<$BlogRSDUrl$>

தஞ்சம்புகும் அகதிகளை பொருளாதார அகதிகள் என்று முடி வெடுக்கலாமா?? ---------------------------------------------------------------------------------------------------- இரண்டாம் உலகப் போரின் பெரும் இழப்பினையடுத்து வெளிநாடுகளிலிருந்து பலர் வந்து மேற்கு ஜேர்மனியில் குடியேறத் தொடங்கினார்கள். முக்கியமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து (கிழக்கு ஜேர்மனி உட்பட) 1945-1949 காலப்பகுதியில் மட்டும் 120 இலட்சம் ஜேர்மனியர் வந்து குடியேறினர். 1961இல் கிழக்கு மேற்கு ஜேர்மனியைப் பிரித்து பேர்லின் மதில் கட்டப்பட்டவுடன் கிழக்கு ஜேர்மனியிலிருந்து வருபவர் தொகை வெகுவாகக் குறைந்தது. எனினும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்களினால் மேற்கு ஜேர்மனிக்குத் தேவைப்பட்ட உழைப்புச் சக்திப் பிரச்சினை ஓரளவுக்குத் தீர்க்கப்பட்டதுடன், ஜேர்மனிய மக்கள் தொகையும் அதிகரித்தது. தொழில் வளர்ச்சியினால் தொழிலாளர் பற்றாக்குறை பெருமளவு ஏற்படவே 1955-1973 வரையான காலப் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் மத்திய தரைக் கடலையண்டிய நாடுகளான கிறீக், இத்தாலி, போர்த்துக்கல், யுகோஸ்லாவியா, ஸ்பெயின், துருக்கி, மொறாக்கோ, துனேசியஸ் நாடுகளிலிருந்து பல இலட்சக் கணக்கானோர் தொழிலாளிகளாக மேற்கு ஜேர்மனிக்குத் தருவிக்கப்பட்டனர். இரண்டாம் உலகப்போரில் அழிந்த மேற்கு ஜேர்மனியை மீண்டும் கட்டியெழுப்பிட-பொருளாதார அதிசயத்தை நிகழ்த்த - வெளி நாட்டுத் தொழிலாளரின் (Gastargeuter) பங்கு முக்கியமானது. இவர்கள் இன்றும் கூட குடியேற்ற வாசிகள் (Immigranten) அல்லது வெளி நாட்டவர் (Auslander) என்றே அழைக்கப்படுகின்றனர். இன்று ஜேர்மனியில் அகதிகள் தவிர்ந்த வெளிநாட்டவரில் பெரும் பகுதியினர் சுமார் 20 வருடங்களுக்கு மேல் இங்கு வாழ்ந்து வருபவர்கள் இவர்களின் குழந்தைகளில் 100க்கு 80பேர் இங்கேயே பிறந்து வளர்ந்து வருகிறார்கள். எனினும் இவர்கள் அனைவரும் இரண்டாந்தரப் பிரசைகளாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். ஜேர்மனியில் சுமார் 50 இலட்சம் வெளிநாட்டவர்கள் இருப்பதாக மார்ச் 91இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது இணைந்த ஜேர்மனியின் மொத்தசனத் தொகையில் 65% ஆகும். அரசு தெரிவிக்கும் இத் தகவல் பிழையானதென்றும், வேண்டுமென்றே மிகைப்படுத்தப்பட்ட தொகையைக் கூறி ஜேர்மன் மக்களை அரசு பயப்படுத்துவதாகவும் அண்மையில் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசினால் தெரிவிக்கப்படும் தொகையைவிட மிகவும் குறைவாகவே வெளிநாட்டவர் இங்கிருப்பதாகவும், அரசு அடுக்குமுறை கணக்கெடுக்கும்போது பொது நிறுவனங்களின் முன்னிலையில் நடத்தினால் இந்த உண்மை தெரியவரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். பிரான்ஸ’ல் 8% பெல்ஜியத்தில் 9% சுவிஸ’ல் 16% லக்ஸம் பேர்க்கில் 23% ஆக வெளிநாட்டவர் தொகை இருக்கின்றதென அவ்வவ் நாட்டு அரசுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் பொருளாதாரத்தை