<$BlogRSDUrl$>

ஈழம் --------- . சிறீ லங்கா (முன்னை நாளில் வெள்ளையர்களால் 'சிலோன்' என அழைக்கப்பட்டது) அல்லது தமிழில் இலங்கை, ஈழம் என அழைக்கப்படுவது இந்தியாவிற்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு. இது இந்தியாவிலிருந்து ஷபாக்கு நீரிணை| மூலம் பிரிக்கப் பட்டுள்ளது. அதன் ஒடுங்கிய பகுதியின் நீளம் 22 மைல்கள் அல்லது 35.2 கிலோ மீற்றர்கள். இலங்கை அகலாங்குகளில் ஆறு பாகைக்கும், பத்து பாகைக்குமிடையிலும், நெட்டாங்குகளில் எழுபத்தியொன்பது பாகைக்கும், எண்பத்தியொரு பாகைக்குமிடையிலும் மத்திய கோட்டிற்கு மிக அண்மையிலும் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 25,332 சதுர மைல்கள், அதிலும் தமிழர்கள் தனிநாடு கோரி (தமிழீழம்) சுதந்திரப் போராட்டம் நடாத்தும் பகுதி அல்லது தமிழர்கள் வாழும் பகுதி 7,290 சதுர மைல்கள், சிங்களவர்கள் வாழும் பகுதி 18,042 சதுர மைல்கள். இலங்கையின் சனத்தொகை 1990களில் 17,103,000 அதில் சிங்களவர்கள் 12,656,000, தமிழர்கள் 3,113,000, முஸ்லிம்கள் (பெரும்பாலானோர் தமிழ் பேசுபவர்கள்) 1,214,000 ஏனையவர்கள் 120,000. இலங்கையில் தமிழர்கள் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்கிறார்கள் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றி ஆனால் இன்று மட்டும் பேசப்பட்டு வரும் உலகின் மிகப் பழமை வாய்ந்த ஐந்து மொழிகளுள் தமிழும் ஒன்று. பண்டைய தமிழ் இலக்கியங்கள், முன்னோர்களால் கிறிஸ்துவிற்குப் பின் ஒன்று தொடக்கம் நான்காம் நூற்றாண்டுகள் வரையிலான காலப் பகுதிகளில் சங்கங்கள் வைத்து வளர்க்கப்பட்டதால் 'சங்ககால இலக்கியங்கள்' என அழைக்கப் படுகின்றன. இவை ஏறக்குறைய உலகில் 20 மெழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இலங்கையில் சிங்கள இனம், ஏறக்குறைய 2500 வருடங்களிற்கு முன் இந்தியாவின் மேற்கு வங்காள இளவரசனாகிய விஜயன் என்பவனின் வருகை மூலம் உண்டாகியது. இவன் தன்நாட்டில் செய்த சிறு பிழைக்காக நாடு கடத்தப்பட்டு ஒரு தோணி மூலம் இலங்கையை அடைந்தான். கிறிஸ்துவிற்குப் பின் ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மஹானாம எனும் புத்த பிக்கு எழுதிய மஹாவம்சம் எனும் நூலில் விஜயன் இலங்கையை அடைந்த அதே தினத்தன்றுதான் புத்தபகவான் ஞானோபதேசம் பெற்றார் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையில் சிங்கள இனத்தை உண்டாக்கிய இளவரசன் விஜயனின் வருகைக்கு முன்னர் அதாவது கிறிஸ்துவிற்கு முன் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் மிகப் பாரிய அளவிலான குடித்தொகையைக் கொண்ட ஓர் இனம் வாழ்ந்ததற்கான சான்றுகள் வரலாறுகளிலும், தொல்பொருள் ஆராய்ச்சிகளிலும் நிரூபிக்கப் பட்டுள்ளன.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
