<$BlogRSDUrl$>

மனத்தின் குரல்

அவசரமாக ராக்கெட் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தினிலே மனங்களுடன் மனம் திறக்க விரும்புகின்றேன். மனது கொஞ்சம் இலேசாகின்றது. எம்மைச் சுற்றியுள்ள இந்தச் சமுதாயத்திற்காக நாம் வாழ்கின்றோமா? அன்றி எமக்காக இந்தச் சமுதாயாமா? இது மனதினிலே விடையின்றி தொங்கிக் கொண்டிருக்கும் ஓர் வினா. நாம் புரியும் காரியங்களிலோ அன்றி அவற்றிற்கான காரணங்களிலோ சமுதாயத்தின் தாக்கங்கள் நிச்சயமாய் நிதர்சனமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகின்றது. நாம் எம்மை அறியாமலே எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும் ஓர் மன நிலையை எய்துகின்றோம். பல சமயங்களில் எமது தராசுத்தட்டு நாம் எதனோடு அன்றி எவரோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றோமோ அந்தத் தட்டை விட மேலேயே நிற்கின்றது. இது எமது எதிர்பார்ப்புக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றது. ஓர் சிறிய உதாரணத்தை எடுத்தோமானால் ஓர் நகைக்கடைக்குப் போகின்றோம். உள்ளே நுழையும் போது என்ன வாங்கப் போகின்றோம் என்ற ஓர் தீர்மானத்துடன் தான் போவதாக எண்ணுகின்றோம் ஆனால் அந்தக் கடையை விட்டு வெளியேறும்போது முற்றிலும் வேறுபட்ட ஓர் பொருளுடன் வருகின்றோம். உள்ளே சென்றதற்கும், வெளியே வருவதற்கும் இடைப்பட்ட அந்த நேரத்தினிலே எமது மனத்தினிலே எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஒப்பிடுகை ஆகிய உணர்ச்சிகளுக்கிடையே ஓர் போராட்டம் நடக்கின்றது. இந்த உணர்ச்சிகளில் எது வெற்றி பெறுகின்றதோ அதன் விளைவே நமது கைகளில் இறுதியாய் தவழும் அந்தப் பொருள். வாழ்க்கையிலே ஓர் கொள்கையைக் கொண்டிருப்பதாக எண்ணுகின்றோம். இது ஓர் போலியான நம்பிக்கையே. மிகவும் எளிமையாக எனது வாழ்க்கையை நடத்துவேன் என கொள்கையுடைய ஓர் இளைஞன் இல்லற வாழ்வில் நுழைகின்றான். அவனது கொள்கை இரயில். சமுதாயம் எனும் தண்டவாளத்தின் சீரற்ற நிலையினால் தடம் புரளுகின்றது. அவனைச் சுற்றி குடும்பம் எனும் அன்பு வலை சமுதாயம் எனும் புயல் காற்றின் உதவியுடன் அவனை இறுகப் பின்னி விடுகின்றது. எளிமையான வாழ்க்கை எனும் அவனது கொள்கை தொலைவில் நின்று அவனைப் பார்த்து ஏளனச் சிரிப்பொன்றை உதிர்க்கின்றது. அவனைச் சுற்றியுள்ள அவனால் தேடப்பட்ட சொந்தங்களின் தாக்கங்களினால் அவனது வாழ்க்கை முறை மாறுகின்றது. எதை அவசியமற்ற வீணான செலவுகள் என்று எண்ணினானோ அவை அத்தியாவசியமாகின்றன. அப்போதுதான் மனத்தினிலே உறங்கிக் கொண்டிருந்த உண்மைகள் விழித்துக் கொள்கின்றன. சமுதாயத்தின் தாக்கத்தின் விளைவுகள் வாழ்வின் பாதையை