வளப்படுத்த தொழிலாளிகளாகத் தருவிக்கப்பட்டவர்களே. வேலைக்காக மேற்கு ஜேர்மனிக்கு வரவேற்கப்பட்டவர்கள் மேல் திட்டமிட்ட முறையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தங்களின் உழைப்புச் சக்தியை இங்கு பறி கொடுத்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வெறும் சக்கையாகத் தமது நாட்டுக்குத் திரும்பிப் போக விரும்பவில்லை. எனினும் இரண்டாம் உலகப் போரின் பின்பு ஜேர்மனியில் தோன்றிய முதலாளியப் பொருளாதார நெருக்கடியில் 1967-68 காலப் பகுதியில் பல வெளிநாட்டவர்கள் தாமாகவே தம் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் எண்ணெய் விலையேற்றத்தின்போது ஏற்பட்ட இரண்டாவது நெருக்கடியின்போது 1972-1973 காலப் பகுதியில் தம் விருப்பினாலான வெளியேற்றம் பெருமளவில் நடக்கவில்லை. கால ஓட்டத்தில் வெளிநாட்டுத் தொழிலாளரின் பாத்திரம் ஜேர்மனியப் பொருளாதாரத்தில் இணைந்து விட்டது. தொழிற்சாலைகளில் கனிசமானளவிலும், கட்டிட வேலை மற்றும் ஜேர்மனியர் அதிகம் விரும்பாத கடினமான, அழுக்கான வேலைகளிலும், ஆபத்தான வேலைகளிலும் வெளிநாட்டவரே அன்றிலிருந்து இன்றுவரை ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளராக வந்த வெளிநாட்டவரை விட அகதிகள் பலரும் ஹோட்டல்கள், விடுதிகள், தோட்டங்கள், பன்றி மாட்டுத் தொழுவங்கள் மற்றும் ஆபத்தை உண்டு பண்ணும் இரசாயனக் கூடங்களிலும் எந்தவித பாதுகாப்புமின்றி வேலை செய்து வருகின்றனர். பலருக்கு வேலை அனுமதிப் பத்திரம் மறுக்கப் பட்டுள்ளதால் "களவாக" மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்கள் தமது சம்பளத்தை தமது சொந்த நாட்டுச் செலாவணியில் கணக்குப் பார்த்து சந்தோசமும் (?) அடைந்து கொள்கின்றனர். இக்குறைந்த சம்பள விகிதத்தால் ஜேர்மனியின் செல்வம் மேலும் மேலும் செழிக்கிறது. வெளிநாட்டவர் உற்பத்திகளில் ஈடுபடும் அதே நேரம் நுகர் பொருட்களையும் வாங்குவதால் மூலதனத்தையும் அதிகரிக்கச் செய்கின்றனர். ஜேர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் சமமின்மையை வெளிநாட்டவரே நிரப்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவரில் அகதிகள் சிறு தொகையினரே எனினும் அகதிகளில் பெருந்தொகையினர் "பொருளாதார அகதிகளே" என்றும், இவர்களை விரட்டும் வகையில் அகதிகள் சட்டம் மாற்றப்பட வேண்டும் எனவும் கோஷங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. ஐக்கியநாடுகள் சபையின் அகதிகள் ஆணையகம் (UNHCR) தெரிவிக்கும் கணக்கின்படி 150 இலட்சம் மக்கள் அகதிகளாக தம் சொந்த நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதில் பெரும் பகுதியினர்-125 இலட்சம் பேருக்கு மேல்-ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க பகுதிகளில் தமது அண்டை நாடுகளான வறிய நாடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். மிகுதி 25 இலட்சத்திற்கும் குறைவானவரே அகதிகளாக மேற்கு ஐரோப்பா, கனடா, வட அமெரிக்கா நாடுகளிற்கு வந்துள்ளனர். மேற்கு நாடுகளுக்கு