அக்கினி சாட்சி
தாலிகட்டி முடிந்தபின்னும் எஞ்சியிருந்த திருமணச் சடங்குகளை சந்துருவும், ஷோபனாவும், சாஸ்திரிகளும் மட்டும் அக்னியின் அருகில் தனியாக உட்கார்ந்துகொண்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். சந்துருவுக்கு இதெல்லாம் ரொம்பப் பிடித்திருந்தது. கைகள் சேர்வதும், தொடையைத் தொடுவதும் புரியாத என்னவோ நியமங்கள். ஒவ்வொன்றையும் ரசித்த சந்துரு, அவ்வப்போது அவளிடம் சிரித்துப் பேசினான். அடிக்கடி பட்டான், தொட்டான், கையை அழுத்தினான். ஷோபனாவுக்கு இன்னமும் வெட்கமும் தயக்கமும் விலகவில்லை.
தாலிகட்டி ஒருமணி நேரம்தான் ஆகிறது. பெரும்பாலான விருந்தினர்கள் மாடியில் சாப்பிடப் போயிருந்தார்கள். இரண்டாம் பந்தி ஓடிக்கொண்டிருந்தது. ஷோபனாவின் அண்ணனும், மன்னியும் நாற்காலியில் வீற்றிருந்தவர்களை ஒவ்வொருத்தராக அணுகி, ~நீங்கள் சாப்பிட்டாச்சா?என்று பரிவுடன் விசாரித்து டைனிங் ஹாலுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தபோது ஷோபனாவுக்கு அழுகையும் சந்தோஷமும் கலந்த உணர்ச்சிகள் பெருகின.
வாத்தியார் சுவாமி, நினைத்து நினைத்து வாத்தியம் வாசிக்கச்சொல்லி முழுசாக வாசிப்பதற்குள் விரலால் நிறுத்திக்கொண்டிருந்தார். பாலிகை கொட்டுவதற்கு கார் தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். லேட்டாக வந்த ஆபீஸ் சிநேகிதிகள் கிட்டேவந்து இருவரையும் கைகுலுக்கி அன்பளிப்புகளைக் கொடுத்துவிட்டு, சந்துருவைப் பார்த்து
யு ஆர் லக்கி! ஷோபனா மாதிரி பெண் கிடைக்க குடுத்து வைக்கவேண்டும் என்றார்கள். அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள். பார்க்கலாம் என்று சிரித்தான் சந்துரு. அவனை சற்று அதட்டலாகப் பார்த்தாள்.
உடனே அமெரிக்கா அழைத்துச் சென்று விடுவீர்களா?
அதையெல்லாம் யோசிக்கவில்லை. யார் என் மனைவி என்றே இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. அத்தனை புகை காலையிலிருந்து...
சாஸ்திரிகள் தோ ஆச்சு! டேய் கொஞ்சம் விசிர்றா... மாப்பிள்ளை கண்ணைக் கரிக்கறதுங்கறார் பாரு..
சிஷ்யன் விசிறிவிட, அக்கினி கொழுந்துவிட்டு எரிய, அதில் சுள்ளிகளையும் விறகுத் துணுக்குகளையும் சேர்த்தார். தீ பெரிசாகி சற்றே சுட்டது.
அப்போதுதான் ஷோபனா, வினோத்தைப் பார்த்தாள். ~அய்யோ, இவன் எங்கே வந்தான்? வழியில் பார்த்தவர்கள் அத்தனை பேரிடமும் கைகுலுக்கிவிட்டு ஷோபனாவைப் பார்த்துக்கொண்டே மெல்ல மணமேடையை அணுகினான். வருவதற்குப் பத்தடி முன்பே செண்ட் வாசனை து}க்கியது. சில்க்கில் ஜிப்பா, காலர் திறந்து அதில் தங்கச் சங்கிலி, விரலெல்லாம் மோதிரம்...
கடவுளே, என்ன இது சோதனை? ஏதும் குழப்பமில்லாமல் காப்பாற்று நாராயணா, பிள்ளையாரே, ஐயப்பா, அனுமாரே என்று இருக்கிற தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கொண்டாள்.
மெல்ல வினோத் அவளைப் பார்த்துக்கொண்டே கிட்டே வந்தான். சந்துரு நெருப்பில் நெய் வார்த்துக் கொண்டிருந்தான்.
ஹாய் ஷோபி!
ஷோபனா சோகையாகச் சிரித்தாள். அய்யோ என்ன இது சோதனை?
உன் கணவனை அறிமுகப்படுத்த மாட்டாயா? சந்துரு அப்போதுதான் நிமிர்ந்தான்.
சந்துரு, திஸ் இஸ் வினோத்!
ஹாய் என்று ஒருமுறை பார்த்துவிட்டு, வாத்தியார் சொல்லும் மிச்ச மந்திரங்களில் கவனமானான்.
உங்களுக்கு ஒரு பரிசுப்பொருள் கொண்டு வந்திருக்கேன் என்றான் வினோத்.
எனக்கா? தாங்ஸ் என்றான் சந்துரு.
ஒரு செல்போன்.
தட்ஸ் எக்ஸ்பென்சிவ். நைஸ். ஆனா, எங்கிட்ட ஏற்கெனவே இரண்டு செல்போன் இருக்கு.
இந்த செல்போன் கொஞ்சம் ஸ்பெஷல் என்றான்.
ஸ்பெஷல்?
