும் சொல்லப்போனா நாம வேற ஏதாவது ஏரியா போய்ட்டா நல்லாயிருக்கும்னு தோணுது.’’ ‘‘பார்ப்போம். ஒரு ரெண்டு மூணு மாசம் தைரியமா இங்கேயே இரு. அவங்க கண் எதிர்க்லயே இருந்தாதான் அவங்க பொண்ணு நல்லாருக்கான்னு புரியும் அவங்களுக்கு. ஒரு வேளை இந்த மூணு மாசத்துல அவங்க மனசு மாறி உங்களை ஏத்துக்கிட்டாங்கன்னா அதுவும் நல்லதுதானே. ஒருவேளை எதுவும் சரியாகலன்னா அப்பறம் போறதைப் பத்தி யோசிப்போம்.’’ அவன் நல்ல நண்பனாயிருந்து ஆலோசனை சொல்லிவிட்டுப் போனான். ஆனால் முதல்முறை அவன் பாத்ரூமில் விழுந்தபோதும் டாக்டர் வந்துவிட்டுப் போனபோதும் சரி, அதன்பிறகு அவனுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது என்று தெரிந்தபோதும் சரி, யாரும் அங்கிருந்து வந்து எட்டிப்பார்க்கவுமில்லை. இரக்கப்படவுமில்லை. மகள் என்ற பாசமுமில்லை. மனிதநேயமும் வற்றிப் போயிருந்தது அவர்களிடம். அதன் பிறகுதான் ஹரியே ஒருநாள் வீடு காலி செய்வது பற்றிப் பேசினான். ‘‘நான் வீடு பாத்துட்டேண்டா ரமணா. நீங்க இங்கேர்ந்து கிளம்பிடுங்க.’’ ‘‘ஏண்டா... இவங்க வீட்லேர்ந்து ஒரு பிரச்னையும் வரலையே... அப்புறம் எதுக்கு?’’ ‘‘பிரச்னை வந்தாதாண்டா இன்னும் அவங்களுக்கு அன்பிருக்குன்னு அர்த்தம். உரிமையுள்ள இடத்துலதான் கோபமும் வரும். அவங்க கோபமும் படலை. பிரச்னையும் பண்ணலை. அதான் உங்க கஷ்டத்துக்குக்கூட வந்து நிக்கலை. அந்த அளவுக்கா இரத்தம் வற்றிப்போகும் மனுசங்களுக்கு? நாளா வட்டத்துல எல்லாம் சரியாய்டும்னுதான் உன்னை நான் இங்கயே இருக்கச் சொன்னேன். ஆனா இப்போ நீ கஷ்டப்படறதை அவங்க நல்லாவேணும்னு ரசிக்கிறாப்பல தோணுது. அதான் சொல்றேன். இனிமே இங்க இருக்கவேணாம்... கிளம்பிடு.’’ மறுநாளே சாமான்களை வண்டியில் ஏற்றி அவர்களை அழைத்துச் சென்று விட்டான். புதிய வீடு சிறியதுதான். ஒரு படுக்கையறைதான். பாதிச் சம்பளத்திற்கு இதுதான் முடியும். எதிர் பிளாட்டை ஹரி எடுத்துக்கொண்டான். எதிரிலேயே இருந்து சகல உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறான். மீனாட்சி இன்று இந்தளவுக்கு தன்னம்பிக்கையோடு இருக்கிறாள் என்றால் அதெல்லாம் ஹரி கொடுத்த பயிற்சிதான். வாழ்க்கை ஒரு சாகரம் என்றால், அந்த சாகரம் தென்றலையும் தோற்றுவிக்கும். புயலையும் உருவாக்கும். இரண்டுக்குமே அது பிறப்பிடம் என்பதை மறந்துவிடக் கூடாது. தென்றலை அனுபவிக்கிறவனுக்கு புயலையும் சமாளிக்கத் தெரியவேண்டும் என்றவன், அவளுக்கு வங்கி விவகாரங்களைக் கற்றுக் கொடுத்தான். வெளி உலக விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தான். ஸ்கூட்டர் ஓட்டக் கற்கச் செய்தான். கணவனின் நோய் பற்றி... அவனைப் பார்த்துக் கொள்வது பற்றி என்று சகல விஷயங்களிலும் தைரியமும் தெளிவும் ஏற்படுத்தினான். ஒரு கம்ப்யூட்டர் வாங்கிப் போட்டு அவளுக்கு அதில் பயிற்சி கொடுத்தான். இண்டர்நெட்டில் நுழைவது, உபயோகப்படுத்துவது, மெயில் அனுப்புவது என்று அவளது அறிவு விரிந்தது என்றால் அதன் பெருமை முழுக்க முழுக்க ஹரியையே சாரும். ‘‘அடேயப்பா! விட்டா எம் பெண்டாட்டியை பிரைம் மினிஸ்டர் வேலை கூட பாக்கற அளவுக்கு டிரெய்ன் பண்ணிடுவபோல!’’ ரமணன் வியந்தான். ‘‘உனக்குத் தெரியாதுடா பெண்களோட சக்தி பற்றி. பார்க்கத்தான் அவங்க சாதாரணமா இருப்பாங்க. ஆனா ஒரு அணுவைப் பிளந்து பார்த்தாதான் அதோட சக்தி வெளிப்படும். நீ கீழ -விழுந்தப்போ தன்னை மறந்து உன்னைத் து£க்கினதுகூட அப்படி மறைஞ்சிருந்து வெளிப்பட்ட ஒரு சக்திதான். அந்த சக்தியை நான் அவளுக்கு உணர்த்தி வெளிப்படுத்த வச்சிருக்கேன். அவ்ளோதான். மத்தபடி நான் எதுவும் செய்யல.’’ இருந்தாலும் நீ செய்திருக்கிறது பெரிய உபகாரம்தாண்டா. இல்லாட்டி நான் போனப்புறம் என்ன செய்யறதுன்னு புரியாம திருவிழாவுல தொலைஞ்சு போன குழந்தையாட்டமில்ல இருந்திருக்கும் அவ நிலமை?’’ ‘‘நீ போகப்போறன்னு யார் சொன்னது?’’ ‘‘என் விதி.’’ ‘‘அதை ஏன் நீ உருப்போட்டு அடிக்கடி ஒப்பிக்கிற? அது வரும்போது வரட்டும். இப்போ இந்த நிகழ்காலத்தை அனுபவிக்கிற வழியைப் பார். கடைசி நிமிஷம் வரை சந்தோஷமா இரு. உற்சாகமா இரு. ‘காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்’னு அவனை சொடக்குப் போட்டுக் கூப்பிட்டு ஓட ஓட விரட்டு...’’ ரமணன் கடகடவென்று சிரித்தான். ‘‘என்னடா... என்ன விஷயம்?’’ எதிரில் அமர்ந்திருந்த ஹரி அவனைக் கேட்டபடி மீனாட்சியைத் திரும்பிப் பார்த்தான். ‘‘நீ அன்னிக்கு சொன்னியே, காலா என்றன் காலருகே வாடான்னு கூப்பிடச்சொல்லி... நானும் கூப்பிட்டேன்.’’ ‘‘வந்தானா..?’’ ‘‘வரேன். ஆனா கால் பக்கமா வரமாட்டேன். தலை பக்கமா வேணா வரேன்றான். என்ன சொல்லலாம்.’’ ‘‘தலைப்பக்கம் வந்தா கையால ஒரு குத்து விடுவேன்னு சொல்லு. அதை விடு. நீ இப்ப எதுக்கு என்னைக் கூப்பிட்ட?’’ ‘‘உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு விஷயம் பத்திப் பேசத்தான்.’’ ‘‘என்ன விஷயம்?’’ ‘‘ஒருவேளை காலன் ரொம்ப கன்னிங்கா என் காலால உதைபடாம என் கழுத்தைப் பிடிச்சு என்னைத் து£க்கிட்டுப் போய்ட்டான்னு வச்சுக்கோ.. அடுத்தாப்பல மீனாட்சி என்ன செய்யப்போறான்ற கவலை எனக்குள்ள இருக்குமா, இருக்காதா?’’ ‘‘கண்டிப்பா இருக்கும். அதுக்கென்ன இப்போ?’’ ‘‘அந்தக் கவலையோட போனா நான் எப்டி கடைத்தேற முடியும்? என் ஆன்மா நிம்மதியா சந்தோஷமா டாட்டா காட்டிட்டு திரும்பிப்பார்க்காம காலனோட கைகோர்த்து ‘வாடா என் புதிய நண்பனே’ன்னு பாட்டு பாடிக்கொண்டு போக வேண்டாமா?’’ ‘‘சரி அதுக்கு இவ என்ன செய்யணும்.?’’ ‘‘சத்தியத்தைக் காப்பாத்தணும்.’’ ‘‘என்ன சத்தியத்தை?’’ ‘‘அவளையே கேளு’’ ரமணன் சொன்னதும், ஹரி திரும்பி மீனாட்சியைப் பார்த்தான். ‘‘என்ன சொல்றான் இவன்?’’ ‘‘இவரோட நான் வந்த அன்னிக்கு ராத்திரி ரெண்டு பேரும் மனசு விட்டு நிறைய பேசினோம். முக்கியமா ரெண்டு பேரும் பரஸ்பரமா ரெண்டு சத்தியம் பண்ணிக்கிட்டோம். ஒண்ணு, எத்தனை கஷ்டம் வந்தாலும் தற்கொலைங்கிற எண்ணம் வராம பார்த்துக்கிறது. ரெண்டாவது, விதியோ, விபத்தோ எங்க ரெண்டுபேர்ல யாருக்காவது கதை முடிஞ்சு போச்சுன்னா மற்றவர் பிராக்டிகலா அந்த துக்கத்தை ஏத்துக்கிட்டு இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா வாழணும். சத்தியம் செய்யும்போது அப்டியெல்லாம் எந்த கஷ்டமும் எங்களுக்கு வராதுன்ற நம்பிக்கைல தைரியமா செய்துட்டேன். ஆனா, அதைக் காப்பாத்தற சக்தி இப்போ எனக்கில்லை. என்னால முடியாது ரமணன்.’’ மீனாட்சி முகத்தைப் பொத்திக் கொண்டாள். ரமணன் ஏதோ பேச முற்பட, ஹரி அவனை பேசாதிருக்க கையமர்த்தினான். ‘‘நீ எழுந்து போ மீனாட்சி’’ என்று அவளை போகச் சொன்னான். அவள் போனதும் ரமணனை முறைத்துப் பார்த்தான். ‘‘நீ ரொம்ப ரொம்ப நல்லவன்; பரந்த மனசுள்ள-வன்னு காட்டிக்கற அவசரத்துல அவ மனசை ஏண்டா காயப்படுத்தற?’’ ‘‘அதில்லடா. அவளுக்கு அதை ஞாபகப்படுத்தினேன். அதோட வேற ஒரு ஆசையும் எனக்குள்ள இருக்கு.’’ ‘‘என்ன ஆசை...’’ ‘‘வேணாம். சமயம் வரும்போது சொல்-றேன் அதை.’’ ‘‘இதோ பார் ரமணா. மீனாட்சிக்கு வேண்டிய தைரியம் இருக்கு. என்ன கஷ்டம் வந்தாலும் அவ சமாளிச்சுப்பா. சத்தியம் செய்துட்-டான்னு அவளை இன்னொரு கல்யா-ணம் பண்ணிக்-கோன்னு வற்புறுத்-தறது தப்பு. அதுவும் நீயே சொல்லும்போது அவ மனசு எவ்ளோ வேதனைப்படும்! கல்யாணம்ங்கிறது காலப்போக்குல அவ மனசே ஏத்துக்க வேண்டிய விஷயம். கடைசி வரைக்கும் தனியா இருப்பேன்னு பேசற பிற்போக்குவாதி இல்லை அவள். தேவைப்பட்டா அவ-ளாகவே நல்ல முடி-வுக்கு வருவாள். அதைப்பத்தி நீ எதுவும் ஞாபகப்படுத்த வேண்டாம். அவளை இன்னொரு வாழ்க்-கைக்குத் தயார்ப்படுத்-தறதை விட்டுட்டு, வாழணுங்கிற நம்பிக்-கையையும் ஆசையை-யும் நீ வளர்த்துக்கப் பார். நீ நம்பி-னாத்தான் நீ சாப்பிடற மாத்திரைகளும் கூடுதல் சக்தியோட நோயைக் குறைக்கப் பார்க்கும்.’’ ‘‘கடவுளே நா என்னடா அப்படி தப்பா சொல்-லிட்டேன்?’’ ‘‘இதுக்கு மேல இதைப்பற்றி அவ-கிட்ட பேசினா தப்பாய்டும்ங்கிறேன்.’’ ‘‘சரி பேசலை. போதுமா?’’ ‘‘அப்புறம் இன்-னொரு முக்கியமான விஷயம்டா ரமணா. ஆனா, சொல்றதா வேணாமான்னு எனக்குத் தெரியலை ‘‘என்னடா சொல்லு?’’ ‘‘உங்கப்பாவைப் பார்த்தேன்.’’ ‘‘எங்கடா... எப்படியிருக்கார்? என்ன சொன்னார்?’’ ரமணன் எழுந்து உட்காரப் பார்க்க... ஹரி அவன் முதுகில் கைகொடுத்து உதவி செய்தான். ‘‘எதுவும் பேசலை. நாந்தான் அவரைப் பார்த்தேனே தவிர அவர் என்னைப் பாக்கலை.’’ ‘‘நீ போய் பேசியிருக்கலாமே.?’’ ‘‘வேண்டாம்னுதான்.’’ ‘‘ஏண்டா.’’ ஹரி சற்று நேரம் சங்கடத்தோடு அவனைப் பார்த்து விட்டுச் சொன்னான். ‘‘அவர் பிச்சை எடுத்துட்டிருந்தார்டா..!’’ ரமணன் ஒரு கணம் கண்களை இறுக மூடிக் கொண்டான். அப்பா பிச்சையெடுக்கும் காட்சி கண்ணுக்குள் ஓடியது. மூடிய விழிகளின் வழியே கண்ணீர் வெளிப்பட்டு வழிந்தது. ‘‘அவரை அந்த நிலையில் பாத்துப் பேசி, அவமானத்திலாழ்த்த விரும்பலை நான். பாத்த கணம் ஆடிப்போய்ட்டேன். எப்படியிருந்தவர் தன் கோவத்தாலயே உறவுகளை இழந்துட்டாரேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. எப்படி இதுக்கு துணிஞ்சார்னு புரியலை. புலி எப்படி புல்லுக்கு இறங்கி வந்தது? உங்கண்ணா என்ன ஆனான்? அவனையும் இவர் உதறிட்டாரா? ஒண்ணும் தெரியலை. நாம என்ன செய்யலாம் சொல்லு.? அவரை இப்படியே விட்டுடக்கூடாதுடா.’’ ‘‘நானாடா அவரை வேணாங்கறேன்? தாராளமா இங்க வரட்டும். போ... போய் இப்பவே நான் இருக்கேன்னு சொல்லி கூட்டிட்டு வா. நான் போனாக் கூட மீனாட்சி பார்த்துப்பா அவரை. மாட்டேன்னு சொல்ல மாட்டா. எங்கடா பார்த்த அவரை?’’ ‘‘காரணீஸ்வரன் கோயில் பக்கத்துல.’’ ‘‘அப்படின்னா அங்கதான் பக்கத்துல எங்கயாவது இருப்பார். உடனே போடா. எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு.’’ ‘‘சரி போறேன். ஆனா, நான் கூப்பிட்டா அவர் வருவாரா?’’ ‘‘மாட்டேன்னு சொன்னா விட்ர முடியுமா? நீ என்ன சொல்லுவியோ... எப்படி அவர் மனசை மாத்துவியோ.. அவரைக் கூட்டிட்டு வந்துடு.’’ ரமணன் கையெடுத்துக் கும்பிட, ஹரி சட்டெனக் கிளம்பினான். -------------------------------------------------------------------------------- 6 ‘எமதர்மனே! உன்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை எனது தந்தையாகிய கௌதமர் புரிந்து கொள்ள வேண்டும். என்னை ஏற்றுக் கொண்டு மனக்கவலை அற்றவராக, தெளிந்த மனத்தினராக, கோபமற்றவராக என்னுடன் பேச வேண்டும். மூன்று வரங்களுள் இதையே முதல் வரமாகக் கேட்கிறேன்’ ரமணனுக்கு இன்னும் நம்ப முடியவில்லை அப்பாவா பிச்சை எடுக்கிறார்? அப்பா எப்படி... நினைக்க நினைக்க துக்கம் பொங்கியது. வெண்கலக் குரலோடு அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்துதானே பழக்கம் அவருக்கு? பிச்சை எப்படிக் கேட்டார் அவர்? குரல் குழைந்து கொடுத்ததா? இரைஞ்சுவதற்கு சம்மதித்ததா? முதுகு வளைந்ததா? ஏன் பிச்சை? யார் கண்ணிலும் காட்டாமல் அவர் சேர்த்து வைத்ததெல்லாம் என்ன ஆயிற்று? அவனுக்கு அப்பாவிடம் அந்தக் காலத்தில் காசுக்காக கெஞ்சி நின்றதெல்லாம் நினைவுக்கு வந்தது. ஸ்கூல் பைனல் பரீட்சைக்கு பணம் கட்டுவதற்குள் அப்பா படுத்திய பாடு... ‘‘வெக்கமாயில்லடா உனக்கு?’’ ‘‘பரீட்சைக்கு பணம் கட்ட எதுக்குப்பா வெக்கம்?’’ ‘‘அடி செருப்பால! தோளுக்கு மேல குதிராட்டம் வளர்ந்திருக்க. வர்றவன் போறவனெல்லாம் அஞ்சும் பத்துமா குடுத்துட்டு போற காசெல்லாம் வாங்கி வெச்சுக்கத் தெரியறதில்ல? அதை எடுத்து பணம் கட்ட வேண்டியதானே. எங்கிட்ட ஏண்டா கை நீட்டற?’’ ‘‘உங்கிட்ட நீட்டாம பக்கத்து வீட்லயா நீட்ட முடியும்? நீதானே என் அப்பா.?’’ ‘‘பேசுவடா. உன் வயசுல இப்படி நான் எங்கப்பாட்ட கேட்டிருப்பேனா... இல்ல கேட்டுடத்தான் முடியுமா? கால் காசு வேணும்னா ஒரு மூட்டை அரிசிய கல்லுரல் போட்டு கை வலிக்க சுத்தி பொடியாக்கி கொடுக்கணும்.’’ ‘‘சரி... இப்போ நான் என்ன செய்யணும் சொல்லு? செய்யறேன். பரீட்சைக்கு பணம் கொடு.’’ ‘‘எங்கிட்ட ஏண்டா வேலை கேக்கற? போய் வெளில செய். பொட்டலம் மடி. பேப்பர் போடு. சம்பாதிச்சு படி.’’ ‘‘சரிப்பா... இனிமே நான் பாத்துக்கறேன். உங்கிட்ட கேக்கல. இந்த ஒரு முறை கட்டிடு. நாளைக்கு கடைசி நாள்.’’ ‘‘கட்டறேன். ஆனா கட்டின பணத்தை ஏப்ரல் மே லீவுல சம்பாதிச்சு தருவியா?’’ அப்பா இப்படிக்கேட்டதும் அம்மா வழக்கம்போல் குறுக்கிட்டாள். ‘‘அவன் சம்பாதிச்சு தருவான். அதுக்கு முந்தி, ரெண்டு பிள்ளையைப் பெத்துப்போட உங்களோட படுத்தேன் பாருங்க... அந்த ரெண்டு ராத்திரிக்கான காசை நீங்க முதல்ல எனக்கு தந்துட்டு அப்புறம் அவங்கிட்ட கேளுங்கோ.’’ அதற்குப் பிறகு அப்பா அடித்த அடியில் அம்மா மூன்று நாள் எழுந்திருக்கவில்லை. அவள் வாங்கின அடிக்கும் கேட்ட கேள்விக்கும் பலனிருந்தது. பதினாறு வயசு பிள்ளைக்கு முன்னால் அம்மா அவரை பச்சையாய் கேட்டது அவரைத் தீராத அவமானத்தில் தள்ளியது. பரீட்சைக்கான பணத்தை வீசியெறிந்தார். அதற்குப் பிறகு அம்மாவிடம் முகம் கொடுத்து பேசுவதைத் தவிர்த்தார். அம்மா காப்பி கொடுத்தால் அதற்கு எவ்வளவு தர வேண்டும் என்று கேட்பார். அவள் பேசுவதற்கும் சிரிப்பதற்கும்கூட காசைச் சுண்டியெறிந்து அவளைக் காயப்படுத்தினார். அந்த சம்பவத்திற்குப் பிறகு அப்பாவிடம் சல்லிக்காசு கேட்கவில்லை. அவன் ப்ளஸ் டூ வில் எடுத்த மார்க்குக்கும் உழைப்புக்கும் ஐஐடியில் என்ஜினீயரிங் சீட் கிடைத்தது. வங்கிக் கடன் பெற்று படிப்பை முடித்தான். கேம்பஸ் இன்டர்வியூவில் நிறைய வெளிநாட்டு வாய்ப்புகள் வந்தன. ‘‘இங்கேயே இருடா கண்ணா. என்னை விட்டுட்டு கடல் கடந்து போய்டாதே.’’ அம்மாவுக்காக அவன் அவற்றை நிராகரித்தான். அவளுக்காகவே சென்னையில் இருந்தான். கை நிறைய சம்பாதித்து அம்மாவிடம் கொடுத்தான். ‘அப்பாட்ட குடுடா’ அவள் கிசுகிசுக்க... அவன் அலட்சியப்படுத்தினான். அதைக்கண்டு அவர் முகம் மாறியது. ‘‘வேணாம் வேணாம். உன்னைப் பெத்ததுக்கு நான் அவகிட்ட கடன் வெச்சிருக்கேன். அவகிட்டயே கொடு. அதான் சரி’’ வக்கிரமாய்ச் சொல்லி தன்னை அலட்சியப்படுத்தியவனைக் காயப்படுத்தினார். மனுஷனா இவர் என்று தோன்றியது. எதனால் இவ்வளவு குரூரம்? இப்படி விஷம் கக்கும் அளவுக்கு யாரும் அங்கு கொடியவர்கள் இல்லையே. நல்ல அம்மா. வாயில்லா அண்ணன். காசுக்கு அண்டி நிற்காத ரமணன். அப்பாவுக்கு அந்த வீட்டில் என்ன பிரச்னை? ஏன் யாரையும் பிடிக்காமல் போயிற்று அவருக்கு? மற்றவர்களை சந்தோஷப்படுத்தி தானும் சந்தோஷிக்க அவருக்குத் தெரியவில்லையா? வண்ணத்துப் பூச்சியை இம்சித்து மகிழும் மூர்க்கத்தனம்தான் அவருக்குப் பிடிக்குமா? அப்பா புரியாத புதிராகவே இருந்தார். அம்மா எப்படி அவரோடு வாழ்ந்தாள் என்பது அதைவிடப் புதிராக இருந்தது. அவள், அண்ணாவைப் போல கோழையும் தலையாட்டியுமில்லை. ரமணனைப் போல அதி துணிச்சல்காரியுமில்லை. எத்தனையோ முறை ரமணன் அவளைத் தன்னோடு வந்து விடும்படி கெஞ்சியிருக்கிறான். அவள் சம்மதிக்கவேயில்லை. ‘‘அக்னி சாட்சியாக சப்தபதி எடுத்து வச்சு சத்தியம் பண்ணிக் குடுத்திருக்கேண்டா. கஷ்டமோ நஷ்டமோ, நீ நல்லவனோ கெட்டவனோ உன்னைப் பிரிய மாட்டேன்னு இத்தனை காலம் தள்ளியாச்சு இனி தள்றதுக்கென்ன? தவிர என்னிக்காவது ஒரு நாள் அவர் குணம் மாறாதா என்ன? அப்படி மாறும்போது நான் அவர்கூட இருக்க வேண்டாமா?’’ அம்மா சிரிப்பாள். அவள் ஆசை நிராசையாகி விட்டது. அவள் காலம் முடியும் வரை அப்பா மாறவேயில்லை. அவருக்கு இந்த வாழ்க்கையில் என்ன திருப்தி கிடைத்ததோ தெரியவில்லை. யாருக்கும் கொடுக்காமல் எல்லோரையும் துன்புறுத்தி அவர் சேர்த்து வைத்த பணத்தை எப்படி இழந்தார்? ஏன் பிச்சை எடுக்கத் துணிந்தார்? இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா? அவன் அப்பாவுக்காகக் காத்திருந்தான். மீனாட்சி, சமைத்துக் கொண்டிருந்தாள். அப்பாவுக்கு என்ன பிடிக்கும் என்று அவன் சொன்னபடி செய்து கொண்டிருந்தாள். நன்றாகச் சாப்பிட வேண்டும் அவருக்கு. அரைக்கிலோ கத்தரிக்காய்க்குதான் காசு கொடுப்பார். அம்மா அதை காரசாரமாக என்னை விட்டு வதக்கி வைத்தால் அடுத்தவருக்கு வேண்டுமே என்ற எண்ணம் கூட இல்லாமல் போடு போடு என்று பிடுங்கி அத்தனையும் உண்பார். அவர் போன பிறகு அம்மா முருங்கைக் கீரையைப் பறித்து அவசரமாய் வதக்கி இவர்களுக்குப் போடுவாள். ‘‘அப்பா ஏம்மா இப்படி இருக்கார்?’’ ஒரு முறை அவன் கேட்டதும் அம்மா சிரித்தாள். தோட்டத்துக்கு அழைத்துச் சென்று ஊமத்தை செடியைக் காண்பித்தாள். அது ஏன் விஷமாயிருக்கு சொல்லு?’’ ‘‘தெரியலையே.’’ அடுத்தாற்போல் துளசிச் செடியைக் காட்டினாள். ‘‘இது ஏன் மருந்தா இருக்கு சொல்லு.?’’ ‘‘தெரியாது.’’ ‘‘எலுமிச்சை ஏன் புளிக்கிறது.?’’ ‘‘தெரியல.’’ ‘‘மிளகாய் ஏன் காரமா இருக்கு.’’ ‘‘தெரியல.’’ ‘‘அததுக்கு ஒரு குணம் இருக்கு. அப்படி இருக்கிறதுதான் அதோட இயல்பு. அப்பாவும் அப்படித்தான். உன் கேள்விக்கு என் பதிலும் தெரியாதுதான். ஏன் எதுக்குன்னு யோசிக்காதே. விடையே கிடைக்காது இதுக்கெல்லாம். ஆனா எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் உண்டு. ஊமத்தை கடைசி வரை விஷமாதான் இருக்கும். துளசி கடைசி வரை மருந்தாதான் இருக்கும். அதே நேரம் மனுஷன் முயற்சி பண்ணினால் தன் விஷத்தை மாத்திக்கொண்டு மருந்தாகலாம். உங்கப்பா தன்னை மாத்திக்கணும்னு வேண்டிக்கிட்டிருக்கேன்.’’ பாவம் அம்மா. அவள் வேண்டுதல் பலிக்கவேயில்லை. அல்லது அவள் வேண்டிக்கொள்வது தெரிந்து அப்பா வீம்புக்கு இன்னும் விஷமாகிப்போனாரோ தெரியவில்லை. வாசலில் அரவம் கேட்டது. ரமணன் படபடப்போடு எழுந்தான். ஹரியின் பின்னால் அழுக்கு உடையும் எண்ணெய் காணாத கேசமும் தாடியுமாய் பஞ்சடைந்த கண்களுடன்.. அப்பாவா... அப்பாதானா அது..? ரமணன் ஆடிப்போனான். இரத்த பாசம் கண்ணீராய்ச் சுரந்தது. யார், யாரிடம் முதலில் பேசுவது, என்ன பேசுவதென்று புரியாமல் மௌனத்தில் கரைந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘‘என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க’’ மீனாட்சி அவர் காலில் விழுந்து மௌனத்தைக் கலைத்தாள். ‘தீர்க்க சுமங்கலியா இருக்கணும்’ அப்பாவின் குரல்கூட பஞ்சடைந்திருந்தது. ‘‘ஹரி எல்லாம் சொன்னான்!’’ அவர் குரல் நடுங்கியது. ‘‘முதல்ல குளிச்சுட்டு வாங்க மாமா. உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் சமைச்சிருக்கேன். சாப்பிட்டப்புறம் பேசலாம். மீனாட்சி அவரை பாத்ரூமுக்கு அனுப்பி விட்டு பீரோதிறந்து புது வேட்டியும் சட்டையும் கொடுத்தாள். திருநீறு டப்பாவையும் கொடுத்தாள். அரைமணியாயிற்று அவர் குளித்து வர. உள்ளே சத்தமின்றி மனம் விட்டு அழுதிருப்பார் போலும். கண்கள் சிவந்து தடித்திருந்தன. மூக்கு நுனி சிவந்திருந்தது. கத்திரிக்காய் கறியும் வத்தக்குழம்பும் அவர் பசியைத்து£ண்டி விட, வாடியிருந்த வயிற்றை முதலில் கவனிக்கத் துவங்கினார் அவர். ‘‘ரொம்ப நொந்து போயிருக்கார்டா பார்த்து பேசு என்ன?’’ ஹரி, ரமணனின் காதருகில் குனிந்து சொல்லி விட்டுக் கிளம்பினான். மீனாட்சி பார்த்துப் பார்த்து பரிவோடு பரிமாறினாள். ‘‘எங்கப்பா இங்க வர்றதுல உனக்கொண்ணும் ஆட்சேபமில்லையே மீனாட்சி?’’ ஹரி சென்ற சில நிமிடங்கள் கழித்து மீனாட்சியிடம் கேட்டான் ரமணன். ‘‘கொஞ்சம் முன்னாடி உங்க பிரண்டுகிட்ட ‘மீனாட்சி பார்த்துப்பா’ன்னு நீங்கதானே சொன்னது? அப்பறம் இதென்ன கேள்வி?’’ ‘‘உன்னைக்கேக்காமயே சொல்லிட்டேனே! தவிர, போகற நேரத்துல உனக்கு ஒரு சங்கடத்தை இழுத்துவிட்டுட்டுப் போய்ட்டேன்னு அப்பறம் நீ நினைச்சு வருத்தப்படக் கூடாது. வேண்டாம்னா பளிச்சுனு சொல்லிடு. நான் எதுவும் நினைச்சுக்க மாட்டேன்.’’ ‘‘செத்தப்பறம் படையல் வைக்கறதைவிட முக்கியம் உயிரோட இருக்கும்போது அவங்க வயிறு வாடாம பாத்துக்கிறதுதான். எனக்கு ஒரு சிரமமுமில்லை.’’ மீனாட்சியின் கடைக்கண் பார்வையில் அப்பா பசியாறிக் கொண்டிருந்த காட்சியை நெகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தான் ரமணன். சாப்பிட்டு கையலம்பிக் கொண்டு தன் அறைக்கு வந்தவருக்கு நாற்காலியைக் காட்டி உட்காரச் சொன்னான் ரமணன். ‘‘நியாயமா எனக்கு பசியடைச்சுப் போயிருக்கணும். நீ இப்டி படுத்துக் கிடக்கும்போது வாரி வளைச்சு எவனாவது சாப்பிடுவானா? ஆனா நாந்தான் மனுஷனே இல்லையே. பசி ஒண்ணுதான் பிரதானமா இருந்தது. அது தீர்ந்தாதான் மத்ததைப் பத்தி யோசிக்க முடியும்போல இருந்தது. அதுதான் வயிறு முட்ட.... என்னை மன்னிச்சுடுடா ரமணா..’’ அப்பா சட்டென்று அவன் கையைப் பற்றி கண்களில் வைத்துக் கொண்டு அழத்துவங்கினார். ‘‘என்னப்பா இது...’’ ரமணன் பதறிப்போனான். ‘‘எனக்கு ரொம்ப சந்தோஷம்ப்பா. இப்பவாவது நீ வந்தயே. இந்த வீட்ல சாப்பிட்டயே. இப்பதான் என் மனசு நிறைஞ்சுதுப்பா.’’ ‘‘ஹரி சொன்னப்போ ஆடிப்போய்யிட்டேண்டா ரமணா. நாசமாப்போகணும்னு இந்த மகாபாவி குரோதத்தோட எத்தனை தரம் சொல்லியிருப்பேன். அதைத்தவிர வேறென்ன தெரியும் எனக்கு.’’ ‘‘அதெல்லாம் இப்ப எதுக்குப்பா. நான் எல்லாத்தையும் அப்பவே மறந்தாச்சு.’’ ‘‘நீ மறந்துட்டாலும் நடந்ததெல்லாம் இல்லைன்னு ஆகிடாதே. நான் ஏண்டா இப்படி இருக்கேன்? வயிறு முட்ட கொட்டிக்கிறதும் கவலைப் படறவனை கரிச்சுக் கொட்டறதுமாவே வாழ்க்கையை ஓட்டியிருக்கேனே? இதுல என்ன கிடைச்சுது எனக்கு? குணம்ங்கிறது என்னடா ரமணா? கடவுள் நமக்கு கொடுக்கிறதா? இல்ல நாமே தேடிக்கிறதா? எனக்கும் இன்னும் புரிஞ்சபாடில்லை. எப்படி புரியும்? வாழ்க்கையைப் பத்தி என்ன தெரியும் எனக்கு? தெரிஞ்சுக்க என்ன முயற்சி பண்ணினேன்? இப்பத்தான் யோசிக்கவே ஆரம்பிச்சிருக்கேன். ஒரு ஆயுசை கெட்டவனாவே வாழ்ந்து வீணடிச்சுட்டேனேன்னு மனசு வலிக்குது. மறுபடியும் ஆரம்பத்துக்குப் போய் எல்லாத்தையும் சரி செய்ய முடியாதான்னு மனசு ஏங்குது. வாழ்க்கைங்கிறது முன்நோக்கி ஓடற நதி மாதிரி, அது திரும்பி வராதுன்னு புரிஞ்சுக்க அறுபத்தஞ்சு வருஷம் வீணடிச்சிருக்கேன் இந்த ராட்சஸன். போனது போகட்டும். பண்ணின பாவத்துக்கு பிராயச்சித்தம் பண்ண இன்னும் கொஞ்சம் ஆயுசு பாக்கியிருக்கே. நான் என்ன பண்ணணும் சொல்லுடா.’’ ‘‘எதுவும் பண்ண வேண்டாம். பழசை எல்லாம் மறந்துடு. அது போதும். ஆனா நீ எப்படிப்பா இந்த நிலைமைக்கு வந்த? அண்ணா என்ன ஆனான்? அவனோடதானே நீ இருந்த? உன் பணமெல்லாம் என்ன ஆச்சு?’’ அப்பாவின் முகம் வாடிப்போயிற்று. பார்வையைத் திருப்பி ஜன்னலுக்கு வெளியில் வெறித்துப் பார்த்தார். ‘‘அவனைச் சொல்லிக் குத்தமில்லை. எவ்ளோ நாள்தான் அவனும் பிள்ளைப்பூச்சியா இருப்பான். சாது மிரண்டா என்ன நடக்குமோ அதுதான் நடந்தது. ஒரு நாள் ஏதோ கோவத்துல அவம்பொண்டாட்டியை அடிச்சுட்டேன். அந்தப் பொண்ணு ஊரையே கூட்டிட்டா. போலீஸ் கேஸாயிடுத்து. அவளை நான் பலாத்காரம் பண்ணி கொலை பண்ண முயற்சித்தேன்னு போலீஸ்காரன்கிட்ட அழுதா. அத்தனை காலம் ஆடின ஆட்டத்துக்கு என்னை அழிச்சுடறதுன்னே பொய் கேஸ் போட்டதா தோணிச்சி எனக்கு. உங்கண்ணாட்ட கெஞ்சினேன். அவன் என் முகத்துல காறித் துப்பினான். நான் அவன் காலைப் பிடிச்சேன். வேற என்ன வேணா எனக்கு தண்டனை கொடுடா... கோர்ட்டும் கேசும் வேண்டாம். இந்த வயசுக்கு அதெல்லாம் என்னால முடியாதுடான்னு அழுதேன். வேணும்னா நீயும் உன் பொண்டாட்டியும் நடு வீதில நிறுத்தி வெச்சு உங்க ஆத்திரம் அடங்கற வரை செருப்பால அடிங்கோன்னேன். அவனும் அவன் பொண்டாட்டியும் தனியா போய் பேசினாங்க. அப்புறம் உங்கண்ணா வந்தான். Ê‘ஓ கே கேஸை வாபஸ் வாங்கிடறோம். ஆனா ஒரு கண்டிஷன். நீ சேர்த்து வெச்சிருக்கற அத்தனை பணத்தையும் கொடுக்கணும். வாங்கிப்போட்டிருக்கற நிலம், அம்மாவோட நகைன்னு அத்தனையும் எங்களுக்கு வந்தாகணும். முடியுமா’ன்னான். அப்புறம் நா பிச்சைதாண்டா எடுக்கணும்னேன். ‘எடு. அதான் உனக்குச் சரியான தண்டனை. அப்பத்தான் மனுஷாளோட அருமை தெரியும்’னான். எல்லாத்தையும் கொடுத்துட்டு வெளில வந்துட்டேன். மொதல்ல அவன் மனசு மாறாதான்ற நப்பாசையிலதான் அவன் கண்ணுல படும்படி அவன் போகும்போதும் வரும்போதுமெல்லாம் பிச்சை எடுத்தேன். ஒரு நாள் அவனும் என் கைல ஒரு ரூபாயை போட்டுட்டுப் போனான். அப்பதான் ரொம்ப உடைஞ்சு போய்ட்டேன். அந்த ஊரை விட்டுக் கிளம்பி வந்துட்டேன். அப்புறம் பிச்சை எடுக்கிறதே பிழைப்பாய் பழகிடுச்சி’’. அப்பா நிறுத்த, மனசு கனத்துப்போயிற்று ரமணனுக்கு, -------------------------------------------------------------------------------- 7 மனதின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது, மனத்தைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும்போது மனிதன் மரணமற்றவனாகிறான். எப்போது ஐம்புலன்களும் மனமும் ஓய்வு நிலையில் இருக்கின்றனவோ, புத்தி முயற்சியற்று இருக்கிறதோ அது மிக மேலான நிலை என்று சொல்லப்படுகிறது. அப்பா அமைதியாய் அமர்ந்திருந்தார். உள்ளும் புறமும் சலனமின்றி இருந்தார். எல்லா ஆயுதங்களையும் வீசி விட்டு இருகரம் தூக்கி விட்ட நிராயுதபாணி அவர். யாரோடும் இனி யுத்தமில்லை என்கிற தீர்மானம் அவருக்குள் அமைதியை ஏற்படுத்தியிருந்தது. கங்கையில் மூழ்கி பாபம் கரைத்து விட்டு அரிச்சந்திர கட்டத்தின் அக்னியின் தீண்டலுக்காக வரிசையில் நின்று விட்டாற்-போலிருந்தது அவரது நிலை. அண்ணா செய்தது சரியா, தவறா என்று புரியவில்லை. அவன் அப்படிச் செய்ததனால் இவர் இப்படி ஆனாரா? அல்லது இவர் பரிசுத்தமாவதற்காக அவன் பாவியானானா? முப்பட்டை கண்ணாடிக்குள் வர்ணக்கற்கள் வெவ்வேறு கோலம் காட்டுவது போல் மனிதர்கள் கூட வெவ்வேறு மாதிரியாவார்களா? காலம், வாழ்க்கை எனும் கூண்டுக்குள் போட்டு குலுக்குகிறதா மனிதர்களை? அப்பாவின் அன்பைப் பெற அம்மா இப்போது இல்லாமல் போய் விட்டாளே என்று தோன்றியது. மெல்லிய பெருமூச்சொன்று அவனிடமிருந்து வெளிப்பட்டது. அன்றிரவு அப்பா நிம்மதியாக உறங்கினார். சாபவிமோசனம் பெற்றுவிட்ட கந்தர்வனைப்போல் ஒரு தேஜஸ் தெரிந்தது அவரிடம். ‘‘பாவமாயிருக்கு’’ மீனாட்சி மாத்திரைகளை எடுத்தபடி சொன்னாள். ‘‘எல்லாரும் பாவம்தான்.’’ ‘‘எல்லாரும்னா?’’ ‘‘நீ, ஹரி, உங்கப்பா, அம்மா எல்லாரையும்தான் சொல்றேன்.’’ ‘‘ஆனா உங்களை அவங்க அப்படி நினைக்கலையே. தானாடாவிட்டாலும் தன் தசையாடும்பாங்க. அவங்களுக்கு எதுவுமே ஆடல.’’ ‘‘அப்படிச் சொல்லாதே. எங்கப்பாவே இப்படி மாறியிருக்கும்போது, அவங்களும் மாறுவாங்க.’’ ‘‘தேவையில்லை. இனி அவங்க மாறினா என்ன... மாறாட்டி என்ன? எனக்கு யாரும் தேவையில்லை.’’ ‘‘இல்ல மீனாட்சி. அப்படிச் சொல்லாதே. யாரும் தேவையில்லங்கிற திமிர்லதான் வெறுங்காலோட உன்னைக் கூட்டிட்டு வந்தேன். ஆனா, இப்ப எல்லாரும் வேணும்னு தோணுது. உனக்கு எல்லாரும் இருக்காங்கன்ற நிம்மதி இருந்தாதான் என்னால எமனுக்கு ஹலோ சொல்ல முடியும்.’’ ‘‘ஆரம்பிச்சாச்சா.?’’ ‘‘உண்மையா சொல்லு மீனாட்சி. நான் பிழைப்பேன்ங்கிற நம்பிக்கை இருக்கா உனக்கு. அல்லது உன் மனசை உறுதியாக்கிட்டு எல்லா துக்கத்துக்கும் தயாராயிட்டியா?’’ மீனாட்சி அவனுக்கு பதில் சொல்லாமல் ரேடியோவை ஆன் பண்ணி எப் எம்மை சரி செய்தாள். மிக மிக இனிமையான பெண் குரலொன்று சன்னமாய் அறையில் இசையை நிறைக்க, இருவரும் மௌனமானார்கள். ‘விடியாத இரவுமில்லை_விடிவெள்ளி முளைத்ததுமுடியாததெதுவுமில்லை_அது முயன்றால் கிடைப்பதுஎனையும் உனையும் ஏன் படைத்தான்?என்றும் ஒன்றாகக் காண்பதற்கு கனவை நினைவாய் மாற்றி விட்டோம்இன்னும் சந்தேகம் ஏன் எதற்கு?புதிய உணர்வோடு எழுந்து நீ பாடுவாழ்வெனும் கவிதையை வாழ்வெல்லாம் இனிமையேஇனியில்லை தனிமையே’ சில நேரம் சில பாடல் வரிகள், நிஜ வாழ்க்கைச் சூழலுக்கும் பொருத்தமாய் அமைந்து விடுகிறது. இருவரின் கண்களிலும் நீர் நிறைந்திருந்தது. ‘‘உங்களுக்காகவே போட்டதுபோல இருக்கு. இனிமேயாவது பாஸிடிவ்வா நினைங்க ரமணன். போய்ட்டா என்ன செய்யறது என்ன செய்யறதுன்னு யோசிக்காதீங்க. இருந்தா இனி என்னவெல்லாம் செய்யணும்னு யோசிங்க.’’ மீனாட்சி சொல்லி முடித்த கணம் ஃபோன் மணி அடித்தது. எழுந்து சென்று எடுத்தாள். ‘‘மீனாட்சி நான்தான் ஹரி. டாக்டர் ரூம்லேர்ந்து பேசறேன். ஒரு நல்ல நியூஸ். டாக்டர் ராய் அடுத்த மாசம் இந்தியா வர்றாராம். ரமணனோட கேஸை அவர் எடுத்துக்க ஒகே சொல்லிட்டாராம். ஜூலை பதினாறாம் தேதி ஆபரேஷன் டேட் ஃபிக்ஸ் பண்ணிக்க சொல்லிட்டாராம். ரமணனை வெள்ளிக்கிழமை அட்மிட் பண்ணிடச்சொல்றார். அன்னிலேர்ந்து அப்ஸர் வேஷன்ல வெச்சு டெய்லி ரிப்போர்ட் அனுப்பணுமாம். டாக்டர் விக்ரம் கிட்ட பேசறியா?’’ ஹரி ரிஸீவரை டாக்டரிடம் கொடுத்தான். ‘‘உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை டாக்டர்’’ என்று தழுதழுத்தாள். ‘‘நா நான் உங்ககிட்ட சில விஷயம் பேசணும் மிஸஸ் ரமணன். நாளைக்கு கொஞ்சம் வந்துட்டு போறீங்களா?’’ ‘‘ஷ்யூர். டாக்டர்’’ மீனாட்சி நம்பிக்கையோடு போனை வைத்து விட்டு ரமணனைப் பார்த்து புன்னகைத்தான். ‘‘டாக்டர் ராய் இந்தியா வர்றாராம்.’’ ‘‘உண்மையாவா..? எப்படி.?’’ ‘‘பிரேயர். யெஸ். என்னோட பிரேயர். ஹரியோட பிரேயர். இன்னும் எத்தனையோ பேரோட பிரேயர். குமுதம் பிரார்த்தனை கிளப்ல உங்களைப் பத்தி ஹரி எழுதிப் போட்டிருந்தார்.’’ ‘‘இஸ் இட்..? எங்கிட்ட சொல்லவே இல்லயே நீ.’’ ‘‘அப்ப சொல்லியிருந்தா நீங்க நம்பி இருக்க மாட்டீங்க. நெகடிவ்வா ஏதாவது சொல்லி இருப்பீங்க. அதான் சொல்லலை. அதோட வலிமையை இப்பவாவது நம்பறீங்களா? எல்லாரும் கைவிட்ட உங்களைக் காப்பாத்திடலாம்னு ஒரு பெரிய சர்ஜன் சொல்லியிருக்கார்னா என்ன அர்த்தம்?’’ ‘‘முன்னாடியே கதையை முடிச்சுடப்போறார்னு அர்த்தம்.’’ ரமணன் சிரிக்க, மீனாட்சி முகம் சுருங்கிப்போனாள். சுளித்த முகத்துடன் அவனை கோபமாகப் பார்த்தாள். ‘‘உங்களைத் திருத்தவே முடியாது ரமணன். உங்கப்பாவை விட மோசமான ஸேடிஸ்ட் நீங்க. உங்கப்பா ஒருவிதமா உங்கம்மாவை டார்ச்சர் பண்ணினா, நீங்க வேறுவிதமா பண்றீங்க.’’ ‘‘அய்யோ நான் சும்மா தமாஷ¨க்கு...’’ ‘‘என்ன தமாஷ்...? எப்போ விளையாடறதுன்னு விவஸ்தை வேணாமா? இதோ பாருங்க ரமணன்... செத்துடுவோம்னு தெரிஞ்ச நாள்லேர்ந்து நீங்க படிக்கற இந்த புத்தகத்தை நானும் படிச்சேன். நசிகேதனாட்டம் எமனை சந்திக்க ஆசைப்பட்டா போதாது. அவனாட்டம் ஒரு சுய மதிப்பீடு செஞ்சுக்குங்க முதல்ல. நான் செஞ்சுக்கிட்டேன் என்னை. நான் நம்பறேன் ரமணன். உங்களை நான் இழக்க மாட்டேன்னு நம்பறேன். என் நம்பிக்கை உங்களை மீட்டுக்கொண்டு வரும். உங்களால முடிஞ்சா நீங்களும் நம்புங்க. முடியாட்டி பேசாம இருங்க. என் நம்பிக்கையை கேலி செய்ய யாருக்கும் உரிமை கிடையாது நீங்க உட்பட.’’ மீனாட்சி விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள். * * * நசிகேதனின் முதல் பலம் சிரத்தை. சிரத்தை என்பது செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை. உள்ளத்தில் அவநம்பிக்கையும், உதட்டில் நம்பிக்கையுமாக இருத்தலல்ல. உள்ளத்தால் நம்புவது. அந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது _ இதுவே சிரத்தை. உன்னை எமனுக்குத் தந்தேன் என தந்தை கூறியதும் நசிகேதன் சிந்தித்தான். பல விஷயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன். பல விஷயங்களில் இடைநிலையிலிருக்கிறேன். என்னை எமனுக்குத் தருவதன் மூலம் தந்தை என்ன சாதிக்கப் போகிறார்? ரமணன் தன்னை சுயமதிப்பீடு செய்ய முயன்றான். தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தான் என்னென்ன முடிவெடுத்தோம், பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டோம், யாருக்கு எந்த வகையில் நன்மை செய்தோம், சந்தோஷப்படுத்தினோம், யாரை எதற்காகக் காயப்படுத்தினோம், தான் செய்தவற்றில் எது தவறு, எது சரி, தன் பலம் என்ன, பலவீனம் என்ன, நிறை என்ன, குறை என்ன என்று தன்னைத்தானே ஆராய்ந்து மதிப்பீடு செய்ததில் பல உண்மைகள் அவனுக்குப் புரிந்தன. எல்லாருக்குமே தான் மிக நல்லவன், தன்னிடம் எந்தத்தவறும் இல்லை, தான் செய்வதெல்லாம் சரியே என்ற எண்ணம் உறுதியாக இருப்பது போல்தான் அவனுக்கும் இருந்திருக்கிறது. யாருக்கும் அவன் கெடுதல் செய்ததில்லை என்றாலும் சின்னச் சின்னக் காயங்கள் ஏற்படுத்தியிருப்பது நிஜம். அப்பா மோசமானவர்தான், அவன் படிப்புக்குக்கூட காசு செலவழிக்காதவர்தான். ஆனாலும், முதல் சம்பளம் வாங்கிய போது அவரை மதித்திருக்கலாம் அவன். நீ எனக்கு என்ன செய்தாய், நான் சம்பாதித்ததை உன் கையில் கொடுத்து ஆசி பெற என்று அலட்சியம் செய்ததால் என்ன கிடைத்தது? அப்பாவுக்கும் அவனுக்குமிடையில் விரிசலை