<$BlogRSDUrl$>

பச்சைத்துரோகம்

மதியம் கடந்து விட்டது. அப்படியிருந்தும் வெயில் தணியவில்லை. சவிரிமுத்தர் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் ஒன்று வழுக்கை விழுந்த தலையில் இருந்தது. முன்னோக்கிப் பெருத்திருந்த தொந்தி பெருஞ்சுமையாகக் கனக்க மூச்சு இரைக்க இரைக்க பிரதான ஒழுங்கையில் திரும்பினார். எதிரே ஜீப் வண்டியொன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. ஜீப்பைக் கண்டதும் மரநிழலில் ஒதுங்கும் பாவனையில் கானோரத்தில் நின்ற பூவரச மரத்தடியில் நின்று கொண்டார். ஜீப் வண்டி அவரைக் கடந்து எதிர்த்திசையை நோக்கி வேகமாக விரைந்து கொண்டிருந்தது. கடந்து செல்லும் வேகத்திலும் கூட சவிரிமுத்தர் அவனைப் பார்த்து விட்டார். இரு பொலிஸ்காரர்களுக்கிடையில் பெருமாள் இருந்துகொண்டிருந்தான். அவனுடைய பெரிய கண்கள் சவிரிமுத்தரைக் கண்டு கொண்டதும் எதையோ அவசரத்துடன் கேட்க எத்தனிக்கும் வேளையில் வண்டி வெகுது}ரம் சென்றுவிட்டது. அவனுடைய கண்கள். அவை பார்த்த பார்வை. சவிரிமுத்தரின் மனதில் ஏதோ ஒரு உறுத்தல்.உடலில் ஒரு கணசிலிர்ப்பு. இனம்புரியாத இரைச்சல்கள். சோர்வுடன் நடந்தார். ஒழுங்கை நிறைய சனங்கள். படலை வாசல்களிலும் வேலிகளுக்கு மேலாலும் இன்னும் பலர். ஜீப் வண்டி சென்ற திசையை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களுக்குள் எதையோ பேசி விமர்சித்துக் கொண்டு அனுதாபப் பட்டுக்கொண்டிருந்தனர். எதையுமே கண்டுகொள்ளாதவராக சவிரிமுத்தர் நடந்து கொண்டே இருந்தார். வெய்யிலில் நடந்து வந்த களைப்பில் உடம்பு வேர்வையால் நனைந்திருந்தது. அணிந்திருந்த மேற்சட்டையை களைந்து போட்டுவிட்டு சரு சருவென சடைத்து ரோமங்கள் வளர்ந்திருந்த வெறும் உடம்பை ஆசுவாசத்துடன் அங்கிருந்த ஈசிச்செயரில் சாய்த்துக் கொண்டார். கழுத்தில் இரட்டை வடம் சங்கிலி கனத்தது. விரல்களில் கற்கள் பதித்த மோதிரங்கள்.கருங்காலித் தடிக்கு ப10ண் போட்டது போல் மினுமினுத்துக் கொண்டிருந்தன. ஆனாசி... ஆனாசி.... இவன் செல்லையா வந்தவனோ? சவிரிமுத்து போட்ட சத்தத்தில் குசினிக்குள் இருந்தவள் வெளியே வந்தாள். ஏன் இப்பிடி சத்தம் போடுறீங்க. இப்பதான் அவன் கொண்டுவந்து வச்சிற்றுப் போறான். சாருக்குள்ளதான் இருக்கு... அதை எடுத்துக் கொண்டு வா.... ஆனாசி விசுக்கென்று சாருக்குள் சென்றாள். வரும்போது அவள் கையில் இருந்த போத்தல்களில் கள் நிரம்பியிருந்தது. சவிரிமுத்தரின் காலடியில் வைத்துவிட்டு இவள் மறுபடியும் குசினிக்குள் போய்விட்டாள். சவிரிமுத்தர் கோப்பையில் சிறிது கள்ளை வார்த்து பக்கத்தில் வைத்துவிட்டு புகையிலையைக் கிழித்து சுருட்டத் தொடங்கினார். அவருடைய சிந்தனை எதிலோலயித்திருந்தது. என்னங்க ஒரு விஷயம் கேள்விப் பட்டீங்களோ. நம்மளோட தொழிலுக்கு நிண்ட பெருமாளையல்லோ பொலிஸ்காரங்கள் பிடித்துக்கொண்டு போறாங்க. குசினிக்குள் இருந்து ஆனாசியின் சத்தம் கேட்டது. நானும் வழியில பார்த்துக் கொண்டுதான் வாறன். என்ன நடந்ததாம்..... சவிரிமுத்தர் உணர்ச்சியின்றிப் பேசினார். அவன் கள்ளத் தோணியெண்டு யாரோ பொலிசுக்கு பெட்டிசம் போட்டிட்டாங்களாம். அதுதான் அவனை வந்து இழுத்துக் கொண்டு போறாங்கள். ஏனெண அவன