ஷோபனாவின் உள்ளம் பதறியது.
இதில் போனமாசம் ஷோபனா எனக்கு அனுப்பின எஸ்.எம்.எஸ். மெசேஜ்கள் அத்தனையும் அழிக்காம பத்திரமா பதிவாகியிருக்கு. ஹனிமூன் போது படிச்சுப் பார்க்கலாம். சுவாரஸ்யமா இருக்கும்.
அவன் உதடுகள் சுழித்து, கண்களில் குரோதம் தெரிந்தது. ஷோபனாவுக்கு விரல்கள் நடுங்கின.
தன் புதிய கணவனை பயத்துடன் பார்த்தாள்.
அவன் சற்று தயக்கத்துக்குப்பின், தட்ஸ் இண்ட்ரஸ்டிங் என்றான். எங்கே குடுங்க...
என்னைப் பத்தி ஷோபி உங்ககிட்ட சொல்லியிருக்க மாட்டா. அதனாலதான்...
சொல்லியிருக்கா என்றான் சந்துரு. ஷோபனா அவனை வியப்புடன் பார்த்தாள்.
எதுக்கும் படிச்சுப் பாருங்க...
தேவையில்லை என்று சந்துரு அந்த செல்போனை கொழுந்துவிட்டெரியும் அக்கினியில் போட்டான். அதன்மேல் தொன்னையில் மிச்சமிருந்த நெய்யைக் கொட்டினான். அக்ரிலிக் ப்ளாஸ்டிக் ஃபைபர்கிளாஸ், காப்பர்க்ளாடு போன்றவை உருகி எரியும் கலந்த வாசனையுடன் அந்த செல்போன், தீயின் நடுவில் மெல்ல விகாரமடைந்து உருமாறி ஜோதியுடன் கலந்து இறந்தது.
சாப்பிட்டுட்டுப் போங்க வினோத் என்றான் சந்துரு.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
வரிப்புலியே எழுந்திரு தமிழ் காக்க
ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்!கண்டறிவாய்! எழுந்திரு நீ! இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்தபண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்! இந்நாள்தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே!
உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெலாம் உன்றன் வெற்றி!அயராதே! எழுந்திரு நீ! இளந்தமிழா, அறஞ்செய்வாய்! நாம டைந்ததுயரத்தைப் பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினைத் துடைப்பாய், இந்நாள்செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே.
வாழியநீ! தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன்பெருமை! வயிற்றுக் கூற்றக்கூழின்றி வாடுகின்றார்; எழுந்திருநீ இளந்தமிழா! குறைத விர்க்கஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை ஆக்கு விப்பாய்!ஊழியம்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே.
உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு வருந்தீமை உனக்குவரும் தீமை அன்றோ!பிணிநீக்க எழுந்திரு நீ இளந்தமிழா, வரிப்புலியே, பிற்றை நாளுக்கணிசெய்யும் இலக்கியம்செய்! அறத்தைச்செய்! விடுதலைகொள் அழகுநாட்டில்!பணிசெய்வாய் தமிழக்குத் துறைதோறும் துறைதோறும் பழநாட் டானே.
எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த வரிப்புலியே இன்றே, இன்னே,புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கேஅதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்!இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
விவேகானந்தரின் போதனை
நான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து. இந்து மதத்திற்கும் (நான் இந்து மதம எனக்குறிப்பிடுவது வேத மதத்தைத் தான்) இந்நாளில் பெளத்தமதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் உறவு, யூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள உறவுதான்.
ஏசு கிறிஸ்து ஒரு யூதர். சாக்கிய முனிவர் ஓர் இந்து. யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது மட்டுமின்றி, அவரைச் சிலுவையிலும் அறைந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் கடவுள் என்று ஏற்று வணங்குகிறார்கள். இந்துக்களாகிய நாங்கள் எடுத்துக் கூற விரும்பும், தற்கால பெளத்த மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை உபதேசத்திற்கும்உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சாக்கிய முனிவர் எதையும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். அவரும் ஏசுநாதரைப் போன்று, நிறைவு செய்யவே வந்தார், அழிக்க வரவில்லை.
ஏசுநாதர் விஷயத்தில், பழைய மக்களாகிய யூதர்கள் தாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில், அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது போன்று, இந்து மத உண்மைகள் நிறைவு செய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன்: சாக்கிய முனிவர் இந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் இந்து மதத்தின் நிறைவு, அதன் சரியான முடிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே.
இந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது. ஒன்று கர்ம காண்டம், மற்றொன்று ஞான காண்டம். ஞான காண்டத்தைத் துறவிகள் சிறப்பாகக் கருதுகின்றனர். இதில் ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரும் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம். அப்போது அந்த இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகின்றன.
மதத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பதுவெறும் சமுதாய ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகம் முழுவதற்கும் தாராள மனத்துடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர் அவர். உலகத்திலேயே முதன் முதலாக சமயப் பிரசாரத்தைச் செயல்படுத்தியவர், ஏன், மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர்தான்.