காதல் முப்பது நாள் மோகமா??? --------------------------------------- நடராஜனுக்கு காதோரமெல்லாம் நரைத்து விட்டது. கண்ணாடியும் அணிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார். அவருக்கும் விஜயாவுக்கும் திருமணம் முடித்து முப்பது வருடங்களாகிவிட்டன. இந்த முப்பது வருட நீண்ட நெடிய இல்லறவாழ்வில் எத்தனை எத்தனை மேடுபள்ளங்களை, இன்பதுன்பங்களை அவர்கள் சந்தித்து விட்டார்கள்? இகழோ புகழோ பொருட்படுத்தாது, இன்பமோ துன்பமோ இணைபிரியாது, ஊணையும் உணர்வையும் உள்ளடக்கி தொடர்ந்த அன்பான காதல் வாழ்வல்லவா அவர்கள் வாழ்ந்த வாழ்வு. இத்தகைய உயரிய வாழ்வை அவர்கள் வாழ்ந்ததற்கு காரணம் அவர்களுக்குள் இருந்த காதலும் மோகமுமா அல்லது நடராஜன் செய்து கொடுத்த சத்திய வாக்கின் மேல் அவர்கள் கொண்ட உறுதியா என்பது விவாதத்துக்கு உரிய பொருளல்ல வாழ்ந்த வாழ்வு எத்தகைய முக்கியத்துவம் பெறுகின்றதோ அத்தகைய முக்கியத்துவத்தை அந்த சத்தியமும் பெறவே செய்கின்றது. பூமியில் ஓங்கி அடித்து நடராஜன் செய்து கொடுத்த சத்தியம் இன்றும் கூட கனலாக, தனலாக அவர்கள் நெஞ்சங்களில் ஒளிவீசிக்கொண்டுதானிருக்கிறது. விஜயாவுக்கு ஒரு சின்ன ஆசை. தங்கள் முப்பதாவது வருட திருமண தினத்தை சின்னண்ணா வீட்டில் வைத்துக்கொண்டாட வேண்டுமாம். சின்ன ஆசைதான். ஆனால் வெளிநாட்டில் வாழும் அவர்களுக்கு விமான டிக்கட், போக்குவரத்து செலவு என்று பல இலட்சங்களை விழுங்கிவிடும் செலவல்லவா அது! எத்தனை இலட்சங்கள் போனால் தானென்ன; ஒரு சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக போகவேண்டிய பயணம் தான் அது. நிச்சயமாக இந்த பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டுமென்று இருவரும் தீர்மானித்தார்கள். கடல் தாண்டி, மலை தாண்டி, பல நாடுகள் தாண்டி செல்லும் அந்த நீண்ட பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்கள். முப்பதாவது வருட திருமணநாளை அங்கு வந்து கொண்டாடப்போவதாக சின்னண்ணாவுக்கும் டெலிபோன் செய்து கூறிவிட்டார்கள். அவர் அதை கேட்டதும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டார். மோகம் என்பது இழிந்த குணமா? மோகம் என்றால் கேவலாமான உணர்வா? அப்படித்தான் எங்கள் சமுதாயத்தில் கற்பிக்கப்படுகின்றது. ஆனால் மோகம் அற்புதமான ஓர் உணர்வு. விடுபட முடியாத விருப்பம். மனதை வசீகரிக்கும் இனிமை. ஒரு மோகனப்புன்னகையை புறந்தள்ளி விடமுடியுமா? ஒரு மோகனமான மாலைவேளையை ரசிக்காமல் இருக்கமுடியுமா? ஒரு மோகனகுரலால் ஆகர்ஷிக்கப்படாமல் இருந்துவிடமுடியுமா? அதேபோல காதலால் ஈர்க்கப்பட்ட பெண்ணிடம் ஏற்படும் மோகத்தை தவிர்த்துவிட முடியுமா? விஜயாவை நடராஜன் விரும்பியதும், காதலித்ததும் உண்மைதான். அதற்காக எத்தனைபேர் எத்தனை விதமாக வியாக்கியானங்கள் செய்தார்கள். முக்கியமாக விஜயாவின் குடும்பத்தில் அவனை அசிங்கப்படுத்தி பேசாதவர்களே இல்லை. ""அவன் மூஞ்சிக்கும் மொகரகட்டைக்கும் காதல் கேக்குதோ காதல்? செருப்பால அடிக்கணும்' இது விஜயாவின் ஒரு அக்கா. ""அவன் என்ன ஜாதியோ என்ன குலமோ எங்க குடும்ப பொண்ணை புடிச்சிக்கப்பாக்குறான். இது அந்த