இனிமேல் விடமாட்டாங்களா.... ஆனாசி வெளியே வந்து சவிரிமுத்தருக்குப் பக்கத்தில் நின்று கொண்டாள். சவிரிமுத்தர் மனைவியை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார். மௌனமாக கோப்பையிலிருந்த கள்ளை எடுத்து ஒருதடவை உறிஞ்சினார். அந்த மூச்சிலே கோப்பை முழுவதும் காலியாகி விட்டது. ஆனாசிக்கு அதிசயமாக இருந்தது. இவ்வளவு பெரிய செய்தியைச் சொல்லியும் புருஷன் அக்கறைப் படுத்துவதாக தெரியவில்லை. ஏனெண உங்களுக்கு பொலிசில இருக்கிற பெரியவங்களத் தெரியுந்தானே. ஓருக்காய்ப் போய் என்னெண்டுதான் பாத்திட்டு வாங்கோவன்..... சவிரிமுத்தர் மறுபடியும் கள்ளை வார்த்து ஒரு முறடை உறிஞ்சி விட்டு கள்ளில் தோய்த்து விட்ட பெரிய மீசையை தடவி விட்டுக் கொண்டார். பேச்சி இதுகள் ஒண்டும் உனக்கு விளங்காது. என்னமாதிரித்தான் தெரிஞ்சவங்களெண்டாலும் லேசில இந்தமாதிரி விசயங்களை விடமாட்டாங்கள். ஆனாசி அதற்கு மேல் எதுவும் பேசாமல் போய்விட்டாள். சவிரிமுத்தர் சுற்றிவைத்திருந்த சுருட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தார். ஆனாசி கேட்டதற்காக ஏதோ சொல்லி வைத்தார். ஆனால் அவருடைய மனதில் பெருமாளின் விடயம் உறுத்திக் கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டார். சவிரிமுத்தருக்கு நன்றாக நினைவிருந்தது. பத்து வருடங்களுக்கு முன் ஒரு வெள்ளிக்கிழமையாய் இருக்கவேண்டும்..... தோணிக்காசுக்கு கொழும்புத்துறைக்குப் போவதற்காக யாழ்ப்பாண பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுதுதான் பெருமாளை சந்தித்தார். அவனுக்கு அப்போது பத்து வயதிருக்கும். கறுத்த மேனி. ஊதி மினுமினுப்புடன் இருந்த வயிறு. சிக்குப் பிடிக்காத தலைமயிர். காவி படிந்து முன்னோக்கி மிதந்து கொண்டிருந்த பற்கள். பெரிய கண்கள். பீத்தல் விழுந்த துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு பஸ் கிய10வில் நின்றவர்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அவனைக்கண்டதும் சவிரிமுத்துக்கு ஆனாசியின் நினைவு வந்தது. வெகுநாட்களாகவே வீட்டு வேலைக்கு ஒருவர் வேண்டுமென்று நச்சரித்துக் கொண்டிருந்தாள். இவருடைய வலைக்கும் ஆள் பற்றாக்குறையாக இருந்தது. ~தம்பி.... இஞ்சால உன்னத்தான். இஞ்ச வா..... பெருமாள் திரும்பிப் பார்த்தான். அவன் முகத்தில் என்ன வென்று விரித்துரைக்க முடியாத பாவம். அவன் சவிரிமுத்தர் அருகே வந்தான். ~தம்பி உன்ரை பேரென்ன... ~பெருமாளுங்க... ~எந்த ஊர் மோன உனக்கு ~பதுளையிங்க... ~அப்ப வாச்சுப் போச்சு என்று மனதிற்குள் நினைத்தபடி சவிரிமுத்தர் தொடர்ந்தார். ~அப்பா..... அம்மா...... இல்லையோ? ~அப்பா.... செத்துப் போட்டாரு. அம்மா தங்கச்சி தோட்டத்திலே வேலை செங்சிக்கிட்டு இருக்கிறாங்க.. ~ஏன் உனக்குத் தோட்டத்திலே வேலை செய்யப் பிடிக்கேல்லையா? ~என்னோட வீட்டுக்கு வாறியா...? உனக்கு சாப்பாடு தந்து உன்ர வீட்டுக்கும் காசு அனுப்பிறன் - தயக்கம். ~ம்... சொல்லன் ~சரியிங்க..... அவன் சம்மதித்து விட்டான். பெருமாள் வீட்டுக்கு வந்த போது சம்மாட்டி சவிரிமுத்து சாதாரண சவிரிமுத்துவாகத்தான் இருந்தார். பெருமாள் வீட்டில் எடுபிடி வேலைகளைக் கவனித்ததுடன் வலையில் பிடித்து விற்றதுபோக