எல்லாரிடமும், குறிப்பாக, பாமரர்களிடமும் ஏழை எளியவரிடமும், ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர் அவர். அவரது சீடர்களுள் சிலர் பிராமணர்கள். புத்தர் உபதேசம் செய்த காலத்தில், சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை. பண்டிதர்களின் நூல்களில் மட்டுமே அந்த மொழி இருந்தது. புத்தரின் பிராமணச் சீடர்களுள் சிலர், அவரது உபதேசங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினர். அதற்கு அவர், 'நான் ஏழைகளுக்காக வாழ்பவன், மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள்' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் தான் இன்றளவும், அவரது போதனைகளில் பெரும் பகுதி, அந்நாளைய பேச்சு மொழியிலேயே உள்ளது.
தத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாகவும் இருக்கட்டும், மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் இருக்கட்டும், உலகத்தில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் என்புது இருக்கும் வரையில், மனிதனின் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் இருக்கும் வரை, கடவுள் மீது நம்பிக்கைஇருந்தே தீரும்.
தத்துவ சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புத்த தேவரின் சீடர்கள் நிலையான மலைபோன்ற வேதங்களோடு மோதிப் பார்த்தார்கள். ஆனால் அவற்றை அழிக்க முடியவில்லை. மற்றொரு புறம் அவர்கள் ஆண், பெண், அனைவரும் பாசத்தோடு பற்றிக் கொண்டிருந்த அழிவற்ற இறைவனை நாட்டினின்று எடுத்துச் சென்று விட்டார்கள். அதன் பயன், பெளத்தமதம் இந்தியாவில் இயற்கை மரணம் எய்தியது. அது பிறந்த நாட்டிலேயே, பெளத்தன் என்று கூறிக்கொள்ள ஒருவர் கூட இன்று இல்லை.
அதே வேளையில், பிராமண சமுதாயத்திற்குச் சில இழப்புகள் ஏற்பட்டன. சீர்திருத்தும் ஆர்வம், எல்லாரிடமும் வியக்கத்தக்க வகையில் பரிவும் இரக்கமும் காட்டல், பக்குவமாய் மாற்றியமைக்கும இங்கிதப் பாங்கு முதலிய பெளத்தப் பண்புகளை பிராமண சமுதாயம் இழந்தது. இந்தப் பண்புகள் தாம் இந்தியாவைப் பெருமையுறச் செய்திருந்தது. அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், 'பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை' என்று கூறுகிறார்.
புத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி புத்த மதமும் வாழ முடியாது. பிரிவின் காரணமாக என்ன நேர்ந்ததென்று பாருங்கள்! பிராமணர்களின் நுண்ணறிவும், தத்துவ ஞானமுமின்றி பெளத்தர்கள் நிலைத்து வாழ முடியாது. பெளத்தர்களின் இதயமின்றி பிராமணர்களும் வாழ முடியாது. பெளத்தர்களும் பிராமணர்களும் பிரிந்ததுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம். அதனால் தான் இந்தியா முப்பது கோடி பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகி விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களின் அடிமையாக இருக்கிறது. ஆகவே பிராமணனின் அற்புதமான நுண்ணறிவையும், புத்தரின் இதயம், உயர்ந்த உள்ளம், வியப்பிற்குரிய மனிதாபிமானம் இவற்றையும் ஒன்று சேர்ப்போமாக!
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
வாருங்கள் உலகைப் பாருங்கள்
ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.
ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.
'நீ எங்கிருந்து வருகிறாய்?'
'கடலிலிருந்து'
'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.
'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.
கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.
'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'
'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.
காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
விவேகானந்தர் கூறிய இந்துமதம்
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.
யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.
அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.
தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.
இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.
இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.' இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.
இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, 'நான், நான், நான்' என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான்? 'இல்லை' என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.
சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள்.
அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?
ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா?
வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன - ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.
பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.
இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும்.
இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: 'நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!'
தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது.
சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ளமுடியும்?
இந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: 'எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.' உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. 'எனக்குத் தெரியாது' என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.
ஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.
இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, 'ஆ' வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன்? இல்லை, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்?
இதை நினைக்கும் போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இது தான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து 'நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா' என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: 'ஓ அழயாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே! நீங்களும் கேளுங்களும். அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்து ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.'
'அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!' ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே!ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல.
இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை, காரணகாரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், சடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான். 'அவனது கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது' என்றுகூறுகின்றன.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
மரணம் வேண்டும்
1 தற்கொலை! ஆம். அந்தப் பயங்கரமான முடிவுக்கு வந்தான் ஜகந்நாதன். இத்தகைய பேரவமானத்துக்குப் பின்னர், மானமுள்ள ஓர் ஆண் மகன் எவ்வாறு உயிர் வைத்திருக்கக் கூடும்? ஒரு பாகமேனும் தேறியிருக்கக் கூடாதா? அதிலும் இது இரண்டாம் தடவை. இண்டர்மீடியட் பரீட்சையில் ஜெகந்நாதன் முதல் தரத்தில் தேறியவன். அதுவரை ஒரு வகுப்பிலாவது பரீட்சையில் தவறியது கிடையாது. பி.ஏ. வகுப்பில் முதல் முறை இரண்டு பாகத்திலும் தவறியபோது அவன் அடைந்த ஏமாற்றமும் துயரமும் சொல்லத்தரமல்ல. ஆயினும் எப்படியோ சகித்துக் கொண்டு இரண்டாம் முறை அதிகக் கவலையுடன் படித்தான். ஆயினும் பயனென்ன? 'மேல் மாடி காலி' என்பதற்காக அவன் கேலி செய்த 'மண்டுக்கள்' எல்லாரும் தேறிவிட்டார்கள். அவன் மட்டும் அம்முறையும் தவறிவிட்டான் - இரண்டு பாகத்திலும். அவமானம்! அவமானம்! தற்கொலையினாலன்றி இந்த அவமானம் தீருமா?