அக்காவின் புருஷன். காலமெல்லாம் கன்னியாவே இருந்து செத்துபோனாலும் பரவாயில்லை; என் தங்கச்சியமட்டும் அவனுக்கு கட்டிகுடுக்கமாட்டேன். ""இது வெஞ்சினத்தோடு விஜயாவின் பெரியண்ணா கொட்டிய வார்த்தைகள். இப்படி அமிலமாக வார்த்தைகளைக் கொட்டியவர்கள் அந்த இளம் நெஞ்சங்களின் காதலை வேரோடு வெட்டிச் சாய்க்கும் எண்ணத்தோடு பல நடவடிக்கைகளை எடுக்கவும் தொடங்கினார்கள். விஜயா அவள் வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டாள். சிறை காவலாளிகளாக அம்மாவும் பாட்டியும் . வயலின் கிளாஸ், டியூஷன் கிளாஸ், கோவில் வழிபாடு எல்லாமே நிறுத்தப்பட்டன. அவள் வைராக்கியம் கொண்டவள். யாவற்றையும் மௌனமாக தாங்கிக்கொண்டாள். உண்மையான காதல் எந்த சோதனைகளையும் தாங்கும். எந்த தடைகளையும் எதிர்கொள்ளும். காலம் கனியும்வரை காத்திருக்கும். இருண்டவானின் மின்னல் கீற்று போல சின்ன அண்ணா. விஜயாவை புரிந்துகொண்டு கொஞ்சம் ஆறுதலாக துணை நின்றார். வீட்டில் நடக்கும் அநீதிகளையும் அட்டகாசங்களையும் அவர் அறிந்திருந்தாலும் பெரியண்ணாவை எதிர்த்து எதுவுமே செய்து விடமுடியாத இயலாமை. அந்த வீட்டில் எப்போதும் பெரியண்ணாவின் சர்வாதிகார ஆட்சிதான். அவரை எதிர்த்து அல்லது அவரது எண்ணத்துக்கு மாறாக எதுவுமே செய்ய யாராலும் முடியாத ஒரு துணிவின்மை. அம்மா, அக்காமார் மட்டுமல்ல மைத்துனர்கள் கூட அவருக்கு அடக்கமாக இருந்தது ஒரு வித்தியாசமான நிலை தான். இவ்வளவுக்கும் பெரிய அண்ணா அப்படியொன்றும் பெரிய சாமர்த்தியசாலியும் அல்ல; பெரிய உழைப்பாளியுமல்ல. குடும்பத்துக்காக எதையும் செய்தவரும் அல்ல. அப்படியிருந்தும் அவருக்கு அத்தனை பேரும் அடங்கி கிடந்தது விசித்திரமான போக்குதான். அவர் உட்கார் என்றால் அந்த குடும்பமே உட்கார்ந்தது; நில் என்றால் எழுந்து நின்றது. யாரும் அவரை ஏன் என்று கேள்வி கேட்டதில்லை. *** உள்ளுக்குள்ளே கனன்று கொண்டும் கொதித்துக்கொண்டுமிருக்கும் எரிமலை வீறிட்டு வெளியில் சீறிப்பாய்வதைப்போல ஒரு நாள் சின்னண்ணா சீறி விட்டார். ஒரு கட்டத்துக்குமேல் தங்கை அனுபவித்துக் கொண்டிருக்கும் சிறைவாழ்வும், கொடுமைகளும் அவரை துணிந்து பெரியண்ணாவிடம் பேசவைத்து விட்டது. ""நடராஜன் அப்படியொன்றும் மோசமானவன் கிடையாது. அவன் குடும்பமும் சமுதாயத்தில் மதிப்பான குடும்பம் தான். விஜயா அவனை கட்டிக்கிட்டா நல்லாவே வாழ்வாள். நீ நெனைக்கிற மாதிரி அவ ஒன்னும் சீரழிஞ்சிபோயிரமாட்டா..''என்று பெரியண்ணாவிடம் முகத்துக்கு நேராகவே கூறிவிட்டார். இப்படி பெரியண்ணாவிடம் பேசுவதே அந்த குடும்பத்தை பொருத்தவரை ஒரு புரட்சிதான். தன் தம்பியிடமிருந்தே இப்படி ஒரு எதிர்ப்பு வருமென்று பெரியண்ணா எதிர்பார்த்திருக்கவே மாட்டார். அவரது சோடா போத்தல் கண்ணாடிக்குள் இருந்து மினுமினுத்த விழிகள் இரண்டும் சிவக்கத் தொடங்கின. இரத்தம் கொதிக்கத் தொடங்கியது. ""ஓகோ, இப்போது நீ பெரிய மனுஷனாகீட்டியா....! தங்கச்சிக்காக நீ ஒன்றும் வக்காலத்து வாங்கவேண்டாம்... யாருக்கு எப்ப என்ன செய்யனும்னு எனக்கு நல்லாவே தெரியும். உன் வேலை என்னவோ அதை மட்டும் நீ பார்த்துக்கிட்டõபோதும்....