அகதிகளாக வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழரின் தொகையை விட, அயல் நாடான இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றவர்களின் தொகை அதிகமானதாகும். இந்தியாவுக்கு அகதிகளாகப் போனவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை. இவர்களும் இன்று இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளனர். இதைவிட தங்களின் சொந்த நாடுகளிலேயே பெருந்தொகையான மக்கள் அகதிகளாக முகாம்களிலும், காடுகளிலும், பதுங்கு குழிகளிலும் வாழ்கின்றனர். இலங்கையில் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
அழகின் கர்வம் அழியும் ------------------------------- கிளைகளில் பறவைகளின் கலகலப்பு. ஆற்று நீரில் மிதந்து வரும் ஒருசில படகுகள். நீரை உறிஞ்சிக்குடிக்கும் பசுக்கள். நீரில் படுத்துப்புரண்டு சேறைக்கலக்கும் எருமைமாடுகள். இடுப்பு வரை நீரில் நின்று கொண்டு உதிக்கும் சூரியனை இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டுக் கொண்டு நிற்கும் வயதான சில ஆண்கள். நீரை இரு கைககளிலும் ஏந்தி காயத்ரி மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்து சூரியனை நோக்கி அர்க்கியம் விடும் அந்தணர்கள். தோள் வரை மூடிமறைத்து நீராடும் பெண்கள். நீர்ப்பரப்பில் துள்ளிவிளையாடும் மீன்கள். அரசமரத்தடியில் ஒரு உயர்ந்த மண்மேடை. அதில் பத்மாசனம் போட்டுக் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கிறார் குருநாதர். பக்கத்தில் கைகட்டிக் கொண்டு குருநாதர் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான் சீடன். குருநாதர் முகத்தில்தான் எத்தனை தேஜஸ்... வியந்து நிற்கிறான் சீடன். மெல்லக் கண் விழிக்கிறார் குருநாதர். பணிந்து நிற்கிறான் சீடன். `என்னப்பா... நகர மையத்திலிருந்து வந்து விட்டாயா...?' `ஆம் குருநாதா... இப்பொழுது தான் வந்தேன்' `உன் முகத்தில் என்ன இவ்வளவு பிரமிப்பு... சிந்தனை முடிச்சிட்டிருக்கிறதே...' `ஆம் ஆசார்ய... நகர மையத்தில் ஆலயம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பகவத் கைங்கர்யம்... ஆலய வழிபாடு... பக்தர்கள் தரிசனம்... ஸத் விஷயங்கள் சிரவணம்... பஜனை... நாம சங்கீர்த்தனம்... இப்படித்தான் காலம் கழித்தேன்...' `அப்படியிருந்தும் உன் முகத்தில்... விசனம் கலந்த வியப்பு பூசியிருக்கிறதே... ஏனப்பனே...' `அங்கே நான்.. கண்டதும் கேட்டதும்... அனுபவித்த சில அனுபவங்கள் என் மன மையத்தில் மயக்கம் உண்டு பண்ணிவிட்டன...' `அங்கு... நீ... கண்டது... கேட்டதை விரிவாகச் சொல்....' சீடன் சொல்லலானான்... திருக்கோயில் சந்நிதித் தெருவில் ஒரு வீடு. அங்கு ஒரு தம்பதி. அழகான தம்பதி. ஆண் கட்டுறுதியுள்ள உடல். செக்கச்சிவந்த மேனி. முறுக்கான தேகக்கட்டு. ஆஜானுபாகுவுள்ள சுந்தரவடிவு. நடந்து போனால் பார்ப்பவரைக் கவர்ந்து ஈர்க்கும் சௌந்தர்ய சரீரம். அவன் மனைவியும் கணவனுக்கு ஏற்ற வடிவுடைய அழகிதான். ஆனாலும் தன் கணவனின் அழகால்... வசீகர வடிவத்தால் கர்வம் கொள்கிறாள். என் கணவன் போல