ஐஸ் போட்டு வைத்தல் போன்ற வேலைகளையும் கூட இருந்து செய்வான். அந்தத் தெருப்பிள்ளைகள் எல்லாரும் அவனுக்குச் சினேகிதர். அவனுடைய வயதுக்கு மூத்த அனுபவ அறிவும், அதனால் அவன் பேசும் பெரிய விசயங்களையும் ஆச்சரியத்துடன் கேட்பார்கள், கூட விளையாடும் சிறுவர்கள். எப்போதாவது அவர்களுக்குள் சண்டை மூழும். அவனைப் பார்த்து ~கள்ளத்தோணி என்று பட்டம் சொல்லுவார்கள். ஆனால் அவன் அந்த வார்த்தையின் அர்த்தத்தைப்புரிந்து கொள்ளாதவன் போல உண்மையில் அவனுக்குப் புரியாமல் கூட இருக்கலாம்.- பேசாமல் இருப்பான். ஆனால் ~கரிக்கோச்சி என்று மட்டும் அவனை யாரும் பேசி விட்டால் போதும் கோபம் தலைக்கேற, மூர்க்கத்துடன் - சொன்னவனை வளைத்துப் பிடித்து முதுகில் ஒரு அறை கொடுக்காமல் அடங்கமாட்டான். பற்களை ~நறநற வெனக் கடித்துக் கொண்டு பெரிய விழிகளைப் பயங்கரமாக உருட்டுவான். வாயில் வந்த து}சண வார்த்தைகளை எல்லாம் கொட்டிக்கொள்வான். சிலவேளைகளில் துண்டு பீடிகளைப் பொறுக்கி வீட்டுக் கொல்லைப் புறத்தில் நின்று குடிப்பதைச் சவிரிமுத்தர் கண்டிருந்தாலும் எதுவும் சொல்லுவதில்லை. ஏதாவது ஏசினால் ஓடிப் போய்விடுவான் என்றபயம். அவருக்கு அவனது சுறுசுறுப்பும் பிடித்திருந்தது. சிலநாட்களில் பெருமாள் சவிரிமுத்துவுடன் கடலுக்குப் போகத் தொடங்கி விட்டான். தோணியில் பெருமாள் கால் வைத்தவேளை ~விடுவலையில் கயல் மீன்அள்ளிச் சொரிந்தது. சில வருடங்களிலேயே சவிரிமுத்து பல லட்சம் பெறுமதியான தோணிகளுக்கும், நைலோன் வலைகளுக்கும் அதிபதியாகி ஊரில் பெரிய சம்மாட்டி ஆகிவிட்டார். மலைப்பாறையில் பிறந்து கடல் உவரில் ஊறிய பெருமாளின் உடல் உருண்டு திரண்டு தசைக்கோளங்கள் புடைத்து நிற்கும் பருவத்தை எட்டிவிட்டான் பெருமாள் அவன் உழைத்த பத்து வருடங்களிலும் வயிறு நிறையச் சாப்பாடு. ஒரு நாளைக்கு இரண்டு கட்டு பீடி, ஞாயிற்றுக் கிழமைகளில் சினிமா பார்க்கக் காசு ... இவைதான் அவன் உழைப்புக்குக் கிடைத்தவை. பத்து வருடங்களாக தாய் சகோதரியை காணாமல் மறந்திருந்த பெருமாளுக்கு சில நாட்களுக்கு முன் திடீரென ஏனோ ஊருக்கு போக வேண்டுமென்று மனம் பேதலித்தது. வேட்கை கொண்ட மனதின் விருப்பத்தை சம்மாட்டியாரிடம் வெளியிட்டு, ஐநு}று ரூபா காசு கேட்டான். சுரண்டிப் பிழைத்து சொகுசு அனுபவித்துப் பழக்கப்பட்டுவிட்ட சவிரிமுத்துவுக்கு இது பேரிடியாகிவிட்டது. பெருமாள் செய்யும் வேலையின் பழு, அவனை இழந்தால்... அவன் திரும்பிவராவிட்டாலும்...? அதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இதனால் பல நாட்களாக கடத்தி வந்தார்.ஓவ்வொரு நாளும் பெருமாளின் ஊமை முணுமுணுப்பு இரைச்சலாகி வெடித்தது. ஒருநாள் ஊதியம் எதுவுமின்றியே வெளியேறிவிட்டான். அடுத்த நாள் சவரிமுத்துவின் பரம விரோதி பேதுருவின் நைலோன் வலையில் சேர்ந்து விட்டான் என்ற செய்தியை சவிரிமுத்து அறிந்தபோது அதிர்ந்தே போய் விட்டார். - அந்தப் பெருமாள் இப்பொழுது பொலிசில். ~என்ன சம்மாட்டியார் கனக்க யோசிச்சுக் கொண்டிருக்கிறீங்க. அப்பொழுதுதான் வாசல் படியைத் தாண்டி வந்து கொண்டிருந்த குத்தகைக்காரன் யோணின் இன்னொரு கோப்பைக்குள் ஊற்றி அதைக் குத்தகைக்காரனிடம் நீட்டினார். ... .... ~என்ன வி~யம் குத்தகை... இந்த