பெரியண்ணா கோபத்தில் கர்ஜித்தார். உள் அறையில் அம்மா, அக்காமõரெல்லாம் மறைந்திருந்து அண்ணாவின் ஆவேச கூச்சலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாருக்குமே அறையில் இருந்து வெளியே வர தைரியம் வரவில்லை. விஜயா அறையின் மூளையில் அமர்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள். அம்மா கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு, ""எல்லாம் இவளால் வந்தசோதனை .....''என்று விஜயாவின் முகத்தில் ஒரு இடி இடித்தாள். ""அண்ணா சும்மா கூச்சல் போடாதே....தங்கச்சியும் படிச்சவதான். அவளுக்கும் நல்லது கெட்டது நல்லா தெரியும். அவ விரும்புற ஆளை கட்டிக்கிற ரைட்ஸ் அவளுக்கு இருக்கு....எப்படியோ நாளைக்கு அவள நாம யாரோ ஒருத்தனுக்கு கட்டி குடுக்கத்தானே போறோம்..? அந்த யாரோ ஒருத்தன் ஏன் அவ விரும்புற நடராஜனா இருக்கக்கூடாது..'' சின்னண்ணா பொறுமையாகச் சொன்னார். ""நான் இவ்வளவு தூரம் சொல்லிக்கிட்டிருக்கேன், நீ என்ன பேசுற? நாலு புத்தகம் படிச்சிட்ட திமிர்ல பேசுறியா? நடராஜன் தங்கச்சிக்கு தாலி கட்டுறதுனா என் பொணத்து மேல நின்னுதான் தாலி கட்டணும்...'' பெரியண்ணா கண்கள் சிவக்க, நரம்புகள் புடைக்க ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். சின்னண்ணா பதிலே சொல்லாமல் விறைத்துப்போய் நின்றார். வெளியே போயிருந்த ஒரு அக்காவின் கணவர் அப்போது தான் வீட்டுக்கு வந்தார். அவருக்கு வீட்டில் நடந்து கொண்டிருந்த பிரச்சினை ஓரளவுக்கு புரிந்தது. கடந்த ஒரு மாதமாக அந்த வீடு இந்த ஒரு பிரச்சினையால் தான் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது என்பது அவர் அறிந்தது தான். அத்துடன் அவருக்கு ஒரு தம்பி; அவனை எப்படியும் விஜயாவுக்கு கட்டிவைத்துவிட வேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தார். சொத்துள்ள குடும்பம் . எவனோ ஒரு அந்நியன் மைத்துனியைக் கட்டிக்கொண்டால் சொத்தில் பங்கு கேட்டு விடுவானோ என்ற பயம் வேறு. தன் தம்பிக்கே கட்டி வைத்துவிட்டால் சொத்துக்கள் பிரிக்கப்படும் காலங்களில் அது வெளியே போய்விடாது. தம்பியும் கூட தன் பேச்சை கேட்டு அடக்க ஒடுக்கமாக இருப்பான் என்ற நம்பிக்கை. தேவைப்படும் போது தம்பியையும் கூட இழுத்துப்போட்டு, அவனுக்கு கிடைக்கும் பங்கை பயன்படுத்தி தனது வியாபாரத்தை விருத்தி செய்துகொள்ளலாம் என்ற தந்திர கணக்கு வேறு. ""என்ன மச்சான் , விஜயா என்னதான் சொல்றா?'' ""அவ என்னத்த சொல்றது, கழுதையை கட்டுண்ணு சொன்னாலும் கட்டிக்கிட்டு வாழவேண்டியது தான். அதவுட்டுபுட்டு காதலும் கத்தரிக்காயும்....'' பெரியண்ணா வெறுப்பை உமிழ்ந்தார். ""என்ன ஜாதியோ என்ன கொலமோ, அவனை போயி காதலிக்கிறாளாம்... குடும்பத்துக்கே கேவலம்'' மச்சான் கொக்கரித்தார். ""அவ என்னவாச்சும் சொல்லிட்டுப் போவட்டும், நீங்கள்லாம் சேர்ந்து ஒரு நல்ல மாப்பிள்ளையா பாருங்க. நிச்சயதார்த்தத்தை சட்டுபுட்டுன்னு வச்சிறலாம்'' அம்மா அறையைவிட்டு வெளியே வந்து அண்ணாவிடம் குசுகுசுத்தாள். ""அதுதான் நல்லது''... மச்சான் ஆமோதித்தார். ""அவள வீட்ட விட்டு எங்கயும்போகவிடாமே பாத்துக்கங்க...மத்த ஏற்பாடுகள நான் பாத்துக்கறேன்.'' பெரியண்ணா தீர்மானமாக சொன்னார். சின்னண்ணா குனிந்த தலை நிமிராமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். அவர் கண்களில் நீர் வழிந்தது. அறைக்குள் இருந்த விஜயாவுக்கும் தான். *** விஜயாவுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்கள். அங்கிருந்தும் இங்கிருந்துமாக சிலவரன்கள் வரத்தான் செய்தன. ரொக்கமாக பல இலட்சங்கள், சில இலட்சங்களுக்கு நகை நட்டு என்று ஏகத்துக்கும் அவர்கள் கேட்டு நிற்க பெரியண்ணா திகைத்துத்தான் போனார். எந்த வேலையும் செலவில்லாமலே நடந்து விட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். வீட்டின் அத்தியாவசிய செலவுகளைக் கூட எண்ணி எண்ணி பார்த்துத்தான் செலவு செய்வார். அப்படியொரு கருமித்தனம் அவர் இரத்தத்திலேயே கலந்திருந்தது. மச்சான் கமுக்கமாக சிரித்துக்கொண்டார். இதெல்லாம் நடக்காத கதைகள், இப்படியெல்லாம் செலவு செய்து விஜயாவை கட்டி கொடுத்துவிட பெரிய மச்சான் மனது ஒத்துக்கொள்ளாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். பாம்பின் கால் பாம்பறியாதா? எப்படியோ தன் தம்பிக்கு எல்லாம் கூடி வரும் என்பதில் அவர் தெளிவாகவே இருந்தார். கடைசியாக வந்த வரன் அவர்கள் குடியிருந்த வீட்டையே எழுதிக்கேட்டபோது குடும்பமே அதிர்ந்து தான் போனது. இது தான் சரியான நேரம் என்பதை உணர்ந்த மைத்துனர் மெதுவாக தனது தம்பியின் அருமை பெருமைகளைப் பற்றி ஒரு ஓலையை வாசித்தார். அவர் செய்த பரிந்துரை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் படியாகவும் சுமுகமாகவும் தோன்றியது. தம்பி எதுவுமே கேட்காத போதும் கூட மைத்துனரின் எதிர்கால கனவு தெளிவானதாகவும் அவருக்கு மட்டுமே புரிந்த கணக்காகவும் இருந்தது. என்னதானிருந்தாலும் வியாபாரியான அவர் எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய சொத்து சுகங்களை அனுசரித்து அதே வியாபார தந்திரங்களுடன் காய் நகர்த்தினார். எல்லாமே அவர் இஷ்டப்படியும் பெரியண்ணாவின் சம்மதத்துடனும் நடந்து கொண்டிருந்தன. ஒரு நல்ல நாளாகப் பார்த்து பெண் பார்க்கும் படலத்தையும் வைத்திருந்தார்கள். விஜயா கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள். சின்னண்ணா, எப்படி இந்த விரும்பாத திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்துவது, தங்கை விரும்பிய வாழ்வை ஏற்படுத்திக்கொடுப்பது என்று மௌனமாகவே கொந்தளித்துக்கொண்டிருந்தார். ஒரு பெண்ணின் வாழ்வை அவள் சம்மதம் இன்றி வீட்டின் ஆண்களே தீர்மானித்துவிடும் கொடுமை காலங்காலமாக நடந்து வரும் ஆணாதிக்க திமிரின் விளைவுதான். அதற்கு