இது ஒரு புறம் இருக்கட்டும். செல்லத்தின் முகத்தில் எவ்வாறு விழிப்பது? தன்னிடம் அளவிறந்த காதல் வைத்துள்ள அப்பேதை இவ் அவமானத்தை எங்ஙனஞ் சகிப்பாள்? பரீட்சைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு செல்லத்தைப் பிறந்தகத்துக்கு அனுப்பியபோது அவளுக்கும் தனக்கும் நிகழ்ந்த விவாதம் ஜெகந்நாதனுக்கு நினைவு வந்தது. அவள் அப்போது கூறினாள் - "என்னை ஏன் அனுப்புகிறீர்கள்? நான் உங்கள் படிப்புக்கு எவ்விதத்திலாவது குறுக்கே வருகிறேனோ? நான் இருந்தால் உங்களுக்கு எவ்வளவோ சௌகரியமாயிற்றே! உங்கள் அறையைப் பெருக்கி சுத்தமய் வைக்கிறேன். புத்தகங்களை அடுக்கி வைக்கிறேன். குளிப்பதற்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறேன். இரவில் நீங்கள் படிக்கும் போது உங்கள் படுக்கையை விரித்து விட்டே நான் சென்று படுத்துக் கொள்ளுகிறேன். உங்களுக்கு எவ்வளவு நேரம் மீதியாகிறது? ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு தனியறையில் இருந்தால் இவைகளையெல்லாம் நீங்கள்தானே செய்யவேண்டும்? இவ்வளவு சௌகரியம் இருக்குமா? எனக்காக நீங்கள் அதிக நேரம் செலவிடுவதேனும் உண்டா? மாலைப் பொழுதினில் நீங்கள் வெளியிலிருந்து வந்ததும் அரைமணி நேரம் மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதைத் தவிர வேறு எப்போதாவது உங்கள் படிப்புக்குக் குறுக்கே நான் வருகிறேனா? மேலும், உங்கள் தேக சௌக்கியத்தை என்னைப் போல் யார் கவனிப்பார்கள்."
செல்லம்மாளின் இவ்வளவு வாதமும் அப்போது ஜகந்நாதன் செவியில் ஏறவில்லை. சென்ற வருஷம் பரீட்சையில் தவறியதும், அவனது நண்பர்களும் மற்றவர்களும், "ஆம்படையாள் ஆத்துக்கு வந்ததும் பையன் சுழி போட்டு விட்டான்" என்று கேலி செய்தது அவன் மனதை விட்டு அகலவில்லை. இந்தக் கேலிப்பேச்சு அவன் உள்ளத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. கடைசியில் தான் பரீட்சையில் தவறியதற்குத் தன் மனைவியே காரணம் என்னும் நம்பிக்கையை உண்டு பண்ணிவிட்டது. எனவே, இம்முறை அவளை ஊருக்கு அனுப்பியே தீரவேண்டுமென்றும், இல்லாவிடில் தனக்குப் பரீட்சை தேறாதென்றும் அவன் நிச்சயம் செய்து கொண்டிருந்தான். இப்போதோ? "அவ்வளவு பிடிவாதமாக என்னை ஊருக்கு அனுப்பினீர்களே? பரீட்சையில் தேறி விட்டீர்களா?" என்று செல்லம் கேட்டால், என்ன விடையளிப்பது? தன் புண்பட்ட மனதை இன்னும் புண்படுத்தக் கூடாதென்று அவள் இவ்வாறு கேளாமலிருக்கலாம்; தேறுதலும் சொல்லலாம். இருந்தாலும், அவள் மனதில் இவ்வெண்ணம் இருக்கத் தானே செய்யும்? அவள் முகத்தில் விழிப்பதெப்படி?
இனி, கிராமத்திலுள்ள பெற்றோர்களோ? அவர்களைப் பற்றி எண்ணியபோதே ஜகந்நாதனுக்கு வயிரு பகீர் என்றது. தகப்பனார் உழையாத உழைப்பும் உழைத்து மூத்த புதல்வனான தன்னைப் படிக்க வைத்தார். இப்போது அவருக்கு தள்ளாத வயது வந்து விட்டது. குடும்பத்துக்கு 1,500 ரூபாய் கடன் இருந்தது. இன்னும் இரண்டு புதல்விகளுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும். ஒரு பையனைப் படிக்க வைத்தாக வேண்டும். நிலத்தில் கிடைக்கும் வருமானம் காலட்சேபத்துக்கே போதும் போதாததாயிருந்தது. ஜகந்நாதனுக்கு வாங்கின வரதட்சணை ரூ. 2000-த்தில் ஒரு பைசாக் கூடத் தொடாமல் அவன் பி.ஏ. படிப்பதற்காகக் கொடுத்து விட்டார். அவன் உத்தியோகம் செய்யப் போகிறான் என்ற நம்பிக்கையே குடும்பத்துக்கு இப்போது ஆதாரமாயிருந்து வந்தது. போன வருஷமே அவர்கள் அடைந்த ஏமாற்றம் வருணிக்குந் தரமன்று. இம்முறையும் தவறிப்போன செய்தி கேட்டால் அந்தோ! அவர்கள் மனம் இடிந்தே போய்விடும். அவர்கள் துயரத்தை பார்த்து எவ்வாறு சகித்துக் கொண்டிருப்பது. நல்ல வேளை, உயிரை விடுவதும் வைத்துக் கொண்டிருப்பதும் ஒருவனுடைய விருப்பத்தைப் பொறுத்ததாயிருக்கிறதே, அதை நினைத்துச் சந்தோஷப்பட வேண்டியதுதான்.
