Sonntag, März 28, 2004
அடுத்தவர் பிரச்சனையில் தலையிடலாமா???
----------------------------------------------------------
த ன் வீட்டில் ஆயிரம் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அடுத்தவன் வீட்டுப் பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று எம்மத்தியில் அதிகம் என்றே சொல்ல வேண்டும். சுட்டு விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக்காட்டுதடா எத்தனை யதார்த்தமான உண்மை. இதை உணர்ந்தே தவறிழைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் நம்மவர்கள்.
இப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் சமூகத்துக்கே பயந்து வாழ வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் உள்ள பெண்கள் திருமணவயதைத் தாண்டிவிட்டால் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறாள் என்பது சமூகத்தின் கண்களில் ஒரு கேள்வியாகவே இருக்கிறது. ஏன் எதற்கு என்று ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். ஒரு பெண் திருமணம் செய்யாமலிருப்பாளானால் அவள் குடும்பத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கலாம். அவள் குடும்பத்தினர் அதைப்பற்றி அக்கறை கொள்வார்கள். அவள் மீது அக்கறை காட்டவென்று அவள் குடும்பத்தார்கள் இருப்பார்கள்.
வீட்டுப்பிரச்சினைகளை மையமாகக் கொண்டு திருமணமே வேண்டாம் எனும் பெண்கள் இருப்பார்கள். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களிடம் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று அவர்களிடமே கேட்டு அவர்கள் மனநிலையை நோகடிக்கும் பலர் நம்மிடையே இல்லாமல் இல்லை. சிலர் திருமணம் செய்யாமலிருப்பவர்களைப் பார்த்து நேரடியாகவே வயதைக் கேட்டுவிடுவார்கள். ஒரு சிலர் எத்தனையாம் ஆண்டு உயர்தரம் எழுதினீர்கள் என்று நாசூக்காக கேட்பார்கள்.
ஒவ்வொரு குடும்பங்களிலும் பல்வேறு பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அதிலும் பெண்களின் பிரச்சினைகள் என்றால் சொல்லில் அடங்காது. சீதனம், சீர்வரிசை, மாமியார் கொடுமை, பெண் அடிமை என்று பல்வேறுபட்ட பிரச்சினைகளில் சிக்கித்தவிப்பவள் அவள். பெண்களை மட்டுமல்ல அடுத்தவர்களைப்பற்றியோ அவர்களின் சொந்த விடயங்கள் பற்றியோ ஆராய்ந்து பார்ப்பது முறையல்ல.
நம் வீட்டில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அடுத்தவர் பிரச்சினைகளை ஆராய்வது நியாயமா?
ஒரு குடும்பத்திலுள்ள பிரச்சினைகளை விலாவாரியாக தெரிந்து கொண்டு அதை இன்னும் நான்கு பேரிடம் சொல்லி ஊர்முழுவதும் அந்தப்பிரச்சினையை காவித்திரியும் மனிதர்களும் இந்த சமூகத்தில் இல்லாமலில்லை. இது அவர்கள் பொழுது போக்காகவும் இருக்கிறது.
இவர்களை நினைத்தால் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. தங்களுக்கும் குடும்பம் என்ற ஒன்றிருக்கிறது, பிள்ளைகள் இருக்கிறார்கள்.
நாம் அடுத்தவரைப் பற்றி கதை அளந்தால் நம் பிள்ளைகளையும் நாளை அவர்கள் கதைப்பார்கள் என்று அறியாமல் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்பத்திலுள்ளவர்கள் உறவினர்கள் வீட்டுப்பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு இந்த பிரச்சினைகளாலேயே திருமணம் தள்ளிப் போகிறது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் சமூகத்தாருக்குத்தான் அது பெருங்கஷ்டமாக இருக்கிறது. உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடமுடியாதல்லவா.
தங்கள் வீட்டுப்பிரச்சினைகளை முதலில் சீர்படுத்திக் கொள்ள தெரியாதவர்கள் அடுத்தவர் பிரச்சினை பற்றி விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். படிக்காதவர்கள் இப்படி முட்டாள்தனமாக செயல்பட்டால் பரவாயில்லை. படித்தவர்கள் கூட இப்படி செய்கிறார்கள் என்று எண்ணும் போது வருத்தமாக இருக்கிறது.