மத்தியான நேரத்தில சவிரிமுத்து வினவினார். ~ஒண்ணுமில்லை சம்மாட்டியார்... நேற்று சுவாமியார் கூப்பிட்டு இந்த முறை பெருநாள் நல்ல முறையில கொண்டாட வேணும் எண்டு சொன்னார். ~ஓ... அதுக்கென்ன... சிறப்பாகச் செய்வம்.... சொல்லிக் கொண்டே சவிரிமுத்து கோப்பை முழுவதையும் காலி செய்துவிட்டு, மறுபடியும் கோப்பையை நிரப்பினார். குத்தகைக்காரர் மீண்டும் தொடர்ந்தார். ~இந்த முறை வழமைபோல் கோயில் சோடினைகள், வெடி, மத்தாப்பு எல்லாம் உங்க பொறுப்பு..... குத்தகைக்காரர் இப்போது தானே போத்தலை எடுத்து நிரப்பிக்கொண்டார். ~அதுக்கென்ன இந்தமுறை வாற ஒரு கிழமை உழைப்பை அப்படியே ஒதுக்கிவிடுறன். கோப்பையை நிரப்புவதும் வெறுமையாக்குவதுமாய் சில நிமிடங்கள். சவிரிமுத்துவுக்கு சற்று ஏறிவிட்டது. குத்தகைக்காரர் நிதானத்துடன் பேசினார். ~ஒரு விஷயம் கேள்விப்பட்டியளோ... உங்களை விட்டுப்போட்டு பேதுருவட வலைக்குப்போன அவன் தான்... பெருமாள், அவனைக் கள்ளத்தோணியெண்டு பெட்டிசம் போட்டு பொலிசட்டைப் பிடிச்சுக் கொடுத்துப் போட்டாங்களாம் ஆரோ... ~ஓம் ஓம்... நானும் வழியில பாத்தன். பாவம் பெருமாள். நல்ல பெடியன். சவிரிமுத்து அரைமயக்கத்துடன் அனுதாப வார்த்தைகளைக் கொட்டினார். ~அப்ப நான் வரப்போறன் சம்மாட்டி என்று கூறிக்கொண்டே குத்தகைக்காரர் எழுந்து மெதுவாக நடந்தார். சவிரிமுத்து ஒரு நமட்டுச் சிரிப்புடன் அண்ணாந்து பார்த்தார். பருந்துகள் எதையோ தேடிப்பறந்து கொண்டிருந்தன.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

பண்பாடு அழிகிறதா?

திரும்பத் திரும்ப இதைப் பற்றியேதான் எழுத வேண்டுமா என்ற ஆயாசம் ஏற்பட்டாலும் கூட, எல்லை மீறி அளவுக்கு அதிகமாகப் போய்க் கொண்டிருக்கிற 'ஆபாசப் போக்கு' சகிக்க முடியவில்லைதான். எப்படி வன்முறை என்பது சமுதாயத்தில் ஒரு புண்ணாக வளருகிறதோ, அதே போல ஆபாசம் என்பது இன்னொரு புண்ணாக புரையோடிவருகிறது. சமூகத்திற்கு நல்ல இரண்டு கண்கள் தேவையென்பது போக இரண்டு புண்கள்தான் இங்கு இப்போது இருக்கிறது. ''முன்னாடியெல்லாம் வீட்லதிருடுவாங்க, கொள்ளையடிப்பாங்க படிச்சிருக்கோம். ஆனால் இப்பொழுதெல்லாம் திருட வர்றவங்க சர்வசாதாரணமாக் கொலை பண்ணிட்டுப் போறாங்க. அந்த அளவு ரத்தம், உயிர்ங்கறது எல்லாம் எல்லோருக்கும் சாதாரணமாப் போச்சு'' என வருத்தப்பட்டார். தீவிரவாதிகள் அப்பாவிகளின் தலையை வெட்டுவதைத்தான் இன்டர்நெட்டில் போட்டுக் காண்பிக்கிறார்களே. போதாததற்கு நம்ம டீ.வி.க்களிலேயும், சினிமாக்களிலேயும் 'கத்தியைத் தீட்டாத' கதாநாயகனே இல்லை. இதெல்லாம் எந்த அளவு சமுதாயத்தைப் பாதிக்கிறது என யார் கவலைப்படுகிறார்கள்? 'துட்டு' வந்தால் போதாதா? இதுதான் இப்படியென்றால் ஆபாசத்திற்கு ஓர் எல்லையே இல்லாமல் போய் விட்டது. ஆபாசத்தின் இறுதி நிலைக்கே போய் விட்டார்கள். அதற்குப் புதிது புதிதாக வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். சமீபத்தில் வந்த 'நியூ' சினிமா பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதே போலத்தான் பாடல்களும். இதுதான் எழுதுவது என்ற 'லிமிட்'டெல்லாம் போயே போச்சு! டீ.வி.