மாற்றும் வித்தையை மெத்தெனக் கற்றுக் கொள்கின்றோம். கொள்கை கண்ணாடி அலுமாரியில் ஷோவிற்காக வைத்து அழகு பார்க்கும் ஓர் பொருள் எனும் உண்மை விளங்குகின்றது. சமுதாயமின்றி நாமில்லை, நாமின்றி சமுதாயமில்லை. ஆனால் யார் யாரை நடத்திச் செல்கின்றார்கள் என்பது இன்றுவரை பலரின் மனதினில் விடையற்ற வினாவாகவே இருக்கின்றது என்பது தான் உண்மை. மனத்தினிலே தூக்கி வந்த சுமையில் ஓர் பங்கை இறக்கி விட்டேன், பாரம் குறைந்த மனத்துடன் என் பயணத்தை மீண்டும் தொடர்கின்றேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

கொசு மகன்

வணக்கம் என் அருமை ரத்தத்தின் ரத்தங்களே, உங்கள் காதுகளில் ரீங்காரம் செய்வது கொசு இந்த மனுஷங்களும் எங்களை அழிப்பதற்கு என்னென்னமோ முயற்சி எடுக்கிறாங்க, உலகம் முழுவதும் கோடிக்கணக்கில பணம் செலவழிக்கிறாங்க. ஆனால் எந்தத் தடை வந்தாலும் நாங்க தகர்த்தெறிஞ்சுட்டு, சாம்பலிருந்து உயிர்த்தெழும் ·பீனிக்ஸ் பறவை போல சிறகடிச்சு பறந்துட்டு தான் இருக்கோம்.மற்ற விலங்குகள், மீன்,பறவைகளையெல்லாம் பிடிக்கிறதுக்கு வலை வீசும் மனுஷனையே வலைக்குள்ள சிறை வச்ச பெருமை எங்களையே சாரும். அதுவும் அந்த வலைக்குள்ள நாங்க நுழைஞ்சுட்டா, அவன் கதி அதோ கதி தான். இப்பல்லாம் நைட் குளிரா இருந்தா நாங்க குளிர் காய்வதே கொசுவர்த்திச் சுருள் புகையில தான், குட் நைட் மேட்டில தான் குட்டித்தூக்கம் போடுறோம். அது இதுன்னு ரசாயன பூச்சிக்கொல்லியை உபயோகித்து மனுஷங்க தான் ஆள் Out ஆகிக் கிட்டு இருக்காங்க! ஏதோ கடவுள் அருளால பொழைப்பு நல்லாவே போயிட்டு இருக்குங்க. மற்ற ஜீவராசிகள் எல்லாம், தினம் தினம் சாப்பிட்டுக்காக எவ்வளவோ கஷ்டப்படவேண்டியதிருக்கு. ஆனால் எங்களுக்கோ, மனுஷங்க, ஒவ்வொருத்தரும் சராசரியா 5 லிட்டர் எங்க உணவுப்பொருளோட(அதாங்க ரத்தத்தோட) அலைஞ்சிட்டு இருக்காங்க. அதனால எங்களுக்கு உணவுப் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை. தான் உடம்பில ஓடுற ரத்தத்தையே எங்களுக்கு உணவா கொடுக்கிற மனுஷங்களுக்கு எங்களால எதுவுமே திருப்பி தரமுடியல. அதனால தான் ஏதோ எங்களால முடிஞ்ச அளவிற்கு மலேரியா, ·பைலேரியா, டெங்கு என வாரி வழங்கிட்டு வருகிறோம். அப்புறம் ஊரெல்லாம் தேர்தல் ஜுரம் அனலா வீசிட்டிருக்கு. நம்ம நாட்டுல மனுஷ ஜனத்தொகையைவிட எங்க ஜனத்தொகை தான் அதிகம்.