வீட்டுக்கருகிலிருக்கும் மிகவும் நெருங்கிய அயல்வீட்டுக்காரர்கள் கூட வீட்டுக்குள் நுழைந்து நம்வீட்டுப் பிரச்சினைகளை இன்னும் நாலுபேருக்கு சொல்கிறார்களே! எப்படிப் பட்டவர்கள்?
வேலை வெட்டி இல்லாமல் அடுத்தவரின் குறைகளைக் கதைக்கும் மனிதர்களே. உங்கள் குறைகளை இன்னும் சிலபேர் கதைத்துக் கொண்டிருக்கலாம். அடுத்தவரைப் பார்த்துச் சிரிக்காதீர்கள். உங்களையும் பார்த்து ஊர்சிரிக்கலாம்.
ஏன் இப்படி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அடுத்தவரைப் பற்றி பரிகாசிக்கத்தான் உங்களால் முடிகிறது. அவர்களுக்கு உதவமுடிகிறதா? இல்லையே! இந்த தீய செயல்களை முடியுமானவரை நிறுத்திக் கொள்ளுங்கள்.
பிறரிடம் குறைகளைக் காண்பவன்தான் பெரிய அறிவாளி என்று எண்ணிக் கொள்கிறான். தன் குறைகளைப்பற்றி என்றுமே சிந்திக்காத அவன்தான் அறிவீனன் என்கிறான் சாக்ரடீஸ். ஆம் இன்று நம்மிடையே உலவித்திரிபவர்களில் பாதிப்பேர் அறிவீனர்கள் தானே!
முதலில் நீ உன்னைத்திருத்திக் கொள் சமூகம் தானாய் திருந்திக்கொள்ளும். இவையெல்லாம் சொல்லளவில் மட்டுமே! செயலளவில் நடைபெறக்காணோம். எத்தனைதான் நல்லவைகள் நம்மிடையே இருக்கும் போதும் தீமைகளை செய்ய முன்வந்து கொண்டிருக்கிறார்கள் சிலர்.
நமக்கென்று செய்வதற்கு எத்தனை கடமைகள் காத்திருக்கின்றன. நல்லதையே செய்வோம் நல்லதையே காண்போம், நல்லதையே நினைப்போம். என்று அறிஞர்கள் மொழிந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் செய்கிறார்களா என்று பார்த்தால் இல்லை என்ற பதிலே விடையாக கிடைக்கிறது.
தயவு செய்து அடுத்தவர்கள் வாழ்வில் மூக்கை நுழைக்காதீர்கள். நீங்கள் மூன்றாம் மனிதர்கள் வீட்டுக்கு வீடு வாசற்படி போன்று பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். அந்தப்பிரச்சினைகள் அவர்களுடையது. உங்களுடையதல்ல ஏன் நீங்கள் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டும்.
எந்த ஒரு மனிதனிடமும் குறைகள் இல்லாமலில்லை. உன்னிடமுள்ள குறைகளை மறைத்து அடுத்தவரின் குறையை பெரிதாக எண்ணாதே. உன் குறையையும் உன் பின்னால் சிலர் தேடிக் கொண்டிருப்பர். அடுத்தவர்களுக்கு உதவமுடியாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமலிருப்பதுவே அழகு!
ஒரு வீட்டில் பிரச்சினை என்றால் அதற்கு கண், காது வைத்து பிரச்சினையை பெரிதாக்கி கதை அளக்கும் மனிதர்களே கொஞ்சம் பொறுங்கள். எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்கின்றனவே அவற்றுக்காக உங்கள் பொன்னான நேரத்தை செலவிடலாமே! அடுத்தவர் பிரச்சினைகளுக்கு உங்களால் தீர்வு காணமுடியுமா? முடியுமென்றால் உதவுங்கள் இல்லையேல் விலகிக் கொள்ளுங்கள்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்