யில் சீரியல்களிலே பெண்கள் மூழ்கிப் போய் கண்ணீரைச் சிந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தியேட்டர்களுக்கு விடலைப் பையன்களை இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்குத்தெரிந்ததெல்லாம் கேவலமான ஆபாசக் காட்சிகளும், படு மட்டமான பாடல்களும், கொச்சையான நடனக் காட்சிகளும்தான். இவர்கள் இப்படி சம்பாதிப்பதற்கு வேறு 'வேலை'க்குப் போகலாம். இதனால் எப்படிப்பட்ட மோசமான பாதிப்புக்கள் சமுதாயத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை ஏன் இவர்கள் உணரமாட்டேன்என்கிறார்கள்? சிறு குழந்தைகளுக்குப் பெற்றோர்களே கவர்ச்சிகரமாக 'டிரெஸ்' போட்டு அழைத்துச் செல்கிறார்கள். ஒரு பெண் எத்தனை பேரைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாள் என்று கதை கதையாகத்தினமும் பத்திரிகையில் வந்து கொண்டு −ருக்கிறது. திரையுலகிலோ அப்பனும், பிள்ளையும் சேர்ந்து இன்னும் எவ்வளவு ஆபாசமாகக்காட்சிகளை எடுக்கலாம் என விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது சேறு, மலம், அசிங்கம் என்ற உணர்வுகளே போய், ஏதோ சந்தனத்தில் நீராடுவதைப் போல நினைத்துக் கொண்டு −ந்தச் சமுதாயம் உழலுவதைப் பார்க்கும் போது 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்தநிலைகெட்ட மனிதர்களை நினைக்கும் போது' எனக் குமுறத்தான் தோன்றுகிறது. 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என ஒரு பாட்டாம். இப்படி எழுதுகிறவர்களின் கைகளை ஒடித்து விடலாமா எனத்தான் தோன்றுகிறது. எழுதுகிறவரின் குடும்பத்தில் இருப்பவர்கள் இதை ஆட்சேபிக்க வேண்டும். 'இப்படியாச்சும் அந்தக் காசு வேணுமா' என அவர்களைக் கேட்க வேண்டும். ஒரு பெண்ணைக் கேவலமாகவே இங்கே பார்க்கக் கற்றுக் கொடுப்பதால் படிக்கவும், வேலைக்குச் செல்லவும் வெளியே வருகின்ற எளிய நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் எல்லாம் எப்படி அவதிக்குள்ளாகிறார்கள் என்பதை இவர்கள் என்றைக்கு உணரப் போகிறார்கள்? 'கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தால் அவள் காதலியாகி விடுவாள்' என்றசித்தாந்தத்தைச் சொல்லியதால் அவமானம் தாங்காமல் ஓர் இளம்பெண் மாண்டே போனாள். ரொம்ப நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. இத்தனையும் போதாதென்று விளம்பரங்கள். கொசுறாக அதிலே வரும் ஆபாசங்கள். இதற்கெல்லாம் ஏதாவது ஒரு முடிவு கட்டினால் தேவலை என்று தோன்றுகிறது. 'எங்களின் பொழுதுபோவதற்காக ஆடிப் பாடும் நீங்கள், எங்கள் மீது சாக்கடையை அள்ளி வீசுவதற்கு அனுமதிக்க மாட்டோம்' என்று குரல் கொடுக்க வேண்டும். சமுதாயத்திலே பல நிலைகளிலே இருக்கின்ற பெண்கள் ஒன்றுகூடி இது பற்றிப் பேசி பெண்கள் அணியை ஒன்றுதிரட்டினால் நன்றாக இருக்கும். 'இனிமேல் பெண்களின் அந்தரங்கத்தைக் காண்பிக்கச் செய்தால் நடக்கிற கதையே வேறு' என உறுமும் ஒரு படை இங்கே தயாராகுமானால் கொஞ்சத்திற்குக் கொஞ்சமாவது நம் பண்பாடு மிஞ்சும் என நினைக்கிறேன். ஒரு கதை சொல்வார்கள். ஒரு வயதான பிட்சுவும், −ளைஞனும் நடந்து வருகிறார்கள். ஓர் ஆற்றைக் கடக்க நேரும்போது அங்கே ஒரு பெண், ஆற்றிற்கு அந்தப் பக்கம் போக முடியாமல் தவிக்கிறாள். இந்த வயதான பிட்சு அந்தப் பெண்ணைத் தூக்கி அந்தப் பக்கம் விட்டு