அவமானத்தைப் பொருட்படுத்த வேண்டாம்; மனைவியையும் பெற்றோர்களையும் கவனிக்க வேண்டாம்; எனினும் அடுத்தாற்போல் செய்வதற்கென்ன இருக்கிறது? வரதட்சிணைப் பணம் ரூ. 2000-மும் இந்த மூன்று வருஷங்களில் செலவழிந்து போயிற்று. பாங்கிக் கணக்கில் 30 ரூபாயோ என்னவோதான் பாக்கி. இன்னமொரு வருஷம் படையெடுத்து சென்று பரீட்சைக் கோட்டையை முற்றுகை போடுவதென்பது இயலாத காரியம். மாமனாரிடம் பணம் கேட்கலாமா? சை! அதைவிட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு உயிர் விடலாம். உத்தியோகத்துக்குப் போவதென்றாலோ, பரீட்சையில் தவறிய பி.ஏ.க்கு என்ன சம்பளம் கொடுப்பார்கள்? 30, 35-க்கு மேல் இல்லை. இந்த 35 ரூபாயைக் கொண்டு பட்டணத்தில் மனைவியுடன் எவ்வாறு வாழ்க்கை நடத்துவது? சென்ற வருஷத்தில் மாதம் 60 ரூபாய் போதாமல் கஷ்டப்பட்டோ மே? பின்னர், பெற்றோர்களுக்கு பணம் அனுப்புவதெப்படி? தம்பியைப் படிக்க வைப்பதும் தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பது எங்ஙனம்?
"ஆ! பரீட்சையில் மட்டும் தேறியிருந்தால்! நினைத்தபடி இன்கம்டாக்ஸ் ஆபீஸில் ஓர் உத்தியோகமும் கிடைத்திருந்தால்! 'சம்பளத்தைக் கொண்டு நீ உன் காலட்சேபத்தை நடத்திக் கொள். மேல் வரும்படியை மட்டும் மாதாமாதம் எனக்கு அனுப்பிவிடு' என்று தந்தை அடிக்கடி கூறியது அவனது நினைவுக்கு வந்தது. 'மேல் வரும்படி' விஷயத்தில் தானாக யாரையும் ஒரு பைசாவேனும் கேட்பதில்லையென்று அப்போதே தீர்மானித்திருந்ததும் ஞாபகம் வந்தது. இன்கம்டாக்ஸ் ஆபீஸில் உத்யோகம் அகப்படாவிட்டாலும் ரயில்வேயில் ரூ.100 சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தால் போதுமே!... சை, சை என்ன வீண் நினைவுகள்! இவைகளைப் பற்றி இப்போது எண்ணி என்ன பயன்! தற்கொலை! தற்கொலை! தற்கொலை! அதைப் பற்றியன்றோ இப்போது சிந்திக்க வேண்டும்!
ஒரே ஒரு யோசனை, நாம் போய்விட்டால் மனைவி பெற்றோர்களின் கதி என்ன? நல்ல வேளையாக மனைவியின் பெற்றோர்கள் கொஞ்சம் பணக்காரர்கள். எனவே அவளைப் பற்றிக் கவலையில்லை. உயிரோடிருந்தாலும் பெற்றோர்களுக்கு உதவி எதுவும் செய்ய முடியாது. அவர்கள் எல்லாரும் அளவு கடந்த துக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள் என்பது உண்மையே. ஆனால், உயிரோடிருந்து அவர்கள் துயரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட இறந்து போய் விட்டால், பிறகு யார் எப்படிப் போனால் நமக்கென்ன தெரியப் போகிறது?
இவ்வளவு எண்ணங்களும் ஜகந்நாதன் மனதில் கோர்வையாக எழுந்து மறைந்தன. அவனுடைய அறிவு அந்த நெருக்கடியான தருணத்தில் மிகத் தெளிவு பெற்றிருந்தது. அச்சமயத்தில், "நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?" என்னும் விஷயமாக ஒரு கட்டுரை வரையச் சொல்லியிருந்தால் அவன் மிக நன்றாக எழுதியிருப்பான். இவ்வளவு தெளிந்த அறிவுடன் பரீட்சையில் எழுதியிருந்தால் எந்தக் குருட்டுப் பரீட்சகனும் அவனைத் தேர்தல் செய்யத் தவறியிரான்!