பலியாகாமல் இருக்க விஜயா மட்டும் என்ன விதிவிலக்கா! ஆமாம்; விதிவிலக்காக இருக்கத்தான் அவள் விரும்பினாள். நடராஜன் மேல் அவள் கொண்ட காதலும் அந்த காதலில் அவள் கொண்ட உறுதியும் தன்னை வெற்றியடையச் செய்யுமென அவள் திடமாக நம்பினாள். சின்னண்ணாவும் நடராஜனும் அடிக்கடி சந்திக்கும் ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ""நடராஜ் , எங்க அண்ணனுக்கு ஒன்னய கொஞ்சம் கூட பிடிக்கலை; நீ எந்தகாலத்துலயும் நல்லதொரு குடும்பஸ்தனாக வாழமாட்டியாம். நீ என்னதான் படிச்சவனா, புத்திசாலியாக இருந்தாலும் கூட உனக்கு கெட்ட சகவாசங்கள் அதிகமாம். ஒனக்கு தங்கச்சிய கட்டிகுடுக்கிறதும் சரி, கெணத்துக்குள்ள தள்ளி கொலைசெய்றதும் சரிங்கிறார்.'' ""ஒங்க அண்ணனுக்கு மனுஷர புரிஞ்சுக்கிற அறிவு ரொம்பவும் குறைவு அவருக்கு எதுவுமே சுயமா சிந்திக்கவே தெரியாது. எந்த சாமர்த்தியமும் கெடையாது. ஏதோ அப்பனும் பாட்டனும் சம்பாதிச்சி வச்சிட்டு போன சொத்து சொகத்த அனுபவிச்சிக்கிட்டு, வீட்டுக்குள்ள ஒரு சர்வாதிகார ஆட்சி நடத்திக்கிட்டிருக்காரே தவிர பாடு பட்டு பத்து சதம் சம்பாதிக்கிற துப்பு இருக்கா....? ஏதோ நான் ஒங்க தங்கச்சி மேல ஆசை வச்சிட்டேங்கிறதுக்காக துள்ளி குதிச்சி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டிருக்காரே தவிர அவரால் அந்த தங்கச்சிக்கு ஓர் நல்ல வரனா பார்த்து, சீர் செணத்தி செலவுன்னு ஆயிரமாயிரமா செஞ்சி கட்டிக்குடுக்கிற பெரியமனசு இருக்கா?...ஏதோ பத்து நாட்டு இளவரசர்களும் சுயவர மண்டபத்தில் காத்துக்கிட்டிருக்கிறது போலவும் இவரு கை காட்டுற இளவரசனுக்கு தங்கச்சி மாலை போடனுங்கிற மாதிரியும் கனவு கண்டுகிட்டிருக்கார்.'' ""என்னவோ நடராஜ் , அண்ணன எதிர்த்துக்கிட்டு, அவரு சம்மதமில்லாமே இந்த கலியாணத்த எப்படி நடத்துறதுன்னு தான் புரியல்ல'', அந்த கவலையெல்லாம் ஒனக்கு வேண்டாம். விஜயாவும் நானும் உயிராக நேசிக்கின்றோம்; அது ஒன்னுதான் முக்கியம். இந்த நேசிப்பே எங்களை வாழ வைக்கும். எல்லோருமா சேர்ந்து ஆசீர்வாதம் செய்து எங்கள் கலியாணத்தை நடத்தி வைப்பீங்கனா ரொம்ப சந்தோஷமா நாம வாழ்க்கையை ஆரம்பிப்போம்; இல்லைனா கூட யாருடைய ஆசிர்வாதமுமே இல்லாமே கூட ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நல்வாழ்வை வாழ்ந்து காட்டுவோம்...'' ""நடராஜ் நீ ஒன்னுக்கும் அவசரப்படாமே இரு. அண்ணா மனம் மாறி சம்மதிச்சாலும் சம்மதிக்கலாம்''.... ""அதுமட்டும் நடக்காது, உன் அண்ணா வாழ்க்கையின் நுனிபுல்லை மட்டும் மேய்ந்தவர். அவருக்கு உள்ளங்களின் ஆழம் தெரியாது. காதலின் வலிமை புரியாது. அவர் இதுக்கு சம்மதிக்கவே மாட்டார்.'' ""இந்த கலியாணம் நடந்தா தங்கச்சி தனிமரமா ஆகிடுவா , யாருமே அவகூட ஓட்டு உறவு வச்சிக்க மாட்டாங்கனு அவரு சொல்றாரு...நடராஜ்'' ""தனிமரங்கள் பலது சேர்ந்துதான் தோப்பாகும். நாங்க தோப்பாக போறதையும் அவரு தனிமரமாபோவதையும் காலம் அவருக்கு காட்டும்....'' ""ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்?. உன் முப்பது நாள் மோகம் தீர்ந்ததும் நீ தங்கச்சிய நடுரோட்டுல வுட்டுட்டு ஓடிருவியாம்...''