விட்டு நடந்தாராம். இந்த இளைய பிட்சுவுக்கு ஒரே கோபம், 'ஒரு துறவி இப்படிச் செய்யலாமா?' என. மாலையில் அவர்களின் இருப்பிடம் வந்தவுடன் கேட்டாராம், ''இது துறவுக்கு எதிரானது அல்லவா?'' என்று. வயதானபிட்சு வியப்போடு, ''மகனே, நான் அப்போதே அந்தப் பெண்ணை இறக்கி விட்டு விட்டேன். நீ இன்னுமா அவளைச் சுமந்து வருகிறாய்?'' என்று கேட்டாராம். இன்று அப்படித்தான் இருக்கிறது. இளைஞர்கள் அத்தனை பேரும் எந்த நேரமும் காமமும், குரோதமும் சுமப்பவர்களாக வளரத்தான் இங்கே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். படிப்பிலே ஆர்வமும், வாழ்க்கையிலே முன்னேற வேண்டும் என்ற தீவிரமும் உடைய இளைஞர்கள் எல்லாம் கரையேறிப் போய் விடுகிறார்கள்.சரியான வழிகாட்டுதல் இல்லாத, மனசஞ்சலம் உடைய அதிகபட்ச இளைஞர்களும், பெண்களும் இத்தகைய அவலச் சூழலிலே மாட்டிக் கொண்டு அழுந்திக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு வலுவான பெண்கள் அமைப்பு உருவாகி இந்தக் கேவலப் போக்கைத் தடுக்குமா? சமுதாயப் புண்கள் ஆறி, கண்கள் உருவாகுமா?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

பிஞ்சு முகம்

யாரோ கதவை தட்டினார்கள். அழகு ராசு திடுக்கிட்டான். யாராயிருக்கும்? போலீஸா? நிச்சயம் போலீஸாய்தான் இருக்கும். போலீஸை தவிர இதுவரை யாரும் அவன் வீட்டுக் கதவை தட்டியதில்லை. அவன் இந்த வீட்டுக்கு குடி வந்து பத்து நாள்தான் ஆனது. அதற்குள் எப்படி போலீஸிற்கு துப்பு தெரிந்தது? மீண்டும் கதவு தட்டப்பட்டது. வாரிசுருட்டி எழுந்தான். பார்வையை கூர்மையாக்கி கதவின் இடைவழியேப் பார்த்தான். சேலை தெரிந்தது! மஞ்சள் கலரில் நீல பூ போட்ட சேலை! அவன் அதிர்ச்சி அடைந்தான். போலீஸ் நின்றிருந்தால் கூட இப்படி அதிர்ச்சி அடைந்திருக்கமாட்டான். இவனை போலீஸ் தேடி வருவது வாடிக்கை. ஆனால் ஒரு பெண் இவனைத் தேடி வந்திருக்கிறாள் என்றால்... அவன் பெண்களை, ஏன் உறவுகளை விட்டே ரொம்ப நாளாகி விட்டது. இருபது வருசத்துக்கு முன்னால் அவனுக்கு பத்து வயது இருக்கும் போது அப்பாவிடம் அடிவாங்கி, சித்தியிடம் இரும்பு கம்பியால் சூடும் வாங்கி ஊரை விட்டு ஓடிவந்தான். நகருக்கு வந்து சேர்ந்தவனுக்கு கெட்ட சகவாசம்தான் அறிமுகம் ஆனது. இப்போது அந்த கெட்ட சகவாசம் அவனை கொள்ளைக் காரனாக்கியதோடு அவன் கொலை செய்யாமலே அவன் மீது இரண்டு கொலை குற்றத்தை வேறு சுமத்தியிருந்தது. இந்த மாதிரியான விஷயங்கள் அவனுக்கு இப்போது தூசி மாதிரி. சொல்லப் போனால் இதனால் அவன் கோஷ்டிகளின் இடையே பெருமை கூட அடைந்திருந்தான். மீண்டும் கதவு தட்டப்பட்டது. அவன் கதவைத் திறந்தான். கையில் குழந்தையோடு விசுக்கென அவனைத் தாண்டிக் கொண்டு அவள் உள்ளே நுழைந்தாள். வயது இருபத்தி ஐந்துக்குள் இருக்கும். பெரிய விழிகள். சின்ன நெற்றி அதில் பளிச்சிடும் குங்குமம். எப்போதும் சிரிக்க தயாராகும் உதடுகள். ஒற்றை மூக்குத்தி அவள் முகத்திற்கே லட்சணத்தை தர கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு அவள் பெண்மையையே பூர்த்தி செய்திருந்தது. அவனைக் கண்டு அவள் பயந்ததாகவோ, திகைத்ததாகவோ தெரியவில்லை. அவன் தான் திகைத்துப் போயிருந்தான். இது நாள் வரையிலும் இவ்வளவு