அழகு யாருக்குண்டு... ஆண்களே... மயங்கும் மேனி படைத்தவன். சொக்கவைக்கும் சௌந்தர்யம் உள்ள... அவர் என் கணவர். நான் பாக்யசாலி... நானே பாக்கியசாலி... அவன்... தினம் ஒரு அலங்காரம். விதவிதமான ஒப்பனை. பட்டாடை புனைவான். நறுமணப் பூச்சு. சுருளான கேசத்தில் சொகுசான அலங்காரம். மன்மத ஆஹ்ருதி. சிங்கார சிலிர்ப்பில் எவரையும் ஈர்க்கும் வண்ணம். மனைவியின் மனத்தில் மட்டற்ற ஆணவம் அளவுக்கு மீறிய செருக்கு. அன்பே... கண்ணாளா... கனியே... களிப்பே... இன்ப வடிவே... அழகு ரூபனே... கந்தருவ வடிவே... இப்படிக் கொஞ்சுவாள். பூரிப்பால் குதூகலிப்பாள். உல்லாசம்... உற்சாகம்... உத்வேகமான சுகரஸனை. தன் கணவனைப் பார்த்துப் பரவசமாவதைத் தவிர வேறெந்த வேலையுமே கிடையாதா... பர்த்தாவின் பேரழகில் தன்னை மறந்த மயக்கம். இந்தக் காட்சி என் மனத்தில் விகாரமான சலசலப்பை உண்டு பண்ணிவிட்டது குருநாதா.... தன் பர்த்தாவிடம் இப்படியொரு பிரேமையா... தன் கணவன் சரீர எழில் காட்சியில் இப்படியொரு ஈடுபாடா... இந்த சலன மனத்தால் குழப்பத்தால் ஓடோடி வந்து விட்டேன் குருநாதர் சந்நிதிக்கு... சொல்லி முடித்தான் சீடன். எழுந்திருக்கிறார் ஆசார்யர். வா... போகலாம் எங்கே... குருநாதா... நகர மையத்துக்கு... ஆலய சந்நிதித் தெருவுக்கு... `ஆலய சந்நிதி என்னாமல் தெருவுக்கு என்கிறாரே ஆசார்யர்...' அழகன் அவன் மனைவி. அதனால் ஏற்பட்ட மனச்சலனம்... இதைத் தெளிவாக்க தெருவுக்குத் தானேயப்பா போகவேண்டும். விரைந்து நடக்கிறார்கள். நகர மையத்துக்குள் நுழைகிறார்கள். கோபுர தரிசனம் ஆலய மணி ஓசை நாதஸ்வர நாதம் பஜனை கீதங்கள் ஹர ஹர சம்போ மஹா தேவா... பக்தர்களின் கூப்பாடு அத்தனை சப்தங்களையும் தாண்டிக்கொண்டு ஒரு அலறல் சப்தம்... `ஐயோ... போயிட்டியே...டா... என் ராசாவே...' பெண்மணியின் அலறல். துணுக்குற்று நிற்கிறான் சீடன். `ஏன் நிற்கிறாய் சீடனே...' `குருநாதா... குருநாதா... இந்த அழுகைக்குரல்.. நான் சொன்னேனே... அந்த அழகு தம்பதியின் பெண்... ஓலம்தான்...' `வா... போகலாம்' `அய்யோ... போயிட்டியே... இனி நான் என்ன செய்வேன்... எப்படி வாழ்வேன்... உன்னைப் போல அழகன் யாருமில்லேன்னு இறுமாப்புப் பட்டுக்கிட்டிருந்தேனே... என்ன இப்படி தவிக்கவிட்டுட்டுப் போயிட்டியே... என் ராசாவே... என் உயிரே... என் கண்ணாளா...' `பாவம்...ங்க நேற்று... ராத்திரி அரவம் தீண்டி... போயிட்டாரு... அழகு சுந்தரம்...' என்ன அழகு என்ன கம்பீரம் ஆண...ழகு... ஆணழகன். அந்த வீட்டை குருவும் சீடனும் நெருங்கி வந்தனர். வீட்டுரேழியில் அந்த ஆண்... அதுவாக நீண்டு நெடிய உருவம்.. சில்லிட்டுக் கிடக்கிறான். `அய்யய்யோ யாராவது... எனக்குத் துணையா... இருங்களேன்.. எனக்கு பயமா இருக்கே... இந்த பிணத்துக்குப் பக்கத்துல... என்னால இருக்க முடியது.. எனக்கு பயமா இருக்கே...' அலறல். விநோதமான ஒப்பாரி. குருநாதர் சீடன் முகத்தைப் பார்க்கிறார். சீடன் தலைகுனிந்து கொள்கிறான். இருவரும் நடக்கிறார்கள் ஆற்றங்கரைநோக்கி....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org