தற்கொலை செய்துகொள்ளும் விதத்தைப் பற்றி ஜகந்நாதன் அதிகமாகச் சிந்திக்கவேயில்லை. ஒரே கணத்தில் இந்த விஷயத்தில் முடிவுக்கு வந்துவிட்டான். இரவு ஏழு மணியாயிற்று. மனைவிக்கொரு கடிதமும், தந்தைக்கொரு கடிதமும் எழுதினான். மனைவிக்கெழுதிய கடிதம் வருமாறு:-
"என் அன்பே! நான் பரீட்சையில் இம் முறையும் தவறி விட்டேன். இனி உன் முகத்தில் விழிக்க என்னால் முடியாது. தற்கொலை செய்து கொண்டு இன்றிரவு உயிர் விடப் போகிறேன். ஜகந்நாதன்"
தந்தைக் கெழுதிய கடிதமும் இவ்வளவு சுருக்கமானதுதான். இரண்டையும் மடித்து உறையில் போட்டு விலாசம் எழுதி மேஜையின் மீது வைத்தான். மரண விசாரணையில் அடையாளம் தெரிவதற்காகத் தன்னுடைய விலாசம் எழுதிய ஒரு காகிதத்தைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். (என்ன முன்யோசனை) அறையை பூட்டி விட்டு வெளியே கிளம்பினான்.
2 இரவு ஒன்பது மணி அமாவாசை இருட்டு. தென் இந்திய ரயில் பாதையில் ஒரு சிறு வாய்க்காலின் பாலத்தின் மீது ஜகந்நாதன் உட்கார்ந்து கொண்டிருந்தான். நிர்மலமான நீல வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டி மனிதர்களின் அறியாமையைக் குறித்துக் கேலி செய்து கொண்டிருந்தன. மேல்வான வட்டத்தின் அடிவாரத்தைக் கரிய மேகத்திரள் மறைந்திருந்தது. ஒவ்வொரு சமயம் அம்மேகத்திரளை மீறிக்கொண்டு ஒரு பொன் மின்னற்கொடி வெளிக் கிளம்பி ஒரு கணம் கண்ணைப் பறித்துவிட்டு உடனே மறைந்தது. கிழக்கே வெகு தூரத்தில் பட்டணத்தில் மின்சார விளக்குகள் மங்கலாகக் காணப்பட்டன. வெறுப்புத் தரும் வாடைக் காற்றில் கலந்து, காட்டில் ஊளையிடும் நரியின் கூக்குரல் வந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மத்திம ஸ்தாயியில் இடிகள் உறுமின. பக்கத்திலிருந்த புளிய மரத்தில் ஒரு கோட்டான் கோரமாகக் கத்திக் கொண்டிருந்தது.
அடுத்த ஸ்டேஷனிலிருந்து போட்மெயில் புறப்பட்டுவிட்டதென்பதற்கு அறிகுறியான ஊதல் சத்தம் கேட்டது. ஜகந்நாதன் எழுந்து சென்று தண்டவாளத்தின் மீது குறுக்காகப் படுத்துக்கொண்டு கண்ணை இறுக மூடிக் கொண்டான். இதயம் 'பட்பட்' என்று அடித்துக் கொண்ட சத்தம் அவன் செவியில் நன்றாகக் கேட்டது. அவன் மனைவியும், மாமனாரும், மாமியாரும், தந்தையும், தாயும், தம்பியும், தங்கைகளும் ஒவ்வொருவராக அவன் முன்பு தோன்றி, "ஐயோ பைத்தியமே! இப்படி செய்யாதே" என்று கெஞ்சுவதுபோல் அவனுக்குத் தோன்றிற்று. இந்தப் பிரமையினின்று விடுபடும் பொருட்டு அவன் கண்களைத் திறந்து ரயில் வரவேண்டிய திக்கை நோக்கினான். அவ்விடத்தில் இரயில் பாதை நேராக அமைந்திருந்தபடியால் வெகுதூரத்தில் ரயில் வருவது காணப்பட்டது. குழந்தைப் பருவத்தில் கொள்ளிக் கண்ணன் என்னும் இராட்சதனைப் பற்றிக் கேட்ட கதை அவனுக்கு நினைவு வந்தது. பெரிய கரிய வடிவமும் கொள்ளிக் கண்களும் உடைய ஒரு பூதம் பயங்கரமாக உறுமிக் கொண்டு தன்னை விழுங்க வருவது போல் அவனுக்குத் தோன்றிற்று. இத்தோற்றத்தினால் பீதியடைந்து அவன் மீண்டும் கண்களை மூடிக் கொள்ளப் போனான். ஆனால், அச்சமயத்தில் சுமார் ஐம்பது அடி தூரத்தில் ரயில் பாதை ஓரமாக வெள்ளைத் துணியால் முக்காடணிந்த உருவம் ஒன்று தன்னை நோக்கி வருவதைக் கண்டுவிட்டான்.
பேய், பிசாசுகளிடம் ஜகந்நாதனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் அப்போது அவன் உடலும் நடுங்கிவிட்டது. வியர்வை வியர்த்து துணிகள் எல்லாம் ஒரு கணத்தில் சொட்ட நனைந்து போயின. அச்சமயத்தில் அவன் உணர்வு போனவழி காரியம் செய்தானேயன்றி, அறிவைப் பயன்படுத்தி யோசித்து எதுவும் செய்யவில்லை. அவ்விடத்திலிருந்து உடனே போய்விட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. மெதுவாக நகர்ந்து பக்கத்திலிருந்த பாலத்துக்கு வந்து அங்கிருந்து கீழே வாய்க்காலில் சத்தமின்றி இறங்கி விட்டான். ஏற்கெனவே காரிருள்; அதிலும் பாலத்தின் நிழல். அங்கிருந்து அவ்வுருவத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான். என்ன அதிசயம்! அவ்வுருவம் சற்று முன் ஜகந்நாதன் படுத்திருந்த இடத்துக்கே வந்து நின்றது. முக்காடு போட்டிருந்த துணியை எடுத்துக் கோவிலில் ஸ்வாமி தரிசனம் பண்ணும்போது செய்வது போல் இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டது. பின்னர் தண்டவாளத்தின் மீது குறுக்காகப் படுத்தது.