கிட்டத்தில் ஒரு பெண்ணைக் கூட அவன் பார்த்ததில்லை. அவள் தன் தோளில் தூங்கிய பிள்ளையை நடு வீட்டிற்குள் படுக்க வைத்தாள். பிறகு பானையிலிருந்த தண்ணீரை மொண்டு குடித்தாள். பின் கழுத்திலும், நெற்றியிலும் மினு, மினுத்த வியர்வையை முந்தானையில் துடைத்துக் கொண்டே அவனிடம் வந்தாள். "அண்ணா நீங்கதான் புதுசா இந்த வீட்டுக்கு குடி வந்திருக்கீங்களா?'' அவனுக்கு இன்னும் பேச்சு வரவில்லை. தலையை மட்டும் ஆட்டினான். "போன மாசவரைக்கும் எங்கண்ணன் தான் இந்த வீட்டில குடி இருந்தாரு. நான் மாசா, மாசம் இங்க வந்து ஜவுளி ஏலம் எடுத்துட்டுப் போவேன். ஏலம் எடுக்க போவும் போதெல்லாம் அண்ணன் கிட்டதான் பிள்ளையை விட்டுட்டுப் போவேன். இன்னைக்கு ஏலம் விடுற நாளு. காலை பத்து மணிக்குள்ள நான் போவணும். அண்ணன் கொடுத்த புது அட்ரஸ எங்கேயோ போட்டுட்டேன். இனி அத தேடிக்கிட்டு இருந்தா ஏல நேரம் முடிஞ்சிடும் நீங்களும் என் அண்ணன் மாதிரிதான். கொஞ்ச நேரம் உங்க மருமகனை பாத்துக்கோங்க. நான் இதோ போனதும் ஏலத்தை முடிச்சிட்டு வந்துரேன் என்றவள் ஒரு பால் பாட்டிலை எடுத்து அவன் கையில் திணித்து விட்டு புள்ள முழிச்சி அழுதா இந்த பாலைக் கொடுங்க! என்ற வாறே வெளியேறினாள். அழகு ராசு இன்னும் திகைத்து தான் நிற்கிறான். அவன் வாழ்க்கையில் இப்படியொரு இனிய அதிர்ச்சி நடந்ததே இல்லை. இது கனவா, நிஜமா? நிஜம் தான் என்பதற்கு சாட்சியாக அந்த பிள்ளையும் வந்த பெண்ணின் தலையிலிருந்து உதிர்ந்த இரண்டொரு மல்லிகைப் பூக்களும் கிடந்தன. அவன் மெல்ல போய் தூங்கும் பிள்ளையின் அருகில் உட்கார்ந்தான். காலையும், கையையும் பரத்தி போட்டுக் கொண்டு பெரிய பூவாக தூங்கிக் கொண்டிருந்த அந்த குழந்தையைப் பார்க்கையில் அழகாகவும், மனதிற்கு சுகமாகவும் இருந்தது. தூக்கத்திலேயே குழந்தை சிரித்தது. உதடு பிரிந்து சிவப்பு ஈறு தெரிய குழந்தை சிரித்த அழகில் அவன் சொக்கிப் போனான். இப்படி கூட ஒரு அழகும், ஆச்சரியமும் உலகில் இருக்கிறதா? சிரித்த அதன் அழகை அவன் ரசித்துக் கொண்டிருக்கும் போதே மூக்கு துடிக்க உதடு கோணலாகி அழ ஆரம்பித்தது. ஒரே ஒரு நிமிஷம்தான். மீண்டும் தூக்கம் குழந்தையை ஆக்ரமித்துக் கொண்டது. இப்போது குழந்தைக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. அவன் தன் வேட்டியின் முனையால் துடைத்தான். அவன் துடைப்பு அதன் பூ உடலை அழுத்தியிருக்க வேண்டும். சட்டென கண்ணை விழித்து அவனைப் பார்த்தது. அதன் முகம் முழுக்க மகிழ்ச்சியும், பூரிப்பும் ததும்ப, அழகு ராசு திகைத்துதான் போனான். இத்தனை அழகையும், மகிழ்ச்சியையும் அவன் பார்த்ததே இல்லையே. அவன் பார்த்ததெல்லாம் முரட்டு ஆட்கள். முரட்டு அடிகள், முரட்டுத் தனமான ஆவேசம். ஆட்கொள்ளல் இத்தனை வெளிச்சத்துடன் அவன் பகலையே பார்த்ததில்லை. பகல்கூட இருட்டாகத்தான் அவனுக்கு இருந்திருக்கிறது. வெளிச்சங்கள் அவன் கண்ணை மட்டுமல்ல. உடம்பையும் கூச வைக்கும். கொள்ளையனாக மாறியதில் எந்த நேரமும் திடுக்கிடும் நெஞ்சோடு வன்முறையில் ஈடுபட தயாராகிக் கொண்டிருப்பான். இந்த அனுபவம் புதுசு. வெளிச்சமே குழந்தையாக வந்து படுத்திருப்பது போல் அந்த வீடு பளிச்சென்றிருந்தது. மீண்டும் குழந்தை புரண்டு படுத்து