அப்படியிருக்கும் போது நாங்க ஏன் தேர்தல்ல போட்டியிடக்கூடாது? அரசியல்வாதிகளுக்கும் எங்களுக்கும் ஒன்னும் வித்தியாசம் இல்லை. நாங்க ரெண்டு பேருமே அப்பாவி மக்களோட ரத்தத்தை உறிஞ்சு தான் பொழைப்பு நடத்துறோம். ஐயா மனுஷங்களா, வெயில் காலம் வந்துருச்சு. சீக்கிரம் ஏதாவது பண்ணி தண்ணீர் தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கோங்க. உங்களை விட எங்களுக்கு தான் தண்ணீர் ரொம்ப அவசியம். உங்களுக்காவது குடிக்க, குளிக்க தான் தண்ணீர் தேவை. எங்களுக்கோ எங்கள் இனத்தைப் பெருக்குவதற்கு தண்ணீர் ரொம்ப அவசியம். எங்க அப்பா, தாத்தா காலத்தில் எல்லாம், எங்க ஆளுங்க ஆண்களை தான் அதிகமாக கடிப்பாங்களாம். ஏன்னா பெண்கள் அஞ்சு கெஜம் புடவையை சுத்திக்கிட்டு இருப்பாங்க. இந்த ஆண்கள் தான் வேட்டியை மடிச்சுக் கட்டிட்டு வெற்றுடம்போட அலைவாங்க. ஆனால் இப்ப எங்க காலத்துல ஆம்பளைப் பசங்க முழுக்கை சட்டை, கோணியில தைச்ச மாதிரி ஜீன்ஸ் பேண்ட்டு என உடல் முழுதும் மறைச்சுட்டு அலைய, அந்தக் குறையை நவநாகரீக நங்கையர் தான் தாரளமயமாக்கல் கொள்கையோட நாங்க கடிப்பதற்கு இட ஒதுக்கீடு அளித்து தீர்த்து வச்சிருக்காங்க. அப்புறம் இந்த அடுக்கு மாடி கட்டிடங்களா நிறைய கட்டுறாங்க, சரி அப்படியே கொஞ்சம் லி·ப்ட் வச்சு கட்டுனா நல்லது. மூன்று மாடி உயரத்திற்கு மேல பறந்து வர கஷ்டமாயிருக்கு. நேத்து ராத்திரி தள்ளாடிக்கிட்டே வந்த ஒருத்தனைக் கடிச்ச பின்னாடி தான் தெரிஞ்சது அவன் சாராயக் கடையிலே இருந்து வர்றான்னு. என்ன சரக்கை அடிச்சானோ, ரெக்கையல்லாம் பின்னுது இன்னும் என்னால நேராக பறக்கமுடியலை. சரிங்க, நான் கிளம்புறேன், அவசரமாக பேங்க் போகவேண்டியிருக்கு Bank இல்லைங்க, Blood Bank.ஹி ஹி ஹி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

பூமியில் நடமாடும் தெய்வம்

தாய் இல்லை என்றால் நாம் இல்லை! தாய்மை இல்லை என்றால் உயிரினமே இல்லை.உயிரினம் இல்லை என்றால் உலகமே இல்லை. அம்மா என்ற சக்தி நம்முள் இருக்கும் ஒரு ஜீவ சக்தி. தாய்மை ஒரு தெய்வீகம். தான் படைத்த உயிர்களுக்கெல்லாம் கூடவே இருந்து அன்பு செலுத்த முடியாதென்று தெரிந்து தான் கடவுள் தாயை படைத்தானாம். தன்னலமற்ற அன்பும் அரவணைப்பும் தாயிடம்தான் கிடைக்கும். தாயின் மடியில் கிடைக்கும் அமைதியான சுகத்திற்கு சொர்க்கம் கூட இணையாகாது. தந்தையாகவும், தோழியாகவும், நல்ல ஒரு வழிகாட்டியாகவும், கண்டிப்பான ஒரு ஆசிரியையாகவும் உருவெடுக்க ஒரு தாயால் மட்டுமே முடியும். தாய்க்கு நிகராக யாரும் இல்லை. தாய்மையை விட மேலானது உலகில் ஏதும் இல்லை. தாயாய் இருப்பதே ஒரு தனிப் பெருமை அல்லவா? அதனால் தான் இந்த நாம் வாழும் பூமியை தாய் என்கிறோம். வாழும் தேசத்தை தாய்நாடு என்கிறோம். பேசும் மொழியை தாய் மொழி என்கிறோம். அம்மா என்ற மூன்றெழுத்து வார்த்தையில் இருக்கும் ஆனந்தமும் ஆறுதலும் எந்த கோவிலுக்குச் சென்றாலும் கிடைக்காது. நாட்டை ஆளும் அரசரரும் அன்னையின் அன்பிற்கு அடிமை தான். ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் ஒரு சரித்திரமாக மாறுவதன் காரணம் அம்மா என்ற அடிப்படை வித்து. அம்மாவின் ஒவ்வொரு செயலிலும் தியாகம் என்பது ஒரு நூலிழையாக இருக்கும். படிக்கும் காலத்தில் நமக்காகவே நம்முடனேயே விழித்திருந்தது அம்மா தானே! அப்பாவிடம் பேசி நம்மை சுற்றுலா செல்ல வைத்தது அம்மா தானே? நம்முடைய கோபங்களை புன்னகையோடு ஏற்று, நமது கனவுகளை நிஜமாக்கி இருக்கிறாள் நம் தாய். அடிபட்ட உடனே வாயிலிருந்து வரும் வார்த்தை அம்மா. ஆழ்ந்த சோகத்தில் ஆறுதல் தருவது அம்மாவின் அரவணைப்பு. அம்மாவிற்கென்று ஒரு நாள் மே 9ம் தேதி வருகிறது. காலையில் அவருக்கு படுக்கையில் காலை சாப்பாடு கொடுத்து ரோஜாப்பூ கொடுத்து 'உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று சொலவது மேலை நாடுகளில், முக்கியமாக அமெரிக்காவில் வழக்கம். அம்மாவை அன்போடும் நன்றியோடும் நினக்கும் நாள் இது. இப்போது இந்த வழக்கம் எல்லா இடமும் பரவி வருகிறது. தாயை தெய்வமாக கொண்டாடும் நம் கலாச்சாரதில் ஒரு புதிய பக்கம். தன்னையே கரைத்து ஒளிகொடுக்கும் மெழுகுவத்திக்கு நன்றி சொல்ல நம்மால் முடியுமா? இதமாய்த் தழுவிச் செல்லும் தென்றல் நம் நன்றிக்காகவா தவழ்ந்து வருகிறது? இல்லையே! தாயின் கனிந்த புன்னகைப் புதையலை அள்ளவே ஒரு பிறவி போதவில்லையே. தாய்க்கென நன்றி சொல்ல ஒரு நாள் போதுமா? தாய்மையை தாய்க்கே திருப்பிக் கொடுக்க முடியுமா? தாய்கென்று ஒரு தினம் மட்டும் ஒதுக்கினால் போதுமா? உலகின் எல்லா மூலைகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மனிதனும் தாயாக வேண்டிய கட்டாயத்தை அல்லவா காட்டுகிறது. தாய் காட்டிய வழியில் வளர்ந்து மருத்துவராக, கணினி வித்தகராக, அறிவியல் ஆராய்ச்சியாளராக மாறிய நமக்குத் தாயாக வேண்டும் என்ற எண்ணம் ஏன் வரவில்லை?. தாயிடம் மொழி கற்றோம் கலாச்சாரம் கற்றோம். பண்பாடு கற்றோம். தாயன்பை கற்க மறந்து விட்டோமா? அள்ள அள்ள குறையாத அன்பு ஊற்றல்லவா தாய்மை? ஆண் பெண் என்ற பேதமை இன்றி அனைவருக்கும் தேவையான ஒரு தேவாமிருதமல்லவா தாய்மை.? அமிர்தத்தை அள்ளிக் குடித்த நாம் அடுத்தவருக்கு அதைக் கொடுத்த மறப்பதேன்? மறுப்பதேன்? தாயின் கருணைப் புன்னகை நம் கண்ணில் நிற்கையில், நம்மால் புன்னகைக்கக் கூட ஏன் முடியவில்லை? தன்னலமற்ற தியாகத்தால் தரணியை குளிப்பாட்டுவோம். நமக்காக நம் தாய் வாழ்ந்தது போல் நாமும் வாழ வேண்டும் அடுத்தவருக்காக! பெண்ணினத்திற்குப் பெருமை சேர்க்கும் அடை மொழி அம்மா. தினம் அம்மாவின் அன்பை அள்ளித் தந்தால் அளவில்லா ஆனந்தம் தானே! தாய்க்கென்ற இந்த நன்னாளில் தாய்மை என்பது மனித இனத்தின் கொள்கையாக வேண்டும். தாய்மை நமது கடமையாக வேண்டுமென்று உறுதி எடுப்போம். தாய்மையை அரவணைபோம். தீவிரவாதத்தைத் தூர வைப்போம்! தரணியின் மேன்மைக்காக செய்வோம் தாய்மை என்ற வேள்வி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

கடன்

மூன்று மாதங்களுக்குமேலாக ஊரிலிருந்து கடிதம் வரவில்லை. சனங்கள் என்னபாடுபடுகிறார்களோ தெரியவில்லை. காதுக்கு எட்டும் செய்திகள் பயமுறுத்தித் தினம்தினம் செத்துப் பிழைக்கவைக்கின்றன. உண்மை எது பொய் எது என்று பகுத்தறிய முடியாத நிலை. உறக்கம் வெகுநாளாய் மௌனமாகி இடையிடையே வந்து எட்டிப்பார்த்து வேடிக்கை காட்டுகிறது. பயங்கரமான கனவுகள் திகிலூட்டுகின்றன. உணவை நாட மனம் மறுத்தது. வேலை செய்யக்கூட முடியவில்லை. உழைத்து எதைச் சாதிக்கப்போகிறோம் என்ற விரக்தி. மொத்தத்தில் நடைப்பிணமாகக் கட்டிலில் முடங்கிக்கிடந்த உதயனை ரெலிபோன் மணி அழைத்தது. "அப்பு தம்பி உதயன்...." ஒரு வயதான ஆணின் குரல் மறுமுனையில் குழைந்தது. புரிந்தது. கந்தசாமி அண்ணர்தான். "சொல்லுங்கோ. என்ன விசயம்?" வேறு என்னவாக இருக்கும்?! எல்லாம் காசு அலுவல்தான். கந்தசாமி அண்ணர் எங்கேயாவது எவரையாவது சந்திக்கப்போகிறார் என்றால்இ நிச்சயமாக அது காசு கடன் வாங்குவதற்காகத்தான் இருக்கும். அதனால் அவருக்குக் 'கடன்காரக் கந்தசாமி' என்ற பட்டப்பெயர்கூட உண்டு. "தம்பி.... எனக்குக் காசு கொஞ்சம் அவசரமாய்த் தேவைப்படூது.... கொஞ்சம்தான். ஒரு ஆயிரம் மார்க். அடுத்த மாதம் திருப்பித் தந்துவிடுவன்...." தண்ணீரில் எழுதி வைக்கவேண்டிய வார்த்தைகள் என்பது உதயனுக்கு நன்றாகவே தெரியும். பலர் கூறியிருக்கிறார்கள். இத்தனைக்கும் கந்தசாமி அண்ணரிடம் பணம் இல்லாமலில்லை. நாலு பிள்ளைகள் மனைவியுடன் சோசல் காசில் வாழ்பவர். அதைத் தவிர 'றெஸ்ரோரண்ட்' வேலை. பிள்ளைகள் இருவர் சோசல் வேலை. ஊரிலும் சுமையாக எவரும் இல்லை. அப்படியிருந்தும் கந்தசாமி அண்ணர் பலரிடம் கடன் வாங்குவதன் காரணம் பலருக்குப் புரியவில்லை. பலவழிகளில் வருமானம் வரும்போது பலரிடம் கடன் வாங்கி என்ன செய்கிறார் என்பது புரியாத புதிராக இருந்தது. "கந்தசாமி அண்ணை! வீட்டுக்கு அனுப்பத்தான் கொஞ்சக் காசு கிடக்கு..." "இந்த நாட்டுப் பிரச்சினையளுக்குள்ளை என்னெண்டு அனுப்பப் போறீர்? நிலமையள் சரியான பேந்து அனுப்பலாம்தானே...." அவரது அக்கறையான வார்த்தைகளைக் கேட்கச் சிரிப்புத்தான் வந்தது. அலுவல் பெற