அதிகரித்து, அவரை இன்னும் மூர்க்கனாக்கிற்று என்பதே நிஜம். அவன் மட்டும் அன்றைக்கு சம்பளத்தைக் கொடுத்து நமஸ்கரித்திருந்தால் அப்பா ஒருவேளை நெகிழ்ந்திருக்கக்கூடும். சற்றே தன் குறைகளைப் பற்றி யோசித்திருக்கக்கூடும். பிள்ளையிடம் அன்பைப் பொழியாவிட்டாலும் விஷத்தைக் கக்குவதை குறைத்துக் கொண்டிருப்பாரோ என்னவோ? ஆக, அப்பா இன்னும் அதிக மூர்க்கனாய் மாறியதில் தன் பங்கும் சிறிது இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அடுத்தாற்போல் மீனாட்சியின் அப்பா, அம்மாவும் இவர்களது காதலால் காயப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணை பெற்று வளர்த்து இருபத்து மூன்று வருடம் வளர்த்தவர்களின் உணர்வுகளை மிதித்துவிட்டு இருவரும் மேஜர் என்று, சட்டத்தை கவசமாகப் பிடித்துக் கொண்டு அவர்களது ஆசியின்றி வெளியில் வந்து, காதல் வெற்றிபெற்று விட்டது என்று வாழ ஆரம்பித்தது சரியா, தவறா? அவர்கள் மனதை மாற்றுவதற்கோ, அவர்களது வாழ்த்துக்களைப் பெறுவதற்கோ என்ன முயற்சி செய்தேன்? வெளியில் வந்தது போதாதென்று அதே அடுக்கு மாடியிலேயே அவர்கள் கண்ணெதிரில் வாழ்ந்தது எவ்வளவு பெரிய தவறு. அவர்கள் கௌரவமாய் கம்பீரமாய் வாழ்ந்து கொண்டிருந்த இடத்தில் அவர்களை எத்தனை பேர் எத்தனை விதமாகக் கேள்வி கேட்டு அவமானத்தில் கூனிக் குறுகச் செய்திருப்பார்கள்! ஒரு ராஜாவைப் போல தலை நிமிர்ந்து நடந்தவரை இருட்டிய பிறகு வெளி உலகம் பார்க்கச் செய்திருக்கிறான் அவன். அவர் பக்கத்து நியாயங்களையும், அவரது வலியையும், வேதனையையும் என்றாவது நினைத்துப் பார்த்திருப்பானா? உணர்வதற்கு முயன்றிருப்பானா? இவனுக்கு உடம்புக்கு வந்த பிறகு அவர்கள் யாரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்றதும் அவர்களுக்கு மனிதாபிமானமே இல்லை என்று மீனாட்சிக்கு சமாதானம் சொன்ன அதே நேரம், அதற்கு முன்பே அவளது அம்மாவுக்கு இவள் ஓடிப்போன அதிர்ச்சியில் உடம்புக்கு முடியாமல் போய் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள் என்று தெரிந்தும், மீனாட்சியை அழைத்துக் கொண்டுபோய் மன்னிப்புக் கேட்டு அவள் அம்மாவைப் பார்க்காமல் மனசை கல்லாக்கிக் கொண்டு, மீனாட்சிக்கு விஷயம் தெரிந்தால் அவள் தாங்க மாட்டாள் என்று தனக்குத்தானே ஒரு சமாதானம் சொல்லிக் கொண்டு மீனாட்சியிடம் எதுவுமே சொல்லாமல் மறைத்தபோது அவனது மனிதாபிமானம் எங்கே போயிற்று? அன்றைக்கு அவர்களும் இவனது மனிதநேயத்தை விமர்சனம் செய்யாமலா இருந்திருப்பார்கள்! அன்றைக்கு மட்டும் இவன் மீனாட்சியோடு சென்று நடந்தவற்றிற்கு மன்னிப்பு கேட்டு அவர்களது கோபத்தை எப்பாடுபட்டாவது நீக்கி அன்பைப் பெற முயற்சித்திருந்தால், இன்றைக்கு இவன் கஷ்டத்துக்கு அத்தனை பேரும் வந்து நின்றிருப்பார்களே! ரமணனுக்கு வெட்கமாக இருந்தது. தான் மிக மிக நல்லவன் என்ற பெருமை சிறிய அளவில் அவனுக்குள் இருந்தது. வெளிப்படையாய் பார்த்தால் யாருக்கும் பெரிய கெடுதல் செய்யவில்லை. தான் செய்ததெல்லாம் நியாயமே என்றுதான் தோன்றும். ஆனால் மூன்றாவது ஆளாய் தள்ளி நின்று நடந்தவற்றை ஆராயும் போது, தன் பக்கம் சிறிதும் பெரிதுமாய் எவ்வளவு தவறுகள் இருக்கின்றன. தன்னால் சிலருக்கு எவ்வளவு காயங்கள். வலிகள், அவமானங்கள். அப்புறம் எப்படி தன்னை மிக மிக நல்லவன் என்று இனி எண்ணிக்கொள்ள முடியும்? இந்தத் தவறுகளை எல்லாம் சரி செய்ய என்ன முயற்சி எடுக்கப்போகிறான் அவன்? இவை எல்லாவற்றையும்விட பெரிய குறை மீனாட்சி சொல்வது போல் எதிர்மறையான சிந்தனை. அப்பாவிடம் பணத்தைக் கொடுத்து நமஸ்கரிக்கலாமா என்றுதான் முதலில் தோன்றியது. உடனேயே அப்படியே உருகிவிடப் போகிறாராக்கும். ஏதாவது வெடுக்கென்று சொல்லி அவன் சந்தோஷத்தைக் கெடுப்பார். எதற்கு வம்பு? இப்படி எதிர்மறையாகத்தான் நினைத்தானே தவிர, அப்பா நிச்சயம் நெகிழ்ந்துÊருகிப்போவார் என்று பாஸிடிவாக நினைக்கவில்லையே. அதே போல்தான் மீனாட்சியின் அப்பா அம்மா விஷயத்திலும். பதிலுக்கு அவர்கள் அவமானப்படுத்தி விரட்டி விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் எதிர்மறையாகத் தோன்-றியதே தவிர, தன் அன்பைக் கொடுத்து அவர்களது காயங்களை ஆற்றி அவர்களது மனதின் அடியாழத்திற்குப் போய்விட்ட பாசத்தை மேலே எழுப்பி மீனாட்சிக்கு பெற்றுக் கொடுக்க தன்னால் முடியும் என்று ஏன் தோன்றவில்லை. மீனாட்சி சொல்வதுபோல் தனக்கு பாஸிடிவ் திங்க்கிங்கே கிடையாது என்பது உண்மைதானா? பல விஷயங்களில் நான் முதல் நிலையில் இருந்தாலும், பல விஷயங்களில் ரெண்டுங்கெட்டானாகத்தான் இருக்கிறேனா? ரமணன் வெட்கப்பட்டான். தன்னை மாற்றிக் கொள்ள முடிவெடுத்தான். -------------------------------------------------------------------------------- 8 ‘உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று உடம்பினையானிருந்து ஓம்புகின்றேனே’ இதைச்சொன்ன போது அப்பாவின் கண்களில் நீர் நிறைந்தது. ‘‘இந்த திருமந்திரத்தை பதினெட்டு இருபது வயதில் படித்துப் புரிந்துகொண்டிருந்தால் இந்த கோயிலை எவ்வளவு சுத்தமாக எத்தனை பேருக்கு உபகாரமாகப் பேணிக் காத்திருப்பேன்! ஆனா, வெறும் சாக்கடையிலல்லவா இத்தனை காலம் ஊறப்போட்டிருந்தேன்! நல்லகாலம் இப்பவாவது வெளில எடுத்தேனே. ‘‘உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன். எனக்காகவே எழுதி வச்சுட்டுப் போனாப்பல இருக்குடா ரமணா! இப்போ சொல்லு. எதுக்காக இந்த உடம்பை நமஸ்காரம் பண்ணின?’’ ‘‘முதல் சம்பளம் வாங்கியபோது உனக்கு பண்ணாம விட்டுப்போன நமஸ்காரம்ப்பா இது.’’ அப்பா கண்ணை மூடி துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். ‘‘தீர்க்காயுசா நல்லாயிருப்பா. மீனாட்சி இன்னும் வரலையா டாக்டரைப் பார்த்துட்டு.?’’ ‘‘வந்துடுவா. வந்துட்டான்னு நினைக்கறேன்.’’ அவன் சொல்லும்போது மீனாட்சி உள்ளே நுழைந்தாள். ‘‘டாக்டர் என்னம்மா சொன்னார்? நாளைக்கு அட்மிட் பண்ணிடச் சொன்னாருப்பா.’’ ‘‘இவனைக் காப்பாத்திடுவார்தானே?’’ ‘‘கண்டிப்பா.’’ மீனாட்சி உள்ளே போனாள் _ அவள் முகத்தில் ஏதோ சிந்தனை. ‘‘ஐம்பது சதவிகிதம் பிழைப்பதற்கு வாய்ப்புள்ளது.’’ டாக்டர் சொன்னது காதில் ஒலித்தது. ‘ஐம்பதுதானா? கண்டிப்பா காப்பாத்திடுவேன்’னு சொல்வீங்கன்னு நினைச்சேனே டாக்டர். இப்போ ஐம்பது சதவிகிதம்னு சொல்றீங்க.?’ ‘இனி வாய்ப்பே இல்லன்னு அத்தனை பேரும் கை விட்ட விஷயத்துல இப்போ ஐம்பது சதவிகிதம் நம்பிக்கை கொடுக்கிறாரே ஒருத்தர். அதுக்காக சந்தோஷப்படும்மா. ரிஸ்க் எடுக்காம வெற்றி எப்படிக் கிடைக்கும்? நாளைக்கு. ரமணனை அட்மிட் பண்ணிடுங்க. நாளைலேர்ந்து அவரோட ஹெல்த் கண்டிஷனை அப்ஸர்வ் பண்ணி ரிப்போர்ட் அனுப்பணும். அப்பறம் அட்வான்ஸா ஐம்பதாயிரம் கட்டிடுங்க. ஆபரேஷனுக்கு ஐந்து லட்சம் வரை செலவாகக்கூடும். ரெடி பண்ணிவெச்சுக்கோங்க.’ ‘‘என்னம்மா பால் பொங்குதே. என்ன யோசனை?’’ அப்பாவின் குரல் கேட்க, சட்டென்று அடுப்பை அணைத்தாள். ‘‘என்னாச்சும்மா. உன் முகத்துல தெரியறது பதற்றமா, பயமா, கவலையா?’’ ‘‘ஒண்ணுமில்லப்பா’’ ‘‘ஏதோ இருக்கு. அவன் முன்னால சொல்றதுக்கு தயங்கிற. டாக்டர் என்ன சொன்னார். மறைக்காம சொல்லு.?’’ ‘‘காப்பாத்திடலாம்ங்கறார். ஆனா...?’’ ‘‘ஆனா என்ன?’’ ‘‘அவர் சொல்ற பணம்தான் மலைப்பா இருக்கு. நாளைக்கு ஐம்பதாயிரம் கட்டணுமாம். ஐந்து லட்சம் வரை செலவாகுமாம். அவ்ளோ பணம் கைல இல்லையே.’’ அவள் சொன்னதும் அப்பாவின் முகம் இருண்டது. ‘‘எங்கிட்ட இருந்ததும்மா. ஏழு லட்சம் வச்சிருந்தேன். ஆனா, எல்லாத்தையும் மூத்தவன் பிடுங்கிட்டானே. நான் என்ன செய்வேன்...?’’ ‘‘பார்க்கலாம்ப்பா. இவ்ளோ தூரம் கொண்டு வந்து விட்ட தெய்வமே அதுக்கும் ஒரு வழி காட்டும். எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க. என் நகைகளைத் தரேன். அதை அடகு வச்சோ இல்ல வித்தோ எவ்ளோ கிடைக்கிறதோ வாங்கிட்டு வாங்க.’’ அவள் உள்ளே போய் கல்யாணமான புதுசில் ரமணன் ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுத்தவற்றை ஒரு பையில் போட்டுக் கொண்டுவந்தாள். ‘‘பத்திரம்ப்பா. உங்க பிள்ளை உசிர்ல கொஞ்சம் இதுல இருக்கு. ஜாக்கிரதையா கொண்டு போங்க. நான் அதுக்குள்ள ஹரிக்கு போன் பண்ணி ஆபீஸ் மூலம் எவ்ளோ கிடைக்கும்னு கேக்கறேன்.’’ ‘‘நீ கவலைப்படாதம்மா. நான் வந்துடறேன்.’’ அவர் பையை பத்திரப்படுத்தி எடுத்துக் கொண்டு சென்றார். மீனாட்சி ஹரியை அவனது செல்போனில் பிடித்து விஷயத்தைச் சொன்னாள். ‘‘நேத்தே டாக்டர் எங்கிட்டயும் சொன்னார். ஆபீஸ்ல மிஞ்சிப் போனா ஒரு லட்சம் கிடைக்கும். ஆனா ‘‘பணத்தைப் பத்தி நீ கவலைப்பட வேண்டாம் மீனாட்சி. எங்கிட்ட இருக்கு.’’ ‘‘ஏது..?’’ ‘‘என் சேமிப்பு, ப்ளஸ், ஆபீஸ்ல லோன் போட்டிருக்கேன். எல்லாம் சேர்ந்தா அஞ்சு லட்சம் தேறிடும்.’’ ‘‘எங்களால எவ்ளோ கஷ்டம் ஹரி உங்களுக்கு.’’ ‘‘நீ என் கூடப்பிறந்த சகோதரியா இருந்தா செய்ய மாட்டேனா..? தவிர ஒருவேளை இந்த நிலைமைல நான் இருந்தா ரமணன் என்ன செய்வானோ அதைத்தான் நான் செய்யறேன்.’’ மீனாட்சி போனை வைத்தாள். நல்லவன் ஒருவனை நண்பனாய்க் கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொன்னாள். ‘‘மீனாட்சி... ஒரு நிமிஷம் வாயேன்.’’ ரமணன் அழைத்தான். ‘‘என்ன..?’’ ‘‘சாயங்காலம் என்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப் போகணும்.’’ ‘‘எங்கே...?’’ ‘‘போகும்போது சொல்றேன். ஆபரேஷனுக்கு நிறைய பணமாகுமே. என்ன செய்யப்போற?’’ ‘‘என் சகோதரன் ஏற்பாடு பண்ணி வச்சிருக்காராம்.’’ ‘‘சகோதரனா... என்ன சொல்ற?’’ ‘‘ஹரியைச் சொன்னேன். அவர் சொன்னதைச் சொன்னேன்.’’ மீனாட்சி இப்படிச் சொன்னதும் ரமணனின் முகம் அதிர்ந்தது. சட்டென்று மௌனமானான் அவன். * * * ‘‘என்னங்க. ஆட்டோ வந்தாச்சு. எங்க போகணும்? புறப்படலாமா?’’ ஆறு மணிக்கு அவள் கேட்ட போது அவன் தயாராக இருந்தான். அவனை பத்திரமாக கீழே அழைத்து வந்து ஆட்டோவில் ஏற்றி விட்டு தானும் அமர்ந்தாள். ‘‘எங்க போகணும்?’’ ‘‘நம்ம பழைய அபார்ட்மெண்ட்டுக்கு.’’ அவள் திரும்பினாள். ‘‘அங்க எதுக்கு.?’’ ‘‘அங்க ஒருத்தரைப் பார்க்கணும்’’ ‘‘யாரை?’’ அவன் பதில் சொல்லவில்லை. ஆட்டோ அரை மணியில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முன் நின்றது. லிப்ஃட்டில் நுழைந்து மூன்றாவது மாடியை அழுத்தினான். சில நொடிகளில் அவள் அப்பாவின் வீட்டிற்கு முன் நின்றான். ‘‘என்னாச்சு உங்களுக்கு ரமணன்?’’ அவன் பதில் சொல்லாமல் அழைப்பு மணியை அழுத்தினான். கதவைத்திறந்த அவளது அப்பாவின் முகம் இவர்கள் இருவரையும் கண்டதும் சட்டென்று ஷாக்காயிற்று. செயலற்று நின்றார். சில வினாடிகள்தான். சட்டென கடுமை பரவியது. ‘‘எங்க வந்தீங்க? என்ன வேணும்?’’ ‘‘உள்ள வந்து சொல்றேனே. ப்ளீஸ்’’ அவர் சற்றே தயக்கத்துடன் விலக... அவன் அவர் மனம் மாறுவதற்குள் அவசரமாக உள்ளே நுழைந்தான். சத்தம் கேட்டு அடுக்களையிலிருந்து எட்டிப்பார்த்த அம்மா சிலையாய் நின்றாள். மளுக்கென்று அவள் கண்கள் உடைந்தன. ‘‘எதுக்கு வந்தீங்க?’’ அவர் அவனை முறைத்துப் பார்த்தபடி கேட்டார். ‘‘உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேக்க’’ அவன் சட்டென்று மீனாட்சியின் கையைப் பிடித்தபடி அவர் காலில் விழுந்தான். அவர் இதை எதிர்பார்க்காதவர் போல் தடுமாறினார். ‘‘காதல்ங்கிற பேரால உங்க கௌரவத்தைக் கூறு போட்டு வித்துட்டு இவளைக் கூட்டிட்டுப் போனது இப்போ நினைச்சா எனக்கு வெக்கமா இருக்கு. எவ்ளோ அரைவேக்காட்டுத்தனமான முடிவு அது! உங்க அன்பு, பாசம், உணர்வுகள் எல்லாத்தையும் மிதிச்சு துவம்சமாக்கிட்டுப் போற அளவுக்கு எது என் கண்ணை மறைச்சுதுன்னு தெரியல. வயசா, பக்குவமில்லாமையா... எனக்கு புரியல. ஆனா அதுக்காக இப்ப வருத்தப்படறேன். என்னை உங்களுக்குப் புரிய வெச்சிருக்கணும். நான் இவளை நல்லா வெச்சுப்பேன்ற நம்பிக்கையை உங்களுக்கு ஏற்படுத்த முயற்சித்திருக்கணும். உங்க மனசு மாறுகிற வரை நம்பிக்கையோட கண்ணியத்தோட காத்திருந்திருக்கணும். நான் என்னல்லாம் செய்திருக்கணும்னு இப்பதான் எனக்குத் தெரியறது. செய்த தவறை இனி அழிச்சுட்டு சரி செய்ய முடியாது. ஆனா ஒண்ணு. தப்பான முறையில நான் இவளைக் கூட்டிட்டு போனாலும் ஒரு நல்ல கணவனாதான் இவளோட வாழ்ந்துட்டிருக்கேன். செய்த தப்புக்கு பிராயச்சித்தமா இப்ப என்னால செய்யக்கூடியது ஒண்ணே ஒண்ணுதான். மன்னிப்பு! உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கதான் வந்தேன். பெரியவங்க நீங்க எவ்ளோ நொந்து போயிருப்பீங்க. சபிச்சு கூட இருந்திருப்பீங்க. உங்க வேதனையோ, இல்ல ஊழ்வினையோ. நான் இப்போ வாழ்வா சாவான்ற கட்டத்துல நிக்கறேன். அதுக்கு முன்னால உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுடணும்னு வந்திருக்கேன். நீங்க மன்னிச்சு, மனசார செய்யப்போற ஆசீர்வாதம் என்னை வாழ வைக்கும்னு நம்பறேன்.’’ அவன் கை கூப்பியபடி நின்றான். அவர் அவனையே பார்த்தார். அவர் முகத்தில் ஆச்சர்யம், அதிர்ச்சி, வேதனை, பரிவு என்று கலவையாய் பல உணர்வுகள் மாறி மாறி வெளிப்பட்டன. ‘‘ஒரு நிமிஷம்’’ உள்ளே போனவர் திரும்பி வரும்போது கையில் எதையோ எடுத்து வந்தார். அவன் நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டுவிட்டவரது கை சற்றே உயர்ந்து அவனது தலை தொட்டு ஆசீர்வதித்தது. மீனாட்சி அவர் தோளில் சாய்ந்து குழந்தை மாதிரி அழுதாள். ‘‘சாப்பிட ஏதாவது ரெடி பண்ணு’’ அவர் மனைவியிடம் சொன்படி மகளை பரிவோடு அணைத்துக் கொண்டார். -------------------------------------------------------------------------------- 9 ‘‘மிஸ்டர் ரமணன் இந்த டெஸ்ட் கொஞ்சம் பெய்ன்ஃபுல்லா இருக்கும். உங்க மனசை வேற எதுலயாவது டைவர்ட் பண்ணிக்குங்க’’ டாக்டர் சொல்ல, ‘‘எப்டி?’’ என்றான். ‘‘உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களை நினைச்சுப் பாருங்க. அல்லது பிடிச்ச பாட்டு பாடுங்க, இல்ல பிடிச்ச கவிதை சொல்லுங்க..’’ ரமணன் உடனே சொல்ல ஆரம்பித்தான்... ‘‘தேடிச்சோறு நிதந்தின்று_பலசின்னஞ்சிறு கதைகள் பேசி_மனம்வாடித் துன்பமிக உழன்று_பிறர்வாடப் பல செயல்கள் செய்து_நரைகூடிக் கிழப்பருவ மெய்தி_கொடுங்கூற்றுக்கிரையெனப்பின் மாயும்_பலவேடிக்கை மனிதரைப் போலே_நான்வீழ்வேனென்று நினைத்தாயோ? நின்னைச் சில வரங்கள் கேட்பேன்_அவைநேரே இன்றெனக்குத் தருவாய்_என்றன்முன்னைத் தீயவினைப் பயன்கள்_இன்னும்மூளா தழிந்திடுதல் வேண்டும்_இனிஎன்னைப் புதியவுயிராக்கி_எனக்கேதுங்கவலையறச் செய்து_மதிதன்னை மிகத் தெளிவு செய்து_என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்தோளை வலிவுடையதாக்கி_உடற்சோர்வும் பிணி பலவும் போக்கி...’’ரமணன் நிறுத்தினான்.‘‘ஏன் நிறுத்திட்டீங்க... சொல்லுங்க?’’ ‘‘என் பிணியும் சோர்வும் நீங்கிடுமா டாக்டர்?’’ ‘‘கண்டிப்பா. நம்பிக்கையோட எங்களுக்கு ஒத்துழைங்க. எங்க டிரீட்மெண்ட்டுக்கு பலம் சேர்க்கறதே பேஷண்ட்டோட நம்பிக்கைதான். பாரதியைப் பார்த்தீங்க இல்ல. அவனுக்குதான் எவ்ளோ நம்பிக்கை. எத்தனை கனவு. இப்படி சொடக்கு போட்டு பராசக்தி கிட்ட வரம் கேக்கற துணிச்சல் வேற யாருக்கு வÊரும்? ‘நின்னைச் சில வரங்கள் கேட்பேன்_அதை நேரே இன்றெனக்குத் தருவாய்.’ஆஹா...இதைச் சொல்லும் போதே எவ்வளவு சக்தி பரவுது உடம்-புக்குள்ள..?’’ டாக்டர் தனது பரிசோதனையை முடித்துக் கொண்டு அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார். ‘‘எப்டிடா இருக்க..?’’ டாக்டர் போனதும் உள்ளே வந்தான் ஹரி. ‘‘நம்பிக்கையோட இருக்கேன்.’’ ‘‘வெரி குட்... மீனாட்சி எங்கே?’’ ‘‘டாக்டர் கூடப் போயிருக்கா. உக்காருடா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.’’ ‘‘என்ன விஷயம்? ஆனா எதுவா இருந்தாலும், ‘ஒரு வேளை நான் போய்ட்டேன்னா’ன்னு பழைய பல்லவியை ஆரம்பிக்கறதா இருந்தா நீ பேசவே வேண்டாம்.’’ ‘‘இல்லடா. இப்ப நான் புது ரமணன். கண்டிப்பா இந்த ஆபரேஷன் சக்ஸஸ் ஆகும். என் மரணத்தை இன்னும் பதினஞ்சு இருபது வருஷத்துக்கு ஒத்தி போடச்சொல்லி எமங்கிட்ட வரம் கேட்டிருக்கேன். இதுவரை நான் கேட்ட இரண்டு வரத்தை அவன் கொடுத்துட்டான். முதல் வரம் எங்கப்பாவோட அன்பு கிடைக்கணும். இரண்டாவது வரம், மீனாட்சியோட அப்பா அம்மா எங்களை மன்னிச்சு வாழ்த்தணும். இது ரெண்டும் நடந்தாச்சு. மூணாவது இன்னும் கொஞ்ச காலம் நான் வாழணும். உங்க எல்லாரோடயும் சந்தோஷமா வாழ்ந்து எனக்குன்னு சில அடையாளங்களை விட்டுட்டுப் போகணும். இதுவும் கிடைச்சுடும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு.’’ ஹரி வியப்பும் மகிழ்வுமாக அவனை விழியகலப் பார்த்தான். நண்பனின் இந்த நம்பிக்கையும் உற்சாகமும் சந்தோஷமாக இருந்தது. ‘‘இருந்தாலும் உங்கிட்ட நான் ஒரு விஷயத்துக்கு மன்னிப்பு கேக்கணுண்டா ஹரி.’’ ‘‘எதுக்குடா..?’’ ‘‘ஒரு அபத்தமான கோரிக்கையை உங்கிட்ட கேக்கறதா இருந்ததுக்கு.’’ ‘‘என்ன கோரிக்கை?’’ ‘‘ஒரு வேளை நான் போய்ட்டா, என்னையும் மீனாட்சியையும் நல்லா புரிஞ்சுக்கிட்டவன்ங்கற முறையில மீனாட்சியை நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்ல இருந்தேன். அது எவ்ளோ பெரிய அபத்தம்னு அப்ப தெரியல. அவளுக்கு நீ ஒரு சகோதரன் மாதிரி உதவி செய்யறப்போ எனக்கு ஏன் அப்படி ஒரு அபத்தமான... மன்னிச்சுடுடா ஹரி. எனக்குள்ள எனக்கே தெரியாம நிறைய தவறுகள் சின்னதும் பெரிசுமா இருக்கு. ஆனா. இப்பல்லாம் என்னை நானே விலகி நின்னு உற்றுப் பார்த்து இது சரி இது தப்புன்னு புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டேன். இதனால என் எண்ணங்களையெல்லாம் ரெகுலேட் பண்ணிக்க முடியுது. மொத்தத்துல ஒரு புது சக்தி எனக்குள்ள ஏற்பட்டிருக்குடா. நல்ல மனைவி, நல்ல நண்பன், நல்ல தகப்பன், நல்ல உறவுகள்... இதெல்லாம் எனக்குக் கொடுத்திருக்கிற சக்தி அது.’’ ஹரி அவனை அணைத்துக்கொண்டான். தன் ஸ்பரிசத்தின் மூலம் அவனுக்குள் அன்பு பாய்ச்சினான். * * * அவன் அறுவை சிகிச்சைக்குத் தயாரானான். மிக மிக சிக்கலான சிகிச்சை. வாழ்வும் மரணமும் சரிபாதியாக அவனது தராசுத் தட்டுகளில் மேலும் கீழும் ஊசலாடிக் கொண்டிருக்க, அவன் நம்பிக்கையோடு தயாரானான். பயமும் துக்கமும் தவிப்புமாய் தன்னோடு தியேட்டர் வரை வந்த மீனாட்சி, ஹரி, அப்பா, மீனாட்சியின் அப்பா, அம்மா எல்லோரையும் பார்த்துச் சிரித்தான். கட்டை விரல் உயர்த்தி அவர்களுக்கு தைரியம் சொன்னான். ஹரியை அருகில் அழைத்தான். ‘‘கண்டிப்பா வருவேன். கஷ்டப்பட்டு நீ கட்டியிருக்கற அஞ்சு லட்சத்தை சம்பாதிச்சு உனக்கு திருப்பித் தர வேண்டாமா?’’ ‘‘அதானே.. உன்னை யார் விட்டது? நீ போய்ட்டு வா. நான் அதுக்கான வட்டி எவ்ளோன்னு கணக்கு போட்டு வைக்கறேன். அதையும் சேர்த்துக் கொடுத்துடு என்ன?’’ ‘‘ஷ்யூர்.’’ ஆபரேஷன் தியேட்டர் கதவு மூடிக்கொண்டது. ரமணன் மெல்ல கண்களை மூடிக்கொண்டான். ‘உண்மையற்ற நிலையிலிருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச்செல்வாயாக!அறியாமை இருளிலிருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக. மரணத்திலிருந்து என்னை, மரணமில்லா பெரு நிலைக்கு அழைத்துச் செல்வாயாக..! ஓம் சாந்தி சாந்தி சாந்தி..’ முணுமுணுத்தபடி மயக்க நிலைக்குச் சென்றான். கத்திகளும், கத்திரிக்கோல்களும் அவனுக்கு உயிர் கொடுப்பதற்காக உயிர் பெற்றன. ரமணனுக்காக பல இதயங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தன.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org