விழிகளை மலர்த்தியது. சுத்தமான பாலிற்குள் கருந்திராட்சையை போட்டது போல் அதன் பார்வை பளீரிட்டன. அவனைப் பார்த்த அதன் இமைகளில் கூட சிரிப்பு நிரம்பி வழிந்தது. பிறகு அங்கும், இங்குமாக மிரண்டு விழித்துப் பார்த்தது. அதன் தாயை தேடுகிறது போலும். அவன் குழந்தையின் முகத்தை அனு, அனுவாய் ரசித்துக் கொண்டிருக்கும் போதே அது கை, கால்களை உதறி அழ ஆரம்பித்து விட்டது. அதன் அழுகை கூட அவனுக்கு இனிமையாய் இருந்தது. வாரி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். உடம்பெல்லாம் சிலிர்த்துப் போக நெஞ்சு வழியாக குளிர்ந்த தென்றல் இறங்கியது போல் அவன் பரவசமானான். குழந்தை அவன் முகத்தையே சற்று நேரம் பார்த்து விட்டு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டது. ஒரு நிமிஷம் என்ன செய்வது என்று தோன்றாமல் விழித்தவன் பிறகு பால் பாட்டிலை எடுத்து அதன் வாயில் வைத்தான். பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையின் முகம் முழுக்க ஒரே சிரிப்பு, குறும்பு. கொஞ்சமாய் உதடு விலக்கி புர்ரென்று பாலை கொப்பளிக்க அழகு ராசு முகம் முழுக்க பால் சிதறல் குழந்தையின் உதட்டிலும் பால் வழிய... அவன் மயங்கிப் போய் விட்டான். மீண்டும் பாலை வாய்க்குள் திணித்துக் கொண்டு குடிப்பதாக பாவனை செய்து கொப்பளிப்பு. அழகு ராசு வாழ்க்கையில் முதன் முதலாக சந்தோசமும், மகிழ்ச்சியும் பொங்கியது. பால் பாட்டிலை வாங்கி கீழே வைத்துவிட்டு தண்ணீர் கொண்டு வந்து குழந்தையின் வாயைத் துடைத்தான். குழந்தை அவனிடமிருந்து இறங்கி வீடு முழுக்க தவழ்ந்தது. பிறகு தன் மழலை மொழியில் விளையாட பொருள் கேட்டது. சுவரோரமாகக் கிடந்த கத்தியை நோக்கி தவழ அழகு ராசு அவசரமாக சென்று கத்தியை எடுத்து மறைத்து வைத்தான். இப்போது வீடு வெறுமையாக கிடந்தது. குழந்தை சுற்றும், முற்றும் பார்த்து மீண்டும் கை நீட்டியது. அதற்கு விளையாட ஏதாவது ஒன்று வேண்டும். ஒரு திருடனின் வீட்டில் குழந்தைக்கு விளையாட என்ன இருக்கும்? ஏதாவது அழகான பொம்மை வாங்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. வெறுமையாகிப் போன சிகரெட் பெட்டியை எடுத்து குழந்தையின் கையில் கொடுக்க குழந்தை அதை வீசி எறிந்து விட்டு கை தட்டி சிரித்தது. அவனும் ஒரு குழந்தையாக மாறி தவழ்ந்தவாறே பெட்டியை எடுத்து குழந்தையிடம் எறிவான். இப்படியே கொஞ்ச நேரம் விளையாட்டு தொடர்ந்தது. குழந்தை களைத்துப் போயிருக்க வேண்டும். அதன் முகத்தில் சிணுங்கல் தெரிந்தது. அழகு ராசு ஓடி வந்து குழந்தையை வாரி அணைத்து தோளில் போட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் குழந்தை தூங்கிப் போனது. தோளில் ஒரு பூ சுமையாக உடம்பையே சுத்தப்படுத்திக் கொண்டிருந்த குழந்தையை கீழே விட மனமில்லாமல் அவன் நடந்து கொண்டிருந்த போது அவள் உள்ளே வந்தாள். "என்ன அண்ணா ரொம்ப படுத்திட்டானா. ஏலம் இப்பத்தான் முடிஞ்சிச்சு. சரக்க அப்படியே லாரில ஏத்திட்டு வாரேன். அழகு ராசு திடுக்கிட்டு திரும்பினான். ஓ... கதவை திறந்தே வைத்திருக்கிறான் போலிருக்கிறது. அவன் வீட்டு கதவு திறந்திருப்பது கூட இது தான் முதல் தடவை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org