எதையும் பேசக் கூடியவர். நாட்டில் பிரச்சனை என்று தெரிகிறது. ஆனால் அதற்கான பரிகாரங்களுக்கு உதவாதவர். ழூழூழூ ஒருமுறை நாட்டின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் நிதி சேகரிக்க கந்தசாமி அண்ணர் வீட்டுக்குச் சென்றனர். "வாருங்கோ தம்பியவை.... ரீயோ கோப்பியோ குடிக்கிறியள்? தம்பியவை எவ்வளவு கஸ்டப்படுகினம்.... சனங்களும்தான்" என்று கூறி நிறுத்தியவர்இ சம்பந்தாசம்பந்தமில்லாமல் ஏதோவெல்லாம் கதைத்ததன் பின்னர் நாசூக்காகப் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இவர் எல்லாம் என்ன காரணம் சொல்லி அரசியல் தஞ்சம் கோரியிருப்பார்?! "என்ன தம்பி யோசிக்கிறீர்?" "அடுத்தமாதம் திருப்பித் தரவேணும்...." "ஐயோ தம்பிஇ நீர் மறந்தாலும் நான் மறக்கமாட்டன்." "நாளைக்குத் தாறன்...." ரிசீவரை வைத்துவிட்டுத் திரும்பிய உதயனைக் கதவு தட்டப்படும் ஒலி மீண்டும் அழைத்தது. திறந்தான். சிநேகிதன் சுகுமாருடன் ஒரு புதுமுகம். அறிமுகத்தில் குமார் எனத் தெரிந்தது. "உதயன்.... நீ எனக்கு ஒரு உதவி செய்யவேணும். குமார் பக்கத்துச் 'சிற்றி'தான். இரவைக்கு உன்ரை அறையிலைதான் படுக்கவேணும்...." "தாராளமாய்...." "ரொம்ப நன்றி.... ஒருக்கா கந்தசாமி அண்ணர் வீட்டை குமாரோடை போகவேணும். போவிட்டுப் பேந்து வாறன்..." "என்னவாலும் அவசர அலுவலோ?" "குமார் கொஞ்சக் காசு கொடுக்கவேணும்." "அவர் என்னட்டைக் கடனாய்க் கேட்டாரே?!" "எனக்கும் குமார் சொல்லித்தான் விசயம் தெரியும். கந்தசாமி அண்ணர் பக்கத்துச் 'சிற்றி'யளிலை இருக்கிற எங்கடையாக்களுக்கு வட்டிக்குக் காசு கொடுக்கிறவராம். இங்கை இருக்கிறவேட்டைக் கடன் வாங்கி வட்டிக்குக் கொடுத்து உழைக்கிறார்.... வட்டி எவ்வளவு தெரியுமே? ஆயிரத்துக்கு ஐம்பது..." என்று கூறிய சுகுமாரை வியப்புடன் பார்த்தான் உதயன். நினைத்துப் பார்க்கச் சினம் பொங்கியது. குருதியை வியர்வையாக்கி உழைப்பவர்களிடம் கடன் வாங்கி இலாபம் தேடும் கந்தசாமிக்கும் சுரண்டல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்? இப்படியானவர்கள் கொழுக்க உதவிசெய்வதே பாவம். முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். உதயன் ரெலிபோனை எடுத்துக் கந்தசாமி அண்ணரின் நம்பரைச் சுழற்றத் தொடங்கினான். எத்தனையோ மக்கள் தாயகத்தில் உணவின்றி உடையின்றிக் கஸ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவுவோம். அடுத்தமாதம் வீட்டுக்கு அனுப்பலாம்.... என்று எண்ணியவனாய் ரிசீவரைக் காதில் வைத்தான் உதயன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org