அத்தகைய நிலைமையிலும் ஜகந்நாதனால் புன்னகை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவ்வுருவம் தன்னைப் போலவே ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொள்ள வந்த துரதிர்ஷ்டசாலியான ஒரு மனிதனே என்பதை அவன் தெள்ளத் தெளியக் கண்டான். அவனுயிரை அச்சமயம் தான் காப்பாற்றாவிட்டால், அக்கொலை பாதகத்துக்கு உடந்தையாயிருந்த பாவம் தன்னைச் சாரும் என்று அவனுக்கு ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. ரயிலோ சமீபத்தில் வந்து விட்டது. அவன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தேறிச் சென்று படுத்திருந்த உருவத்தை முதுகில் தொட்டான். அவ்வுருவம் அப்படியே வீறிட்டுக் கொண்டு துள்ளி விழுந்தது. பாவம்! ரயில் வண்டி தன்மீது ஏறிவிட்டதாக அந்த துரதிர்ஷ்டசாலி நினைத்திருக்க வேண்டும். ஜகந்நாதன் அதனைப் பாதிதூக்கிக் கொண்டும் பாதி இழுத்துக் கொண்டும் கீழே பாலத்தின் அடியில் கொண்டு வந்து சேர்த்தான்.
3 "ஆம், மூன்று ஆண்டுகளாக நான் அலையாத இடமில்லை. நான் போகாத ஆபீஸ் இல்லை. விண்ணப்பம் எழுதி எழுதி கையும் சலித்துவிட்டது. நடந்து நடந்து காலும் ஓய்ந்து விட்டது. மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றியாக வேண்டும். பாங்கியில் இரண்டாயிரம் தான் பாக்கி. அதை வைத்துக் கொண்டு எங்கேயாவது கிராமத்திற்கு போய் அவர்களாவது சௌக்கியமாயிருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இன்னும் இரண்டு வருஷம் நான் இந்த நகரத்தில் இருந்து வேலை தேடிக் கொண்டிருந்தால், அந்தப் பணமும் தொலைந்து போய் விடும். பின்னர், என் மனைவி குழந்தைகளின் கதி என்ன? ஆகையினாலேயே இன்று முடிவாக பி.ஏ. பட்டத்துக்குரிய பத்திரத்தை சர்வகலாசாலை ரிஜிஸ்ட்ராருக்கே திருப்பியனுப்பிவிட்டு, உயிரைவிடும் துணிவுடன் புறப்பட்டு வந்தேன். நீர் அதற்குக் குறுக்கே நின்றீர்" என்று கூறி முடித்தார் மகாதேவஐயர். ஜகந்நாதன் கொல்லென்று சிரித்தான். அவர்கள் பாலத்தின் மீது உட்கார்ந்திருந்தார்கள். "என் வரலாற்றை உம்மிடம் கூறியது குறித்து வருந்துகிறேன். பிறர் துன்பத்தைக் கேட்டு சிரிக்கும் குணமுள்ளவர் நீர் என்பதே எனக்குத் தெரியாது போயிற்று" என்று மகாதேவ ஐயர் சற்றுக் கோபத்துடன் கூறினார்.
"தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் கூறப்போவதைக் கேட்டால் நான் சிரித்ததற்குக் காரணம் உண்டென்று நீங்களே சொல்வீர்கள். நான் சென்ற வருஷமும் இவ்வருஷமும் பி.ஏ. பரீட்சைக்குச் சென்று தவறிவிட்டேன். இதன் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனேயே நானும் இங்கு வந்தேன். நீங்கள் திடுக்கிடுகிறீர்களல்லவா! எந்த இடத்தில் நீங்கள் படுத்துக்கொண்டீர்களோ, அதே இடத்தில் ஒரு நிமிஷத்திற்கு முன்பு நான் படுத்துக்கொண்டிருந்தேன். தங்களைக் கண்டு பயந்துகொண்டு கீழிறங்கினேன். பி.ஏ. பரீட்சையில் முதன்மையாகத் தேறிய தாங்கள் அப்பட்டத்தினால் ஒரு பயனுமில்லையெனக் கண்டு அதைத் திருப்பி அனுப்பி விட்டு உயிர் துறக்கத் துணிந்திருக்கையில், அப்படிப்பட்ட பட்டம் கிடைக்கவில்லையேயென்பதற்காக நான் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்ததை எண்ணிய போது, என்னையறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. இப்பொழுது சொல்லுங்கள். நான் சிரித்ததில் தவறு உண்டா என்று" என்றான் ஜகந்நாதன்.
இதைக் கேட்டதும் மகாதேவ ஐயருக்கு கூட நகைப்பு வந்துவிட்டது. சற்றுநேரம் இருவரும் இடி இடியென்று சிரித்தார்கள். அந்த நிர்மானுஷ்யமான இடத்தில், அந்த நள்ளிரவில் அவர்களுடைய சிரிப்பின் ஒலியைக் கேட்டு, அதுவரை சத்தம் போட்டுக் கொண்டிருந்த பூச்சிகள், தவளைகள் முதலியன பயந்து வாய் மூடிக் கொண்டன. அருகிலிருந்த புளிய மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு பறவை கண் விழித்துக் 'கிறீச்' என்று கத்திற்று.