சின்னண்ணா கண் கலங்க சொன்னார். ""அப்படியா சொன்னாரு...? காதலைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? உண்மையான அன்பு செலுத்தும் இதயங்களை அவர் கண்டிருக்கிறாரா? மோகம் தீர்ந்து போனதும் அழிந்து போகும் காதலைத்தான் அவர் கண்டிருக்கிறார். உயிருக்கும்மேலான, உணர்வுகளுக்கு மேலான உயரிய காதல் ஒன்று இருப்பதை இனிமேல தான் அவர் தெரிந்து கொள்ளப்போகிறார். இதோ பாரு.... இதயத்துல ஆழமா எழுதிவச்சிக்கோ நானும் விஜயாவும் சேர்ந்து வாழத்தான் போகிறோம்; எங்க குடும்பத்தை பெரிய தோப்பாக்கி வளமா வாழத்தான் போறோம்....உன் அண்ணா சொன்ன அந்த மோகம் மட்டுமல்ல, காதலும் கூட முப்பது நாள் இல்ல முப்பது வருஷம் கழிந்தாலும் கொஞ்சங்கூட அழிஞ்சிடாமே நாங்க வாழ்ந்து காட்டுவோம்...முப்பது வருஷமானாலும் அழியாத ஆசையுடன், காதலுடன் மோகத்துடன் நானும் விஜயாவும் வாழ்ந்து காட்டுவோம்...இது சத்தியம்!....சத்தியம்...! சத்தியம்....!'' நடராஜ் வெறிகொண்டவன் போல பூமியில ஓங்கி ஓங்கி அறைந்து சத்தியம் செய்தான். கண்கள் சிவக்க, கழுத்து நரம்பு விடைக்க அவன் வேகமாக வெறிகொண்டவன் போல செய்த சத்தியத்தைக் கண்ட சின்னண்ணா சிலையாகி நின்றார். நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு சுபநேர சுபமுகூர்த்தத்தில் விஜயாவும் நடராஜும் குடும்பத்தினரின் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி அத்தனை தடைகளையும் தாண்டி மிகவும் உறுதியுடன் திருமணம் செய்து கொண்டார்கள். அம்மா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பினார். ""தங்கை விஜயாவுக்கு இப்படி ஒரு தைரியமா'' என்று அக்காமாரெல்லாம் வாயடைத்துப்போனார்கள். பெரியண்ணா கிடாரத்தில் இருக்கும் தண்ணீரை வாரி வாரி தலையில் ஊற்றிக்கொண்டார். *** முப்பது ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் அன்றைய நிகழ்வுகள் நேற்றைய நிகழ்ச்சிபோல பசுமரத்தாணியாக நினைவுகளில் பதிந்து விட்டது. ஓ...! காலம் தான் எத்தனை வேகமாக ஓடிவிட்டது. விமானம் தரை தட்டிய போதுதான் நடராஜன் கடந்த கால வாழ்வின் நினைவுகளில் இருந்து மீண்டார். பக்கத்தில் அமர்ந்திருந்த விஜயா புன்னகை பூத்தாள். அவருக்கு கணவரின் மன ஓட்டம் புரியாமலா இருக்கும்? இருவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்கள். காத்திருந்த ஒரு வாடகை வண்டி மூலமாக சின்னண்ணா வீட்டை நோக்கி பயணித்தார்கள். விஜயா மௌனமாக இறைவனுக்கு நன்றி தெரிவித்தாள். இது சாதாரண பயணமல்லவே! முப்பது ஆண்டுகளாக பூஜிக்கப்பட்ட ஒரு மகத்தான சத்தியத்தை, காலத்தை வென்ற காதலை, வசீகரமோகத்தை பறைசாற்றும் பயணமல்லவா! சின்னண்ணாவும் அவரது குடும்பத்தினரும் அந்த இலட்சிய தம்பதியினரின் வருகைக்காக வாசலில் ஆவலோடு காத்திருந்தார்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org