"உயிர் விடும் யோசனையை மறந்துவிடுவோம்" என்று மகாதேவ ஐயர் கூறினார்.
"ததாஸ்து" என்றான் ஜகந்நாதன். பின்னர் அவன் சொன்னான்:- "இன்றிரவிலிருந்து, நாம் இருவரும் உயிர் நண்பர்களானோம். நாமிருவரும் ஒரே நோக்கங்கொண்டு இருவரும் ஒருவரது உயிரை ஒருவர் காப்பாற்றினோம். இருவரும் ஏறக்குறைய ஒரே நிலையில் இருக்கிறோம். நம்மிருவரையும் சேர்த்து வைக்க வேண்டுமென்பது கடவுளுடைய திருவுள்ளம்போல் தோன்றிற்று."
"ஆம். நண்பர் ஒருவர் இல்லாத காரணத்தினாலேயே, நான் இவ்வளவு விரைவில் மனஞ் சோர்ந்து விட்டேன் என்று இப்போது தோன்றுகிறது. தங்களுடைய நிலையும் அப்படித்தான் இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். இனி இருவரும் சேர்ந்து புதிய பலத்துடனும் உற்சாகத்துடனும் வாழ்க்கைப் போராட்டத்தில் இறங்குவோம்."
"அப்படியேயாகட்டும். ஆனால், என்ன செய்வது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை."
"இனி பரீட்சைக்குப்போகும் எண்ணத்தை விட்டு விடுங்கள். என்னிடம் இரண்டாயிரம் ரூபாய் இருக்கிறதென்று சொன்னேனல்லவா? அதை வைத்துக் கொண்டு ஏதேனும் தொழில் நடத்துவோம்." இவ்வாறு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இருவரும் கை கோர்த்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்கள்.
4 மறுநாள் ஜகந்நாதனுக்கு, அவனுடைய காதல் மனைவி செல்லத்தினிடமிருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அதன் பிற்பகுதியை இங்கே தருகிறோம்:- "...இந்த துக்க சமாசாரத்தில் நமக்கு ஒரு சந்தோஷமான அம்சமும் இல்லாமற் போகவில்லை. அத்தைக்கு என்னிடம் எப்போதுமே நிரம்பப் பிரியம் என்று தங்களுக்குச் சொல்லியிருக்கிறேனல்லவா? அந்திய காலத்தில் நான் அவளுக்குச் செய்த பணிவிடை அந்தப் பிரியத்தைப் பதின்மடங்கு வளர்ந்துவிட்டது. எனவே அவளுடைய மரண சாசனத்தில் பாங்கியில் அவள் பெயரால் இருந்த ரூபாய் மூவாயிரத்தையும் எனக்கு கொடுத்து விட்டதாக எழுதி வைத்திருக்கிறாள். இந்தப் பணம் தங்களாலேயே எனக்குக் கிடைத்தது என்பதை நினைவூட்டுகிறேன். தாங்கள் என்னை வற்புறுத்தி பிறந்தகத்துக்கு அனுப்பியிராவிடில் அத்தைக்குப் பணி விடை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்திராது. அப்போது அவள் பணத்தை எனக்குக் கொடுத்திருப்பது நிச்சயமில்லை. ஆதலின், அந்தப் பணம் முழுதும் தங்களுக்கே உரியதாகும். இன்னொரு சமாசாரம், தங்கள் பரீட்சையின் முடிவு இதற்குள் தெரிந்திருக்க வேண்டும். தேறியிருந்தால் சந்தோஷம், இல்லாவிட்டாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லையென்று எனக்குத் தோன்றுகிறது. பட்டம் பெற்றவர்களுக்கும் கூட இக்காலத்தில் உத்தியோகம் இலேசில் கிடைப்பதில்லையென்று எல்லாரும் சொல்லுகிறார்கள். மேலும் கைகட்டுச் சேவகம் செய்யும் பிழைப்பு தங்கள் இயல்புக்கு ஒத்ததன்று. எனவே இந்த மூவாயிரம் ரூபாயும் மூலதனமாக வைத்துக்கொண்டு, தாங்கள் ஏதேனும் ஒரு தொழில் ஆரம்பித்து நடத்தினாலென்ன? அடியாள் தங்களுக்குப் பிடியாவிட்டால் அதற்காக என்னைக் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. தாங்கள்தான் செல்லங் கொடுத்துக் கொடுத்துத் தங்கள் செல்லத்தைக் கெடுத்து விட்டீர்கள். பிற விஷயங்கள் தங்களை நேரில் தரிசிக்கும்போது."
மேற் சொன்ன சம்பவங்கள் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இப்போது மகாதேவ ஐயரும் ஜகந்நாதனும் "மகாநாதன் கம்பெனி" என்ற பெயருடன் புத்தக வியாபாரமும், பிரசுரமும் நடத்தி, நல்ல லாபம் சம்பாதித்து வருகிறார்களென அறிகிறோம். ஜகந்நாதனுடைய தந்தை மட்டும் "என்னதான் இருந்தாலும், மாதா மாதம் சம்பளமும் அதன் மீது கொஞ்சம் மேல் வரும்படியும் கிடைப்பதுபோல் ஆகுமா?" என்று சொல்லி வருகிறாராம்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்